Language Selection

தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக்
கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! - அவள்
தூய்மை படைத்த உடம்பினையும் - பசுந்
தோகை நிகர்த்த நடையினையும் - கண்டு
காமனைக் கொல்லும் நினைப்புடனே - குப்பன்
காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.

முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு
முழுமதி போல நனைந்திருக்கும் - தன்
துகிலினைப் பற்றித் துறைக்குவந்தாள்! - குப்பன்
சோர்ந்துவிட் டானந்தக் காமனம்பால்! - நாம்
புகழ்வதுண் டோ குப்பன் உள்ளநிலை! - துகில்
பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் - குப்பன்
"சகலமும் நீயடி மாதரசி - என்
சாக்காட்டை நீக்கிட வேண்டும்" என்றான்.

கன்னி யனுப்பும் புதுப்பார்வை - அவன்
கட்டுடல் மீதிலும் தோளினிலும் - சென்று
மின்னலின் மீண்டது! கட்டழகன் - தந்த
விண்ணப்பம் ஒப்பினள் புன்னகையால்!

சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் - அவள்
சங்கீத வாய்மொழி ஒன்றினிலே - எண்ணம்
முற்றும் அறிந்திடக் கூடுமென்றே - அவள்
முன்பு நடந்திடப் பின்தொடர்ந்தான் - பின்பு
சிற்றிடை வாய்திறந் தாள்.அதுதான் - இன்பத்
தேனின் பெருக்கன்று; செந்தமிழே!
"சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் - என்
தோழிகள் இப்பக்கம் வந்திடுவார்.

காலை மலர்ந்தது! மாந்தரெலாம் - தங்கள்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! - இச்
சோலையி லேஇள மாமரங்கள் - அடர்
தோப்பினை நோக்கி வருக!" என்றாள்.
நாலடி சென்றனர்! மாமரத்தின் - கிளை
நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி!
மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் - அந்த
மொய்குழல் "யாதுன்றன் எண்ண" மென்றாள்.

"உன்னை எனக்குக் கொடுத்துவிடு! - நான்
உனக்கெனைத் தந்திட அட்டியில்லை" - இந்தக்
கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் - எட்டிக்
காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்:
"சின்ன வயதினில் என்றனையோர் - பெருஞ்
சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! - எனில்
அன்னது நான்செய்த குற்றமன்று! - நான்
அமங்கலை" என்றுகண் ணீர்சொரிந்தாள்!

"மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?" - என்று
வார்த்தைசொன் னாள்;குப்பன் யோசித்தனன்! - தன்னை
இணங்கென்று சொன்னது காதலுள்ளம் - "தள்"
என்றனமூட வழக்க மெலாம் - தலை
வணங்கிய வண்ணம் தரையினிலே - குப்பன்
மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! - பின்
கணம்ஒன்றி லேகுப்பன் நெஞ்சினிலே - சில
கண்ணற்ற மூட உறவினரும்,

வீதியிற் பற்பல வீணர்களும் - வேறு
விதியற்ற சிற்சில பண்டிதரும் - வந்து
சாதியி லுன்னை விலக்கிடுவோம் - உன்
தந்தையின் சொத்தையும் நீஇழப்பாய்! - நம்
ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! - தாலி
அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! - நல்ல
கோதை யொருத்தியை யாம்பார்த்து - மணம்
கூட்டிவைப் போம்என்று சத்தமிட்டார்!

கூடிய மட்டிலும் யோசித்தனன் - குப்பன்
குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! - முன்
வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் - அந்த
வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும்அவன் - ஆ!
ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! - மூடர்
எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! - மற்றும்
பேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!

காதல் அடைதல் உயிரியற்கை! - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! - இனி
நீதடு மாற்றம் அகற்றிவிடு! - கை
நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! - அடி
கோதை தொடங்கடி! என்றுசொன்னான். - இன்பம்
கொள்ளை!கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt111