Super User
அகவல்
அரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்:
"அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்!
தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்
அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;
ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்;
அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்
கவிதை புனையக் கற்றா ளில்லை.
மலரும், பாடும் வண்டும், தளிரும்,
மலையும், கடலும், வாவியும், ஓடையும்,
விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும்,
மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும்
தமிழின் அமுதத் தன்மையும், நன்மையும்,
காலைஅம் பரிதியும், மாலை மதியமும்
கண்ணையும் மனத்தையும் கவர்வன; அதனால்
என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச்
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
ஏற்றஓர் ஆசான் எங்குளான்?
தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!"
எண்சீர் விருத்தம்
தலைமைஅமைச் சன்புகல்வான்: 'எனது மன்னா,
சகலகலை வல்லவன்;இவ் வுலகோர் போற்றும்
புலவன்; உயர்கவிஞன்; அவன்பேர் உதாரன்!
புதல்விக்குத் தக்கஉபாத் தியாயன் அன்னோன்.
இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்!
எனினும்,அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன்.
குலமகளை அன்னவன்பால் கற்க விட்டால்
குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!
ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்;
அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது
தேனிதழாள் தனைஅவனும், அவனைப் பெண்ணும்
தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க!
பானல்விழி மங்கையிடம் "உதார னுக்குப்
பார்வையில்லை குருட" னென்று சொல்லி வைக்க!
ஞானமுறும் உதாரனிடம் "அமுத வல்லி
நலிகுஷ்ட ரோகி" என எச்சரிக்க!"
தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்! "ஆம்ஆம்
தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை;
பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர்" என்றான்.
பேச்சுவல்ல அமைச்சர்பலர் சென்ற ழைத்தார்.
தேர்வாய்ந்த புவிராஜன் போலே யந்தச்
செந்தமிழ்த்தீங் கவிராஜன் உதாரன் வந்தான்.
பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப்
"பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம்" என்றான்.
சிந்து கண்ணி
மன்னவன் ஆணைப்படி - கன்னி
மாடத்தைச் சேர்ந்தொரு
பன்னரும் பூஞ்சோலை - நடுப்
பாங்கில்ஓர் பொன்மேடை!
அன்னதோர் மேடையிலே - திரை
ஆர்ந்த மறைவினிலே
மின்னொளி கேட்டிருப்பாள் - கவி
வேந்தன் உரைத்திடுவான்!
யாப்புமுறை உரைப்பான் - அணி
யாவும் உரைத்திடுவான்;
பாப்புனை தற்கான - அநு
பவம்பல புகல்வான்.
தீர்ப்புற அன்னவளும் - ஆசு
சித்திரம் நன்மதுரம்
சேர்ப்புறு வித்தாரம் - எனும்
தீங்கவிதை யனைத்தும்,
கற்றுவர லானாள்! - அது
கால பரியந்தம்
சற்றும் அவன்முகத்தை - அவள்
சந்திக்கவில்லை! விழி
அற்றவனைப் பார்த்தால் - ஓர்
அபசகுன மென்றே!
உற்றதோர் நோயுடையாள் - என்
றுதாரனும் பார்த்தில்லை!
இவ்விதம் நாட்கள்பலப் - பல
ஏகிட ஓர்தினத்தில்
வெவ்விழி வேலுடையாள் - அந்த
மேடையிற் காத்திருந்தாள்.
அவ்வம யந்தனிலே - விண்
அத்தனையும் ஒளியால்
கவ்வி உயர்ந்ததுபார் - இருட்
காட்டை அழித்தநிலா!
எண்சீர் விருத்தம்
அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை
அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே,
இமையாது நோக்கினான் முழு நிலாவை!
இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்!
சுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்
தூண்டிவிட ஆஆஆ என்றான்; வாணி
அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற் பெய்தான்!
அத்தனையும் கேட்டிருந்தாள் அமுத வல்லி!
"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!
அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்;
அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்;
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ!
உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை;
நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
உன்னைஎன திருவிழியாற் காணு கின்றேன்;
ஒளிபெறுகின் றேன்;இருளை ஒதுக்கு கின்றேன்;
இன்னலெலாம் தவிர்கின்றேன்; களிகொள் கின்றேன்;
எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்!
அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி
ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!
இன்பமெனும் பால்நுரையே! குளிர் விளக்கே!
எனைஇழந்தேன், உன்னெழிலில் கலந்த தாலே!"
வேறு சிந்து கண்ணி
இவ்வித மாக உதாரனும் - தன
தின்குர லால்வெண் ணிலாவையே
திவ்விய வர்ணனை பாடவே - செவி
தேக்கிய கன்னங் கருங்குயில்,
"அவ்வறிஞன் கவி வல்லவன் - விழி
அற்றவ னாயின், நிலாவினை
எவ்விதம் பார்த்தனன், பாடினன்? - இதில்
எத்துக்கள் உண்டெ"ன ஓடியே,
சாதுரியச் சொல் உதாரனை - அவன்
தாமரைக் கண்ணொடும் கண்டனள்!
ஓதுமலைக் குலம் போலவே - அவன்
ஓங்கிய தோள்களைக் கண்டனள்!
"ஏதிது போன்றஓ ராண்எழில் - குறை
இன்றித் திருந்திய சித்திரம்?
சோதி நிலாவுக்கும் மாசுண்டாம் - இச்
சுந்தரனோ கறை ஒன்றிலான்!"
என்று வியப்புடன் நின்றனள்; - அந்த
ஏந்திழை தன்னெதிர் நின்றதைத்
தன்னிக ரற்ற உதாரனும் - கண்டு
தன்னை மறந்தவ னாகியே
"என்ன வியப்பிது? வானிலே - இருந்
திட்டதோர் மாமதி மங்கையாய்
என்னெதிரே வந்து வாய்த்ததோ? - புவிக்
கேதிது போலொரு தண்ஒளி!
மின்னற் குலத்தில் விளைந்ததோ? - வான்
வில்லின் குலத்திற் பிறந்ததோ?
கன்னற் றமிழ்க்கவி வாணரின் - உளக்
கற்பனையே உருப் பெற்றதோ?
பொன்னின் உருக்கிற் பொழிந்ததோ? - ஒரு
பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?"
என்று நினைத்த உதாரன்தான் - "நீ
யார்?"என்ற ஓர்உரை போக்கினான்.
"அமுதவல்லி யன்றோ!" என்றாள் - "அந்த
அமைச்சனும் முடி வேந்தனும்
நமைப் பிரித்திடும் எண்ணத்தால் - உனை
நாட்டம் இலாதவன் என்றனர்!
சமுச யப்பட நீஇன்று - மதி
தரிசன மதைப் பாடினை!
கமலங்கள் எனும் கண்ணுடன் - உனைக்
காணப் பெற்றதென் கண்" என்றாள்.
எண்சீர் விருத்தம்
"இன்னொன்று கேளாயோ அமுத வல்லி!
என்னிடத்தில் உன்தந்தை "என்மகட்கு
முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து
மூண்டதெருனச் சொல்லிவைத்தான்! அதனா லன்றோ
மின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து
விளைந்ததுபோல் விளைந்தஉன தழகு மேனி
இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லைமு
என்றுரைத்தான்; வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்:
புகாரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ ?
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ ?
நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ?
சீரழகே! தீந்தமிழே! உனைஎன் கண்ணைத்
திரையிட்டு மறைத்தார்கள்!மு என்று சொன்னான்.
பஃறொடை வெண்பா
"வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?
சித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக்
கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,
சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை
முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,
உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்?
தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்!
குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற்
பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?"
என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல்
சென்றுதன் னெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்!
"நன்று மடமயிலே! நான்பசியால் வாடுகின்றேன்;
குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்!
உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும்
வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி!
எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான்
உண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல்
நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில்
மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்
நீயன்றோ பெண்ணே! நினைப்பை யகற்றிவிடு!
நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு!
வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொத்தாதே!
பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!
கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப்
புண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு!
காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்
சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ!
பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால்
நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்?
கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை
அஞ்சுவ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே?
ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக்
காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ?
பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக்
கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ?"
என்றழுதான் விம்மி இளையான், கவியரசன்.
குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சிளகும்!
ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர்
பாழான நெஞ்சும் சிலசமயம் பார்த்திரங்கும்!
சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?
ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்?
