Language Selection

**
இன்றைய இலட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்கு மேல் எவனும் இல்லை; எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது. ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடவேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா? இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லாச் சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம்.

நாம் இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டது. இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான். நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல், வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடு வந்துவிடுமா? செத்தவனும் வந்து விடுவானா?

குத்துவேன், வெட்டுவேன் என்று சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? எந்த மாதிரி சொன்னான்? அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். ராமசாமி; குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்று சிலர் சொன்னபோது, எப்போது சொன்னான்? எங்கு சொன்னான்? கடுதாசியைக் காட்டு, என்றதும் ஒருவனையும் காணோம். ஓடிவிட்டார்கள். பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள். சி.அய்.டி.ரிப்போர்ட்டில் (உளவுத் துறை அறிக்கையில்) அது போலக் காணவில்லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள்.

 

குத்தினால், வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன் தான் சும்மா இருப்பான்?ஆண்மையாக ஜாதி இருக்க வேண்டியதுதான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்! ஆறு மாதமாகக் கிளர்ச்சி நடக்கிறது. 750 - பேரைக்கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல். குத்துகிறேன், வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி விடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை.

 

சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கறையில்லை. குத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீர வேண்டும்! என்ற இலட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும், வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்று இலட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது. பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக்கொள்ள வேண்டியதுதானா?அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும், வடநாட்டானுக்கும் தானா?

 

தந்திரமாகப் பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்குப் போகமுடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் (சிறை) இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனை பேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம்; இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.

 

சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை; நம்மை அடக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம் அது. ஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்கிறான், கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்றுதான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சகணக்கான குரல்)

 

நாலு பேர் சாவது, ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 - க்கு 97 -பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்கட்டும்; பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடப் போவதில்லை. அந்த மாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

 

இந்த இரண்டு வருடத்தில் இருபது இடங்களில் எனக்குக் கத்தி கொடுத்துள்ளார்கள். எதற்குக் கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை... முத்தம் கொடுக்கவா? இல்லை, விற்றுத் தின்னவா? உன்னால் ஆகும்வரை பார்; முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது. இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா? செல்வாக்கைத் தப்பாக உபயோகிக்க மாட்டேன்.

 

நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்ல மாட்டேன். வேறு மார்க்கம் இல்லை என்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியைப் புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100 - க்கு 10 - பேர்தான் இருக்கும். 100- க்கு 90 - பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான். தப்பான காரியத்திற்கு என் தொண்டர்களை உபயோகப்படுத்த மாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

(03-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடை வெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் சொற்பொழிவு : (விடுதலை 08-11-1957)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_17.html