Language Selection

சென்னையில் தேர்தல் முழக்கம் தெருத்தெருவாய் முழங்குகிறது. பார்ப்பன ஆதிக்கத்திற்காக சிறீமான்கள் எஸ்.சீனிவாச அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகள், எ.ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார் முதலியவர்கள் மடாதிபதிகள் பணத்தாலும், மகந்துகள் பணத்தாலும் தெருத்தெருவாய், ஜில்லா ஜில்லாவாய்ப் பார்ப்பனரல்லாத சில கயவர்களையும் சேர்த்துக் கொண்டு தேர்தல் முழக்கம் செய்கிறார்கள். அம்முழக்கத்தில் உபயோகிக்கும் தந்திரங்கள் என்னவென்று பார்ப்போமானால், பார்ப்பனரல்லாதார் முற்போக்குக்காக ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் இயக்கங்கள் மீது, பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி தூஷணை செய்வதும், தேசத்திற்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் உழைத்து வரும் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும், பொல்லாப்புகளையும், பழிகளையும் சொல்லி அவர்களிடம் பொது ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகும்படி செய்வதுமாகவே இருக்கின்றன.

 

இதன் பயனாய்ப் பார்ப்பனரல்லாத பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் ஓட்டு பெற்று சென்னை சட்டசபை, இந்தியா சட்டசபை முதலிய ஸ்தானங்கள் பெற்று அவற்றின் மூலம் ஏற்பட்ட உத்தியோகங்கள் அதிகாரங்கள் முழுவதையும் தங்கள் இனத்தவர்களாகிய பார்ப்பனர்களுக்கே கிடைக்கும்படிச் செய்து பார்ப்பனரல்லாதாரை நுழையக் கூடாதவர்களாகவும் மற்றும் நிரந்தர ஈனஸ்திதியிலேயே இருக்கும்படியானவர்களாகவும் செய்தும் வரப்போகிறார்கள். குறிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு உழைக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், அதன் தலைவர்களில் பிரமுகர்களான சிறீமான்கள் பனகால் அரசர், ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களையும் தான் இப்போது நமது பார்ப்பனர்கள் முக்கிய விரோதிகளாய் நினைத்துக் கொண்டு அவர்களை எந்த வழியிலாவது ஒழிப்பதே தங்கள் தங்கள் கடனாய் வைத்து 'காங்கிரஸ்' 'தேசம்' 'சுயராஜ்யம்' என்கிற ஆயுதங்களை அதற்காக உபயோகித்து வருகிறார்கள்.

 

அதோடு மாத்திரமல்லாமல் சிறீமான் பனகால் அரசர் மீதும் ஏ. ராமசாமி முதலியார் மீதும் சில ஈனத்தனமான பழிகளையும் சுமத்தி வருகிறார்கள் என்றும் அறிகிறோம். அவைகள் என்ன வென்றால் தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள காரியங்களைச் செய்வதில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சொல்லி வருவதோடு சில பார்ப்பனரல்லாத பதர்களையும் கொண்டு வெளியிடங்களிலும் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன், ஓட்டல்காரப் பார்ப்பனன், பொதுப் பெண்களிடம் தூது செல்லும் பார்ப்பனன் முதலானவர்கள் உட்பட பிரசாரம் செய்யவும் இரகசிய சுற்றுத் திரவுகள் பறந்து திண்ணைப் பிரசாரங்கள் நடந்து வருகின்றன.

