Language Selection

காந்தியடிகள் இந்திய அரசியல் உலகில் தலையிடுவதற்கு முன்னர் மேனாட்டு அரசியல் முறைப்பற்றி நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி நடைபெற்று வந்தது. மேனாட்டு அரசியல் நூல்களைக் கற்று அந்நாட்டு ராஜதந்திரத்தில் மோகங்கொண்ட படித்த வகுப்பினர்களே நமது நாட்டின் அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கில ஆட்சியில் நமது நாட்டின் பல வளங்களும் அழிந்து போயிற்று என்ற உண்மையை உணர்ந்தவர்கள்தாம். எனினும் நமது நாட்டின் விடுதலை ஆங்கிலேயர்களின் உள்ளங்கைக்குள் அடங்கிக்கிடக்கிறதென்ற கொள்கையுடையவராய் உழைத்து வந்தனர். தன்னம்பிக்கையும், தன் கையே தனக்குதவி என்ற சீரிய எண்ணமும் இலராய் ஆங்கிலேயர்களின் புன்சிரிப்பிலேயே தவழ்ந்து தேச விடுதலை வேண்டி நின்றனர்.

சுயராஜ்யம் ஆங்கிலேயர் கொடுக்க நாம் பெற வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குள் மிக்கு இருந்தது. படித்த வகுப்பினர் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் கூட்டமே காங்கிரஸ் மகாசபையாக விளங்கி வந்தது. ஆங்கில அரசாங்கத்தாருக்கு "எமக்கு இன்ன குறை உளது. அதனை தயவு செய்து நீக்க வேண்டும்" என்று அடிமைக்குணம் அரும்பிய விண்ணப்பத் தீர்மானங்களும், வேண்டுகோள்களுமே காங்கிரஸ் மகாசபையில் செய்யப்பட்டு தாழ்மையுடன் அனுப்பப்பட்டுவந்தன.

இந்திய அரசாங்க ஊழியம் இந்தியமயமாக்கப்படின் அதுவே தேசவிடுதலையெனக் கருதி உத்தியோகங்கள் பெறப்பட்டுவந்தன. படித்த வகுப்பினரே இந்திய மக்கள் என்றும், சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற பட்டினங்களே இந்தியாவென்றும் கருதி அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கிலரின் மனப்பான்மையை உள்ளபடி ஒருவரும் அறிந்தவர்களில்லை. அறிந்த ஒருசிலரும் அதற்கேற்ப தக்க முறைகளை மக்களுக்கு காட்டத் துணிந்து முன் வந்தார்களில்லை.

ஆங்கிலர்களின் உண்மையான மனப்பான்மையை உள்ளபடி அறிந்தவர் உத்தமர் காந்தியடிகளேயாவார். ஆங்கில ராஜதந்திரிகள் போன்ற நிபுணர்களை இவ்வுலகில் எங்கும் காண்டல் அரிது என்றும், அவர்களை அம்முறை கொண்டே வெல்லுதல் அரிது என்றும் இந்திய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். சுயராஜ்யம் வேண்டி ஆங்கிலர்களிடத்து அடிபணிந்து நிற்பது இழிவு என்றும், சுயராஜ்யம் என்பது ஒருவர் கொடுக்க ஒருவர் பெற்று அனுபவிக்கும் பொருள் அல்லவென்றும், நாமாகவே அடைந்த சுயராஜ்யமே நிலைத்து நிற்கும் என்றும் காந்தியடிகள்
மக்களுக்கு எடுத்தோதினார்.

சுயநலமும், லாபமும் கருதியே ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் அரசு செலுத்தி வருகிறார்கள் ஆதலின் அவர்களாகவே மனமிரங்கி இந்தியாவிற்கு சுயராஜ்யம் அளிப்பார்களென எதிர்பார்ப்பது பகற்கனவேயாகும். தற்கொலை செய்துகொள்ள விரும்பும் மனிதன் ஒருவனையேனும் இவ்வுலகில் காண்டல் அரிது. நமது நாட்டின் மக்கள் திரண்ட செல்வம் அடைந்து இன்பம் நுகர்வதற்கு கருவியாக அமைந்திருக்கும் இந்தியாவை விட்டுச் செல்லவும் ஆங்கிலர் ஒருப்படுவாரா?

