Language Selection

 

 

நம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால் ஒருவித பக்தியும், மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசியத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய் விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள் என்போர் ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத் தூண் போன்றவர்கள். சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லுவதானால் அரசாங்கத்திற்கும் இந்தியக் குடி மக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றர்கள் என்று தான் அவர்களைச் சொல்லவேண்டும். அப்பாதிரிமார்களிலேயும் உண்மையாய் கிருஸ்து நாதருடைய கட்டளைப்படி நடக்கக் கூடியவர்களோ, நடக்க வேண்டும் என்கிற ஆசையுள்ளவர்களோ சிலர் இருக்கலாம்.

 

நாம் நமது கண்ணுக்குத் தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப் பற்றி நமது அபிப்ராயத்தை எழுதுவோம். ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக் கைப்பற்ற வேண்டுமானால், எப்படி திருடன் ஒரு வீட்டில் திருடுவதானால் கன்னம் வைத்து துவாரம் செய்துகொண்டு முதலில் தன் காலை விட்டு பார்ப்பானோ, அதுபோல் பாதிரிமார்களை அதாவது மதக் குருக்கள் என்பவர்களை முதலில் அனுப்புவது என்பது ஒருவித தந்திரம். உதாரணமாக, நமது நாட்டில் பிராமணர்கள் எப்படி தங்கள் மதத்தைக் காக்க -பரப்ப - தங்களுக்குள்ளாகவே ஒருவரை லோககுரு என்றும், ஆச்சாரியார் என்றும், மடாதிபதிகள் என்றும், மகந்துகள் என்றும் சொல்லிக் கொண்டு அவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து பயந்து பக்தி கொள்ளும் வண்ணம் அணிவிடை பணிவிடைகள் செய்வதும் கை வாய் பொத்திப் பேசுவதும், சுவாமிகள், சுவாமிகள் என்று கூப்பிடுவதும், அடியேன், அடியேன் என்று சொல்லிக் கொள்ளுவதுமான தந்திரங்களைச் செய்து தங்கள் மதப் பிரசாரம் செய்து (மதப் பிரசாரம் என்பது பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தன்னைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் படும்படியான மனப்பான்மையை உண்டாக்கி விடுவது) தங்கள் உயர் வாழ்க்கையை நிலைநிறுத்த ஆக்கந்தேடிக் கொள்ளுகிறார்களோ, அதுபோல் ஐரோப்பியர்களும் தங்களுக்குள் ஒருவரை மதக்குரு என்பதாக பேர் வைத்து நமது நாட்டுக்கு அனுப்புவதும், அவர் நமது நாட்டின் இரகசியங்களையும் இங்குள்ள ஜனங்களின் யோக்கியதைகளையும் அறிய மதப் பிரசாரம் செய்வதுபோல் ஏழை மக்களிடையும் பாமர மக்களிடையும் இடம் பொருள், ஏவல் என்கிற செளகரியங்களால் திரிந்து பழகி அவர்களை தங்கள் மதத்திலும் சேர்த்துக் கொண்டு தங்கள் சுவாதீனமும் செய்து கொண்டு நம் நாட்டு இரகசியங்களை அறிந்து, பிறகு நாட்டையே சுவாதீனப்படுத்திக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் செய்வதுமாயிருக்கிறது.

 

இந்தப் பாதிரிகள் பெரும்பாலும் நமது குருக்களைப் போலவே பார்வைக்கு கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்பவர்களா யிருந்தாலும், அந்தரங்கத்தில் இவர்களும் அவர்களைப் போலவே பெரிய ராஜதந்திரிகளாய்த்தான் இருப்பார்கள். (ராஜதந்திரம் என்றால்தான் தெரியுமே! அதாவது, பொய் சொல்லலாம்; உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசலாம்; மோசம் செய்யலாம்; நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்; அதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் எதையும் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இதற்கு ஒரு விலக்குண்டு.

 

அதாவது இவ்வளவும் தனது சுயநலத்திற்காகச் செய்யக்கூடாது; பொது நன்மைக்காக என்று செய்யலாம் என்றும் இதற்காதாரமாகவும் தாராளமாகவும் "பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனில்" என்கிற குறளையும் சொல்லி விடுவார்கள். இதை நமது லோகமான்யர்களில் அநேகர் ஒப்புக் கொண்டாலும் நமது ராஜீய வாதிகளில் 100 - க்கு 69 முக்கால் பேர் ஒப்புக்கொண்டாலும் - காரியத்தில் செய்து வந்தாலும் மகாத்மா காந்தியடிகள் மாத்திரம் இதைக் கண்டிப்பாய் ஒப்புக்கொள்வது இல்லை. இம்மாதிரி ராஜ தந்திரத்தில் அவருக்கு நம்பிக்கையுமில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் தாட்சண்யத்தாலும், வாத்சல்லியத்தாலும், கருணையினாலும் சில சமயங்களில் ஏமாந்து போய்விடுகிறார் என்று பலர் சந்தேகப்பட சொல்லிக் கொள்ளக்கூடும். ஆனால் அவரது சிஷ்யர்கள் வெகு பேருக்கு ராஜதந்திரத்தில் நம்பிக்கையுண்டு)

