Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


இந்த ரஜாக்கர் குண்டர்கள் கிராமங்கள் முழுவதையும் எரித்தனர்; சூறையாடினர்; கிராமங்களிலுள்ள எல்லாவற்றையும் அழிக்கவும் செய்தனர். இவர்கள் நிஜாம் நவாப்பின் கூலி ஆட்களே. இந்த குண்டர்கள் கத்தி, கொடுவாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமல்லாது, நவீன துப்பாக்கிகளையும் (Rifles)  வைத்துக் கொண்டு கிராமங்களை சூறையாடினர்.


மக்கள் தங்களுடைய கிராமங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தாங்களாகவே மிகப் பெரும் அளவில் திரண்டனர். ரஜாக்கர் குண்டர்கள் தாக்க வருகின்றார்கள் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு ஒவ்வொரு கிராமத்திலும் "நகரா' என்ற சாதனம் உபயோகிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் காவல் படை (Sentries) நிறுவப்பட்டது. ரஜாக்கர்களின் வருகையை, இக்காவல் படை அறிந்தவுடனேயே "நகரா'வின் உதவி கொண்டு கிராமம் முழுவதையும் எச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டனர். உடனே கிராமம் முழுவதும் தற்காப்புக்காகத் திரளும். நகராவின் ஒலி கேட்டதும் சுற்றிலுமுள்ள கிராம மக்கள், தாக்கப்படும் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு ஓடிச் செல்வர். அவர்கள் "ஆந்திர மகாசபை வாழ்க!'' என்ற போர் முழக்கத்துடன், "வாதெசலா' (Vadasala)  வினால் ரஜாக்கர் குண்டர்களின் மேல் கற்களை எறிந்தனர். ரஜாக்கர் குண்டர்களை கிராமங்களின் அருகில் நெருங்குவதற்கு விடுவதில்லை. நவீன ஆயுதங்கள் வைத்துக் கொண்டிருந்தாலும் ரஜாக்கர்கள் கிராமங்களிலிருந்து ஓட வேண்டியதாயிற்று. பைத்தியம் பிடித்தவர்கள் போல ரஜாக்கர்கள் மக்களைச் சுடுவர்; இம்மாதிரியான தாக்குதலினால் ஒன்றுமறியாத பல மக்கள், ரஜாக்கர் குண்டர்களினால் கொல்லப்பட்டனர்.


அரசாங்க இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய ரஜாக்கர் குண்டர்கள் கிராமங்களைத் திரும்பத் திரும்பச் சூறையாடி, மக்கள் பலரை சித்திரவதை செய்தனர். இச்செயல்கள் அரசாங்கத்தின் மீதும், ரஜாக்கர்களின் மீதும் மக்களின் வெறுப்பை எல்லை கடக்கச் செய்தது. ரஜாக்கர் குண்டர்களின் மையங்களை அழிப்பதற்கான உடனடித் தேவைக்காக மக்கள் தீவிரமாகக் குரல் கொடுத்தனர்.