கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்தரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர் துடித்திட லானேன்.
வடக்குத் தெருவௌி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ?
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.
"வளர்ப்பு மயில்களின் ஆடல் - தோட்ட
மரங்கள், மலர்க்கிளைக் கூட்டம்,
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில்."
தோழிஇவ் வாறுரைக் குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நினை"வென்று சொன்னான்.
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt213