Language Selection

இந்து மதத்தை ஒழிப்பதற்காகவாவது யூனியன் ஆட்சியை (மய்ய அரசை) ஓழிக்க இந்தியா படத்தைப் பொசுக்குங்கள்! தோழர்களே! இந்நாட்டுக் குடிமக்களான நாம் (தமிழ்த் திராவிடர்) 100- க்கு 90 - பேர் இந்து மதம், இந்துமதக் கடவுள், புராண, இதிகாச சாஸ்திர அமைப்புகள் ஆகியவற்றின்படி, ‘சூத்திரர்கள்’. அதாவது மேல் சாதிக்காரர்களாகிய பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாகும். இந்து மதத்தின் கடைசி வேர் இருக்கும்வரை, இந்த நாட்டு மக்களைப் பிடித்துள்ள சூத்திரப் பட்டம் ஒழியாது; நிச்சயம் ஒழியாது.

 

ஆனால், இன்று நடக்கும் இந்திய யூனியன் ஆட்சி என்கிற பச்சைப் பார்ப்பன - மநு தர்மவாதிகளின் ஆட்சியில், இந்து மதம் பாதுகாக்கப்படுகிறது; பரப்பப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் ‘மதம் மனிதனது சொந்த விஷயம்’ என்ற பாவனையில் கூட அரசாங்கம் நடப்பதில்லை. இதற்குப் பிரத்யட்சயமாகப் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.

 

1. இந்திய அரசமைப்புச் சட்டம் என்கிற பார்ப்பன நவீன மநுதர்மச் சட்டம், எல்லோருக்கும் மதச் சுதந்திர உரிமை அளித்திருக்கிறது. அதன்படி இந்து மதக்காரன் சுதந்திரமாக இன்னொருவனைப் பார்த்து ‘நீ கீழ் சாதி, இழி சாதிக்காரன், சூத்திரன், பஞ்சமன்’ என்று கூறினால், மற்றவனும் ஆம் என்று தலையசைப்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்? கூறுவதற்கு உரிமையும் இல்லை (‘இந்து லா’வே (சட்டமே) இதற்கு ஆதாரம்)

 

2. இந்திய அரசாங்கத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் இதை ஒரு ‘மதச்சார்பற்ற அரசாங்கம்' என்பதாகக் குறிப்பிடுவார்கள். அத்தகையோர்களைப் பார்த்து நான் வணக்கமாகக் கேட்டுக் கொள்வது எல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஓர் இடத்திலாவது இது மதச்சார்பற்ற அரசாங்கம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதா? சட்ட நிபுணர்களே ஆராய்ந்து பாருங்கள் (மதச்சார்பு ஆட்சி என்பதற்கு அரசமைப்புச் சட்டமே ஆதாரம்). மதப்பாதுகாப்பு என்றால் மநு தர்ம - வர்ணாசிரமப் பாதுகாப்பு அல்லாமல் வேறு என்ன?

 

3. இந்த ஆட்சியில் மதப் பண்டிகைகளுக்கு எல்லாம் அரசாங்க விடுமுறை.

 

4. கும்பமேளா போன்ற ஆபாச நிர்வாணப் பண்டிகைத் திருவிழாக்களில் ஜனாதிபதி, உப ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளத் தவறுவது இல்லை.

 

5. 50,000 - ரூபாய் செலவில் வருஷா வருஷம் ராவணனை எரிக்கும் ‘ராமலீலா’' பண்டிகையில் ஆட்சி பீடத் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது மத உணர்ச்சியை நன்றாகப் புலப்படுத்திக் கொள்ளுகின்றனர்.

 

6. ஜனாதிபதி திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் காசிக்குப் போய்ப் பார்ப்பனர்களது காலைக் கழுவிவிட்டு வருவதும், கன்னியாகுமரிக்கு வந்தாலும் பார்ப்பனர்களிடம் மண்டி போட்டு உட்கார்ந்து தர்ப்பணம் பண்ணுதலும் உலகப் பிரசித்தி பெற்ற விசயங்களாகும்.

 

7. அணைக்கட்டுகள் திறப்பதானாலும் சரி, கப்பல் கட்டி அதைக் கடலில் மிதக்க விடுவதானாலும் சரி, இந்து மத முறைப்படி, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தேங்காய் உடைத்து, மதச் சடங்குகள் முறையில் அர்ச்சனை செய்துதான் அரசாங்கக் காரியங்கள் நடைபெறுகின்றன.

 

8. சோமநாதபுரம் கோயிலைப் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து - அரசாங்க ஆதரவுடன் புதுப்பித்திருக்கிறார்கள்.

 

9. இந்து மதத்திற்கே சலுகையெனப்படும் முறையில் கோயில்களைப் புனருத்தாரணம் செய்ய டெல்லி சர்க்கார் காட்டும் முயற்சி, ஆர்வம் அதிகம்.

 

10. வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் - டிட்டோ, குருஷ்சேவ் போன்றவர்கள் வரும்போது, இந்துக் கோயில்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று பூரண கும்ப மரியாதை செலுத்தி, நடராசன், சிவன் போன்ற கடவுள்களின் சிலைகளை அவர்களுக்குப் பரிசளித்தல்.

 

11. தபால் (அஞ்சல்) முத்திரையில் மும்மூர்த்தி உருவம் போட்டு அச்சடிப்பது.

 

12. அரசாங்க அலுவலகங்களில் இந்து மதக் கடவுள்களின் படத்தை வைத்து, அதற்கு அடிக்கடி பூசை நடத்துதல்.

 

13. ‘இந்து லா'வின்படி பவுத்தர்களையும் இந்துக்களாக எண்ணி இந்து சட்டத்தையே விவகாரத்திற்குப் பயன்படுத்திய போதிலும், பல லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வட நாட்டில் புத்த மார்க்கத்தைத் தழுவினார்கள் என்றவுடன், அவர்களை அதற்காகப் பழிவாங்கும் தன்மையில் அவர்களுக்கு இந்திய அரசாங்கம் தந்து வந்த கல்வி, உத்தியோகச் சலுகைகள் இனி தரப்பட மாட்டாது என்று இந்திய யூனியன் (மய்ய ஆட்சி) மறுத்தது, இது இந்து மத சர்க்கார்தான் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த நிலையில், இவற்றை எல்லாம் துணிந்து எடுத்துக் கூறி, இத்தகைய வர்ணாசிரம தர்மப் பாதுகாப்பு ஆட்சியினின்று விடுபட்டால்தான், இந்து மதப் பிடிப்பிலிருந்து விலக முடியும். இந்து மதப் பிடிப்பு ஒழிந்தால்தான் மூவாயிரம் ஆண்டு காலத்து இழிவான சூத்திரப்பட்டமும் ஒழியும்.

 

(தந்தை பெரியார் - 'விடுதலை' தலையங்கம் 27-05-1960)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_31.html