அத்தருணம் அந்த அமுதவல்லி ஏதுசொல்வாள்:
"வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை
நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்,
காளைஉன் கைகள்எனைக் காவாமல் போகட்டும்,
தாளை அடைந்தஇத் தையல்உள்ளம் மாறாதே!
ஆதரவு காட்டாமல் ஐய!எனை விடுத்தால்
பாதரக்ஷை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி,
வேறு கதியறியேன்; வேந்தன் சதுர்வருணம்
சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ?
ஆரத்தழுவி அடுத்தவினா டிக்குள் உயிர்
தீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்!
அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம்
ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன?
நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால்
கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை!
கோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக் கொல்லவந்தால்,
சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்!
சாதிஉயர் வென்றும், தனத்தால் உயர்வென்றும்,
போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமுகம்
மெத்த இழிவென்றும், மிகுபெரும்பா லோரைஎல்லாம்
கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர்
ஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்! இதனை
நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள
மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்!
இன்னும்என்ன?" என்றாள். உதாரன் விரைந்தோடி
அன்னத்தைத் தூக்கியே ஆரத் தழுவினான்.
இன்ப உலகில் இருவர்களும் நாள் கழித்தார்.
பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம்
மாறுபடக் கண்டு மனம்பதறித் தோழியர்கள்
வேறு வழியின்றி வேந்தனிடம் ஓடியே
"மன்னவனே! உன்அருமை மங்கை அமுதவல்லி
தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ?
காதல்எனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட
மாதிரியாய்த் தோன்றுகிறாள்; மற்றிதனை மேன்மைச்
சமுகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்" என்றார்.
அமைதி யுடைய அரசன் அதன்உண்மை
கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே
அண்டியிருந் தான்இரவில் ஆரும் அறியாமல்!
வந்த உதாரன்எழில் மங்கைக்குக் கைலாகு
தந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து
பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை
வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும்
கண்டான் அரசன்! கடுகடுத்தான்! ஆயிரந்தேள்
மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து
மாளிகைக்குச் சென்றான். மறுநாள் விடியலிலே
வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்
சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர
ஏவினான். அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம்.
இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்;
அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்.
ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு
தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்.
ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி
மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம்.
அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான்,
சிங்கா தனத்திலே சேர்ந்து:
"கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி
கற்க உன்பால் விடுத்தேன் - அட
குற்றம் புரிந்தனையா இல்லையா இதை
மட்டும் உரைத்து விடு!
வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று
மேவிட ஆள்பவன் நான் - அட
இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை
என்னென்று தானினைத்தாய்?
வாள்பிடித் தேபுவி ஆளுமிராசர் என்
தாள்பிடித் தேகிடப்பார்! - அட
ஆள்பிடித் தால்பிடி ஒன்றிருப்பாய் என்ன
ஆணவமோ உனக்கு?
மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை
வெல்லத் தகுந்தவனோ? - இல்லை
மாள்வதற்கே இன்று மாள்வதற்கே!" என்று
மன்னன் உரைத்திடவே,
"மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
வார்க்கும் மழைநாடா! - குற்றம்
ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம்
அன்றெனில் அவ்விதமே!
கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்
கொள்ளை வனப்பினிலே - எனைக்
காமனும் தள்ளிடக் காலிட றிற்றுக்
கவிழ்ந்தவண்ணம் வீழ்ந்தேன்!
பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர்
பால்நில வாயிரம்போல் - அவள்
அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
அடியேன்செய்த தொன்றுமில்லை.
பிழைபுரிந் தேனென்று தண்டனை போடுமுன்
பெற்று வளர்த்த உன்றன்
இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக் குள்ள
இன்னல் மறப்ப துண்டோ ?"
நொண்டிச் சிந்து
கவிஞன் இவ்வா றுரைத்தான் - புவி
காப்பவன் இடியெனக் கனன் றுரைப்பான்:
"குவிந்த உன் உடற்சதையைப் - பல
கூறிட்டு நரிதின்னக் கொடுத் திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண் - மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை!
நவிலுமுன் பெரும் பிழைக்கே - தக்க
ராச தண்டனை யுண்டு! மாற்ற முண்டோ ?