 

அதோடுமாத்திரமல்லாமல் தங்கள் சுயநலத்தை மனதில் வைத்து வெளிக்குப் பார்ப்பனரல்லாதார்க்கு உழைப்பதாக வேஷம் போட்டுக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து தங்கள் எண்ணம் ஈடேறாமல் ஏமாற்றமடைந்து வெளிவந்த சில பச்சோந்திகளும் இதற்குத் துணை புரிந்து வருகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. யார் எப்படி கத்தினாலும் கத்தட்டும். இதைப் பற்றிப் பொதுஜனங்களுக்கு ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லுவோம். இவர்கள் சொல்லுகிற மாதிரி பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை சிறீமான் பனகால் அரசருக்கோ சிறீமான் ஏ. ராமசாமி முதலியாருக்கோ இருக்குமானால் மலையாளக் குடிவார மசோதாவினும் இந்துமத பரிபாலன மசோதாவினும் எவ்வளவு லட்ச ரூபாய் சம்பாதித்திருக்கக் கூடும் என்பதை பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பார்த்தால் தெரியவரும்.

 

உபயோகமில்லாத வெறும் பார்ப்பனர்களுக்கு பல மடாதிபதிகளும் மகந்துக்களும் மலையாள ஜமீன்களும் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்ததாகத் தெரிகிறது. இந்தப் பார்ப்பனர்களால் இந்தக் காரியமாகும் என்ற நம்பிக்கையே இல்லாமல் சூதாடுவது போல் இவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார்கள். சிறீமான் பனகால் அரசரோ சிறீமான் ராமசாமி முதலியாரோ இந்து மத பரிபாலன சட்டத்தை முழுவதும் நிறுத்திக் கொள்ளத் தேவையில்லை; ஒரு கோவிலையும் நான்கு மடங்களையும் மாத்திரம் இச்சட்டத்திலிருந்து விலக்குவதானால் 7 - லட்ச ரூபாய் கொடுக்க ஆள்கள் இன்றைய தினமும் தயாராயிருக்கிறார்கள் என்றும், இதை முடித்துக் கொடுக்கும் தரகருக்கு பதினாயிரக்கணக்கான பொன்னும் பீதாம்பர சால்வையும் தயாராயிருக்கிறதென்றே நாம் கேள்விப்படுகிறோம்.

 

இதிலிருந்தே நூறு, இருநூறு, ஐந்நூறு வீதம் சிறு சிறு பதவிகளுக்கு பணம் வாங்குவது என்பது உண்மையானால் இந்த லட்சக்கணக்கான ரூபாயை வேண்டாம் என்று சொல்லுவார்களா? என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்கமாட்டார்களா என்கிற ஞானம் கூட இல்லாமலே இவ்வித இழிவான தன்மையில் பிரசாரங்கள் செய்கிறார்கள். அல்லாமலும் இவர்களுக்கு எதிரிடையாய் நிறுத்தப்பட்டிருக்கும் கனவான்களும் இவற்றையே வெளியில் பேசுகிறார்கள் என்றும் நமது காதுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து நமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்ய அஞ்ச மாட்டார்கள் என்பதுதான். ஜமீன்தாரர்கள் மத்தியிலும் செங்கல்பட்டு ஜில்லாவாசிகள் மத்தியிலும்தான் இவ்வித ஈனத்தனமான பிரசாரம் அதிகமாய் நடத்தப்பட்டு வருவதாகவே கேள்விப்படுகிறோம். பார்ப்பனரல்லாத மக்களுக்குள் கொஞ்சமாவது மூளை இருக்கிறது, பகுத்தறிவு இருக்கிறது என்பது வெளியாக வேண்டுமானால், அது முக்கியமாய் செங்கல்பட்டு ஜில்லாவாசிகளிடம் இருந்துதான் பார்ப்பனரல்லாதார் சமூகம் எதிர்பார்க்கிறதென்றே சொல்லுவோம்.

