காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே! எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும், ஆரியனும் சுரண்டக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.
காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்? வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தெவையில்லை. நாட்டை ஆண்டுவந்த நாங்கள், வெள்ளையன் வந்தபிறகு, பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைபோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்டுமென்ற கவலை, ஏனனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம்.
காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம் வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பானுடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்கும் அறிகுறியாகிய உச்சிக்குடுமி பூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களாகிய நீங்கள் தான் கத்திரிக்கப்போகின்றீர்களென்பது ஆரியனுக்கும் தெரியும் ஏன்! அது பாடுபடாத கூட்டம். கடுகளவாவது நாங்கள் உங்கள் விரோதிகளல்ல’அணுக்குண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்பொழுது நீங்கள் உணரப்போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக்கூடாது என்று இந்தக்காலத்திலா சொல்லுவது?
நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்தப் பூமியைத் திருத்தி உழுது, பயிரிட்டுப் பாடுபடுகிறோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தோம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா? அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது, கால்வெட்டப்பட்டது. ஆகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள்.
காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்களும் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும்.
கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வெண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே ‘வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகிவிட்டான்” என்று! இது தானா சுயராஜ்யம்?
கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக், கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூததிரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ளவேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா?
நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. “கடவுளாலே கொடுக்கப்பட்டது” என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?
கம்யூனிஸ்ட் தோழர்களே! சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவுநாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டுஆட்சி அல்ல. இந்த பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக்கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்வதுபடி நடந்தது இந்த ஆட்சி. பிராமணன் உடலால் உழைக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜ் (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான். இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம்தான். இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான் மற்றப் பேர்களெல்லாம் தந்திரம். இதை இரண்டுவருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன்.
அம்பேக்கரும், ஜின்னாவும் இப்போழுது சொல்லுகிறார்கள், இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம். இதற்கு ஒரு உதாரணம், திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார்.பி.எஸ். சிவசாமி ஜயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் “நாம் செய்து கொண்ட உடன்படிகை மீறுகின்றாயே” என வெள்ளையனைக் கேட்டார்கள். இதைத்தான் நாம் உடைக்க வேண்டும். வெளளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது, மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம், சண்டை நீங்கியவுடன் அவரவர்கள் நாட்டை அவரவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கின்றான்.
காங்கிரஸ் அவனை வெளியே விடாமல் தடுத்து நிற்கின்றது. காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது? நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா? நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ, அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமே பெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையையுடைய ஒரு இனம், அதுவும் நூற்றுக்கு, 60 - க்கு மேல் மெஜாரிட்டியாகவுள்ள இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிறதென்றால், இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை- நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்?
இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும், ‘ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?
(கும்பகோணத்தில் 18-08-1946 – ஆம் தேதி 'காங்கேயன் பார்க்கில்" தந்தை பெரியார் ஈ.வெ.ரா. உரை - ‘குடிஅரசு’ தலையங்கம் 09-10-1946)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_7303.html