ஆகையினால் அவர்பால் உதவியை எதிர்பார்ப்பது இந்தியரின் தன்மதிப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் பெரிதோர் குறைவு என்று இடித்துக் கூறினார். நூற்றைம்பது ஆண்டுகளாக இந்தியர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைக்குழியில் வீழ்த்தின இந்திய ஆங்கில அரசாங்கத்தோடு ஒத்துழையாமையைக் கைக்கொள்வதே சுயராஜ்யம் பெறும் வழியென ஓர்ந்து இந்திய மக்களுக்கு அரிய உபதேசம் செய்தனர். காங்கிரஸ் மகாசபை படித்த வகுப்பினர் கூட்டமாக விளங்காமல் உண்மையான இந்திய மக்களின் பிரதிநிதி சபையாகத் திகழல் வேண்டுமானால் இந்தியமக்கள் அனைவரும் அதில் சேர்ந்து கலந்து உழைத்தல் வேண்டுமென வழிகள் வகுத்தனர்.

தேசமும், தேச உரிமையும் இன்னதென்றறியாது கிணற்றுத் தவளையென வாளாக் கிடந்த இந்திய மக்களைத் தட்டி எழுப்பி தேச விடுதலையில் ஆர்வங்கொண்டு உழைக்கும்படிச் செய்தனர். இந்தியாவிற்கு சுயராஜ்யம் வேண்டுவது பல்லாயிரக்கணக்கான ஏழை இந்திய மக்கள் விடுதலை பெறவே என்ற உண்மையைக் கண்டு, இதுகாறும் இந்திய மக்களைப் புறக்கணித்து நடைபெற்றுவந்த இந்திய அரசியல் நெறியை மாற்றி படித்த வகுப்பினருக்கும் பாமர மக்களுக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கி வைத்தனர்.

இந்தியா என்பது படித்த வகுப்பினரும் பட்டினங்களும் அல்ல; ஏழு லட்சம் கிராமங்களும் அங்கு வாழ்ந்து வரும் முப்பது கோடி மக்களுமேயாவர். சுயராஜ்யம் படித்த வகுப்பினருக்கு மட்டுமல்ல; உத்தியோகங்களை இந்தியமயமாக்குவதும் சுயராஜ்யமாகாது, வறுமைக்கும், பிணிகளுக்கும், பஞ்சத்திற்கும் அகால மரணத்திற்கும் ஆளாகி எலும்பும் தோலுமாக அலைந்து திரியும் எண்ணற்ற கிராமவாசிகள் நன்னிலையடைந்து உண்ண உணவிற்கும் உடுக்கத் துணிக்கும் வாடி நிற்காமல் நிமிர்ந்த தலையினராய் ஏறுபோல் நடையினராய் வாழ்ந்து இன்பம் நுகரச் செய்வதே சுயராஜ்யமாகும்.

நமது கிராம வாழ்க்கை மீண்டும் பழைய நன்னிலைமை அடைந்தால் அல்லாது சுயராஜ்யம் பெறமுடியாது என்பது காந்தியடிகளின் முடிந்த கொள்கை. இவ்வாக்க வேலைக்கு இந்திய அரசாங்கம் உதவிபுரியுமென எதிர்பார்த்தால் வீணே கிராம வாழ்க்கையைக் குலைத்து, கிராம வாசிகளின் கைத்தொழிலைத் தொலைத்து, அதன்மேலேயே இவ்வர சாங்கம் கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் காந்தியடிகள் கண்டார்.

இவைகளை எல்லாம் நன்றாய் ஆராய்ந்த பின்னரே தேசம் விடுதலை பெற வேண்டுமானால், சுயராஜ்யம் அடையவிரும்பினால் ஆக்க முறைகளையும் அழிவு முறைகளையும் இந்திய மக்கள் ஒருங்கே கைக்கொண்டு உழைக்க வேண்டுமெனக் கூறினார். அப்பெரியாரின் கொள்கையைக் காங்கிரஸ் மகாசபையும் ஏற்றுக்கொண்டு ஒழுகியது. அழிவுமுறை எனப்படுவது இந்நாட்டில் ஆங்கில அரசாங்கம் நடைபெறுவதற்கு உதவியாக இருப்பவைகளோடு மக்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது ஆகும். ஆக்க முறையாவது சுயராஜ்யத்தை நல்குவதான நிர்மாண வேலைகளை நிறைவேற்றி வைப்பது ஆகும்.