அரசனின் புதல்வி அவள் - எனில்
அயலவ னிடம்மனம் அடைத லுண்டோ ?
சரச நிலையி லிருந்தீர் - அந்தத்
தையலும் நீயும், அத் தருணமதில்
இருவிழி யாற் பார்த்தேன்! - அறி
விலி, உனதொரு குடி அடியோடே
விரைவில்என் ஆட்சி யிலே - ஒரு
வேர்இன்றிப் பெயர்த்திட விதித்து விட்டேன்!
கொலைஞர்கள் வருகரு என்றான் - அவன்
கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார்.
"சிலையிடை இவனை வைத்தே - சிரச்
சேதம் புரிக" எனச் செப்பிடு முனம்
மலையினைப் பிளந்திடும் ஓர் - சத்தம்
வந்தது! வந்தனள் அமுத வல்லி!
"இலை உனக் கதிகாரம் - அந்த
எழிலுடையான் பிழை இழைக்க வில்லை.
ஒருவனும் ஒருத்தியு மாய் - மனம்
உவந்திடில் பிழையென உரைப்ப துண்டோ ?
அரசென ஒரு சாதி - அதற்
கயலென வேறொரு சாதி யுண்டோ ?
கரிசன நால் வருணம் - தனைக்
காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான்
தரும்படி அவனை இங்கே - நீ
தருவித்த வகையது சரிதா னோ?
என்மனம் காதல னைச் - சென்
றிழுத்தபின் னேஅவன் இணங்கின தால்
அன்னவன் பிழையில னாம்! - அதற்
கணங்கெனைத் தண்டித்தல் முறை யெனினும்,
மன்ன!நின் ஒருமகள் நான் - எனை
வருத்திட உனக்கதி கார மில்லை!
உன்குடிக் கூறிழைத் தான் - எனில்
ஊர்மக்கள் இடமதை உரைத்தல் கடன்!"
என்றபற் பல வார்த்தை - வான்
இடியென உரைத்துமின் னென நகைத்தே
முன்னின்ற கொலைஞர் வசம் - நின்ற
முழுதுணர் கவிஞனைத் தன துயிரை
மென்மலர்க் கரத்தாலே - சென்று
மீட்டனள் வெடுக்கெனத் தாட்டி கத்தால்.
மன்னவன் இரு விழியும் - பொறி
வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடு வான்:
கும்மி
"நாயை இழுத்துப் புறம்விடுப்பீர் - கெட்ட
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே! - இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்! - என்
தூய குடிக்கொரு தோஷத்தையே - தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை - தன்னில்
போய்அடைப் பீர்!அந்தப் பொய்யனை ஊரெதிர்
போட்டுக் கொலைசெய்யக் கூட்டிச் செல்வீர்!"
என்றுரைத் தான். இருசேவகர்கள் - அந்த
ஏந்திழை அண்டை நெருங்கி விட்டார்! - அயல்
நின்ற கொலைஞர், உதாரனை யும் "நட
நீ"என் றதட்டினர்! அச்சமயம் - அந்த
மன்றி லிருந்தஓர் மந்திரிதான் - முடி
மன்னனை நோக்கி யுரைத்திடுவான் - "நீதி
அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்;
அன்னது நீக்கி யருள்க" என்றான்.
எண்சீர் விருத்தம்
"காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டுங்
கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட
நீதிநன்று மந்திரியே! அவன் இறந்தால்
நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்!
சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்,
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்;
ஓதுகஇவ் விரண்டி லொன்று மன்னவன்வாய்!
உயிர்எமக்கு வெல்லமல்ல!" என்றாள் மங்கை.
"என்ஆணை மறுப்பீரோ சபையி லுள்ளீர்!
இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார்
பின்நாணும் படிசும்மா இருப்ப துண்டோ ?
பிழைபுரிந்தால் சகியேன்நான்! உறுதி கண்டீர்!
என்ஆணை! என்ஆணை! உதார னோடே
எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக்
கன்மீதி லேகிடத்திக் கொலைசெய் வீர்கள்
கடிதுசெல்வீர்! கடிதுசெல்வீர்!" என்றான் மன்னன்.
அவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை;
அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்!
சுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல்
தோகையவள் "என்காதல் துரையே கேளாய்!