 

ஒவ்வொரு ஊரிலும் பிராமணர்கள் எப்படி கட்சி, பிரதி கட்சி உண்டாக்கி ஆளைத்தூக்கி ஆள்மேல் போட்டு ஒரு கட்சியில் தாங்கள் சேர்ந்துக் கொண்டு பீசில்லாமல் பேசுவதும், விலையில்லாமல் கூட தீர்ப்புக் கொடுப்பதுமாயிருக்கிறார்களோ, அது போலவே ஆங்காங்கு உள்ள பாதிரிமார்களும், தங்களுக்கு அநுகூலமாக ஒரு கட்சியில் சேர்ந்துக் கொள்ளுவதும் வழியில்லா வழியில் அவர்களது அக்கிரமங்களுக்கு அநுகூலம் செய்வதுமான காரியங்களால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள்.

 

ராஜீய விஷயங்களிலும் யார் பேரைச் சொன்னால் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தை வைத்துக்கொண்டு எப்படி நமது பிராமணர்களில் பலர் இரவும் பகலும் உள்ளத்தில் மகாத்மாவை திட்டிக் கொண்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை அழிக்க பிரயத்தனப்பட்டாலும் வெளியில் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளுகிறார்களோ அது போலும் ஒத்துழையாமைத் தத்துவத்திற்கு யோக்கியதை இருக்கிற காலத்தில் மனதில் ஒத்துழைத்து பதவியும் பணமும் சம்பாதிக்க ஆசை இருந்தாலும் ஒத்துழையாமையின் பெயரைச் சொல்லிக் கொண்டு, எப்படி தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்களோ, அது போலவே இப்பாதிரிமார்களும் மகாத்மாவின் கொள்கை உண்மையில் தங்கள் உத்தேசத்திற்கு விரோதமாயிருந்தாலும் மகாத்மா பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியத்திற்கு ஆக்கம் தேடுவதும் சுயராஜ்யக் கட்சியில் உள்ள புரட்டுகளும் பித்தலாட்டங்களும் அதை நடத்துவோரின் நாணயக் குறைவுகளும் தங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தாலும் இக்கட்சிக்கு யோக்கியதை ஏற்பட்டால் தங்கள் காரியங்களை தாராளமாய் நடத்தலாம் என்றும், இக்கட்சியின் பலனால் தங்கள் நாட்டுக்கும் தங்கள் கவர்மெண்ட்டுக்கும் நிம்மதி ஏற்பட்டு தாராளமாய் தங்கள் காரியம் நடந்தேறுமென்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அக்கட்சியையும் கட்சியாளர்களையும் பாராட்டுவதும் அநுபோகத்தில் பார்த்து வருகிறோம்.

 

அப்படிக் கில்லாமல் இருந்தால் அஹிம்சை, சத்தியம் முதலியது கொண்ட ஒத்துழையாமையைப் பற்றி குற்றம் சொல்லி இந்தியர்களுக்கு புத்தியில்லை என்று சொன்ன பாதிரிகள் பொய்யும் புரட்டும் மோசமும் கொண்ட சுயராஜ்யக் கட்சி ஏற்பட்ட பிறகு இப்போதுதான் இந்தியர்களுக்கு புத்தி வந்திருக்கிறது என்று சொல்லுவார்களா? ஆதரிப்பார்களா? என்பதை நுட்பமாய் கவனிப்பவர்களுக்குத் தெரியாமற் போகாது. இந்தியர்களுக்கு சுவாமியார், குரு, சன்யாசி, துறவி என்கிற பதங்கள் மிகுதியும் மரியாதை செய்யத்தக்கதாகி விட்டதால், நம்மை ஏய்க்க வேண்டியவர்கள் இந்த வேஷத்தைப் போட்டுக்கொண்டு நம்மை ஏய்த்துத் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகின்றார்கள். அப்படிக்கில்லாமலிருக்கும் பட்சத்தில் நம்மை ஏமாற்றி நம்மை இழிவுபடுத்தி நமது இரத்தத்தை உறிஞ்ச வந்த பாதிரி மார்களுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும், லோக குருக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மகந்துகளுக்கும் நாம் இவ்வளவு குருட்டு பக்தி வைப்போமா?

 

(குடிஅரசு-07.03.1926)