அரசாங்கத்தார் அளிக்கும் பட்டங்களையும், கவுரவப் பதவிகளையும் துறத்தல், சட்டசபைகளை விட்டு விலகல், அரசாங்கப் பாடசாலைகளையும் நீதி மன்றங்களையும் விலக்குதல் ஆகிய இவைகளே அழிவு முறைகளாம். அவ்வரசாங்கத்தாரின் அட்டூழியங்களினால் நசுக்கப்பட்டு இறந்துபோன குடிசைத் தொழிலாகிய இராட்டினத்தில் நூல் நூற்று கைத்தறியால் நெசவு நெய்தல், உயிர்ப்பித்தல், இருபெரும் வகுப்பினராகிய இந்துக்களும், முஸ்லிம்களும் எவ்வித வேற்றுமையுமின்றி நட்புரிமை பூண்டு உடன்பிறந்தார் களைப்போல ஒன்றி வாழ்தல், இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பதும், கேவலம் மனித உரிமையை மறுப்பதும் ஆகிய தீண்டாமை என்னும் கொடிய வழக்கத்தை ஒழித்தல் ஆகிய இவைகளே ஆக்கமுறைகளாகும்.

பற்பல காரணங்களினால் காந்தியடிகள் கோலிய அழிவுமுறைகள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. ஆக்கமுறைகளும்கூட புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இவ்விரு முறைகளே இந்தியாவிற்கு சுயராஜ்யம் தரவல்லது. வேறு எம்முறையும் தராது என்பது உறுதி. ஆங்கிலர்களின் ராஜதந்திரத்தின் முன் நம்மவர் தந்திரம் ஒருக்காலும் தலைதூக்காது. காலத்திற்கேற்ற பேச்சும், வாக்குறுதியைக் காக்கும் குணமின்மையும், வஞ்சகமும், பொய்க்கோட்டையும் பொதிந்துகிடக்கும் ஆங்கில ராஜதந்திரத்தின் வலிமையை பாவம்! ஏழை இந்தியர் அறிய முடியுமோ? சட்டசபை சென்றவர்களின் கதி என்னவாயிற்று? "பழைய கருப்பனே கருப்பன்" என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

ஆங்கில நாட்டுத் தொழிலாளர் கட்சியினரை எதிர்பார்த்து நின்றவர்களின் கதிஎன்ன? ஏமாற்றமல்லாது வேறுண்டோ? விளங்கும் தீண்டாமையை ஒழித்து மக்கள் ஒற்றுமையாக வாழவும் பாடுபடுதல் அரசியல் முறையின் பாற்பட்டதாகாதோ? சுயராஜ்யம் எனின் இதுபோன்று நடைபெறும் ஆட்சிமுறையைத் திருத்தியோ ஒழித்தோ மக்கள் பிறப்புரிமை களைப்பெற்று எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமெய்தி வாழ்வதுதானே. இதுபோழ்து நடைபெறும் ஆட்சிமுறையின் அடிப்படைகளாக இருக்கும் நாட்டின் செல்வத்தை கொள்ளை கொள்ளும் வியாபாரம், பிரித்தாளுதல் ஆகியவைகளை ஒழிக்கும் முறைகள் அரசியல் முறைகள் அல்லவெனின் பின் எதுதான் அரசியல் முறையோ?

தமிழ் மக்களே! பட்ட வேட்டையிலும், பதவி மோகத்திலும் அமிழ்ந்து அலைந்து திரிவோர்களின் மயக்க வார்த்தைகளில் ஈடுபட்டு ஏமாந்து போகாதீர்கள். கதர், இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழித்தல் ஆகிய இம்மூன்றுமே சுயராஜ்யம் நல்கும். இதுவே எனது சித்தாந்தம் எனக் காந்தியடிகள் கூறும் அரிய மொழிகளை ஆழ்ந்து ஆராய்ந்து உண்மையைக் கண்டு தேறி, காந்தியடிகள் வழிநின்று தேசவிடுதலைக்காக உழைப்பீர்களாக!


(தலையங்கம் : குடி அரசு 31. 05.1925 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/iii.html