எவையும்நமைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டோ ம்;
இறப்பதிலும் ஒன்றானோம்! அநீதி செய்த
நவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள்
நற்பாடம் கற்பியா திருப்ப தில்லை.
இருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம்
இறப்புலகில் இடையறா இன்பங் கொள்வோம்!
பருந்தும், கண்மூடாத நரியும் நாயும்,
பலிபீட வரிசைகளும் கொடுவாள் கட்டும்
பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை மன்னன்
பொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச் சேற்றை
அருந்தட்டும்!" என்றாள். காதலர்கள் சென்றார்!
அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக் கின்றேன்:
கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள்
கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்;
அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி
அனைவருமே வந்திருந்தார். உதார னுக்கும்
சிலைக்குநிகர் மங்கைக்கும் "கடைசி யாகச்
சிலபேச்சுப் பேசிடுக" என்றுசொல்லித்
தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்;
தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்:
"பேரன்பு கொண்டவரே, பெரியோ ரே,என்
பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!
நீரோடை நிலங்கிழிக்க, நெடும ரங்கள்
நிறைந்துபெருங் காடாக்கப், பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கிச்
சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி
அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்!
இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்
புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்
புனலுக்கும் அனலுக்கும் சேற்றி னுக்கும்
கக்கும்விஷப் பாம்பினுக்கும் பிலத்தி னுக்கும்
கடும்பசிக்கும் இடையறா நோய்க ளுக்கும்,
பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்
பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
சலியாத வருவாயும் உடைய தாகத்
தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்
எலியாக முயலாக இருக்கின் றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோ ன்
புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக் கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?
அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண் டாக
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும்
சாவதென்ற தீர்ப்பளித்தான்; சாவ வந்தோம்!
ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்!
இருவர் இதோ சாகின்றோம்! நாளை நீங்கள்
இருப்பதுமெய் என்றெண்ணி யிருக்கின் றீர்கள்!
தன்மகளுக் கெனைஅழைத்துக் கவிதை சொல்லித்
தரச்சொன்னான், அவ்வாறு தருங்கா லிந்தப்
பொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால்
புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்!
என்உயிருக் கழவில்லை! அந்தோ! என்றன்
எழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த
மன்னுடல்வெட் டப்படுமோர் மாப ழிக்கு
மனநடுக்கங் கொள்ளுகின்றேன்! இன்னும் கேளீர்;
தமிழறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான்;
தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்!
அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்,என் னாவி
அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று
சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ ?
உமைஒன்று வேண்டுகின்றேன். மாசில் லாத
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!
அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை
ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல
அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ?
அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்!
சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்
சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!
அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம்
ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்!
ஐயகோ சாகின்றாள்! அவளைக் காப்பீர்!
அழகியஎன் திருநாடே! அன்பு நாடே!
வையகத்தில் உன்பெருமை தன்னை, நல்ல
மணிநதியை, உயர்குன்றைத் தேனை அள்ளிப்
பெய்யுநறுஞ் சோலையினைத் தமிழாற் பாடும்
பேராவல் தீர்ந்ததில்லை! அப்பே ராவல்
மெய்யிதயம் அறுபடவும், அவ்வி ரத்த
வெள்ளந்தான் வெளிப்படவும் தீரு மன்றோ?
வாழியஎன் நன்னாடு பொன்னா டாக!
வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே!
வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி
வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி!
ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்!
என்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்!
ஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு நாட்டில்
ஆழ்கமுஎன்றான்! தலைகுனிந்தான் கத்தி யின்கீழ்!
படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து
பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம்
அடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்!
ஆவென்று கதறினாள்! "அன்பு செய்தோர்
படிமீது வாழாரோ?" என்று சொல்லிப்
பதைபதைத்தாள்! இதுகேட்ட தேச மக்கள்
கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக்
கொலையாளர் உயிர்த்தப்ப ஓட லானார்!
கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்!
காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்;
"புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
போயுரைப்பாய்" என்றார்கள்! போகா முன்பே,
செவியினிலே ஏறிற்றுப் போனான் வேந்தன்!
செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டா ருக்கே
நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்!
நலிவில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே!
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaviyam.htm#1.2%20புரட்சிக்%20கவி