 

சென்னை சட்டசபைக்கு சிறீமான் ராமசாமி முதலியார் வரக்கூடாது என்கிற எண்ணங் கொண்டே நமது பார்ப்பனர்கள் செங்கல்பட்டு ஜில்லா தொகுதிக்குத் தங்கள் சார்பாகப் பார்ப்பனரல்லாதாரையே நிறுத்தி அவருக்கு எதிராய்ப் போட்டி போடச்செய்து தாங்கள் தங்கள் பணத்தைக் கொண்டும், மகந்துக்கள் பணத்தைக் கொண்டும் பிரசாரம் செய்து வருகிறார்கள். சென்னை சட்டசபையில் இப் பார்ப்பனர் போடும் கூச்சலுக்கும் அவர்கள் கிளப்பிவிடும் விவகாரங்களுக்கும், சட்ட சம்பந்தமான சிக்கல்களுக்கும் ஆப்படித்த மாதிரி பதில் சொல்லி அவர்களை அடக்கி வைக்கத் தகுந்த சக்தி சிறீமான் ஏ. ராமசாமி முதலியார் அவர்களிடம் இருப்பதினால் தான் நமது பார்ப்பனருக்கு அவர் எதிரியாய்த் தோன்றுகிறார்.

 

உதாரணமாக, சென்னை சட்டசபையில் கொஞ்ச நாளைக்கு முன் ஒரு பார்ப்பன சட்டசபை மெம்பர் ஒரு பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தரைக் கெடுக்க எண்ணங் கொண்டு அவர் பேரில் ஒரு பழியைச் சுமத்தி அதாவது குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர் தேர்தல் விஷயத்தில் பிரவேசித்திருக்கிறார்; அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும்; ஆதலால் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.

 

இதைப்பற்றி பிரமாதமாய்ப் பேசி அந்த உத்தியோகஸ்தரைப் பற்றி கெட்ட அபிப்பிராயம் உண்டாகும்படி செய்தும் அவரை ஒழிக்க சட்ட மெம்பருக்கு அதிகாரம் கொடுக்கப்போகும் சமயத்தில் சிறீமான் ஏ.ராமசாமி முதலியார் சட்டசபைக்கு வந்து விஷயம் இன்னதென்று தெரிந்ததும் உடனே ஆம், ஆம் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளவேண்டும்; இன்னும் இரண்டொரு உத்தியோகஸ்தர்களைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன் அவரையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு பார்ப்பன ஜில்லா கலெக்டர் பெயரையும் ஒரு பார்ப்பன சப் ஜட்ஜி பெயரையும் சூசனை காட்டினார். உடனே பார்ப்பன சட்ட மெம்பரே பார்ப்பன சட்டசபை மெம்பரை கெஞ்சிக் கேட்டுக் கொண்டு தன்னுடைய பிரேரேபணையை வாபீசு வாங்கிக் கொள்ளவே வெகு பாடுபடும்படி செய்து விட்டார்.

 

இம்மாதிரி அவர் ஒருவர் அங்கிருந்து கொண்டு பார்ப்பனரல்லாதார் விஷயத்திலும் பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர் விஷயத்திலும் எவ்வளவோ பாடுபட்டு வருவது பார்ப்பனர் கண்களில் ஊசி குத்துவது போல் இருப்பதால் அவருக்கு எதிரிடையாய் செங்கல்பட்டு ஜில்லா தொகுதி ஒரு பார்ப்பனரல் லாதாரையே நிறுத்தி முன் சொன்னது போல் மகந்துக்கள் பணத்தை செலவு செய்து சில பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே பிரசாரம் செய்கிறார்கள். சிறீமான் எஸ். சீனிவாசய்யங்காரும் தான் தூங்கும் போதும் சாப்பிடும் போதும் மற்றும் ஒவ்வொரு சமயத்திலும் சிறீமான் ஏ.ராமசாமி முதலியார் உருவமே தம் முன் தோன்றுவதாகவும் அவரை ஒழிப்பதே தமது வெற்றி என்றும் அந்த விஷயத்திலேயே தமது முழுக் கவனத்தையும் பலத்தையும் செலுத்தப் போவதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்காகவே இஜ்ஜில்லா மிராசுதாரர்களையும், ஜமீன்தாரர்களையும் சுவாதீனப்படுத்திக் கொண்டு உள்நாட்டு சண்டைகளையும், கட்சிகளையும் கிளப்பி விட்டுக் கொண்டும் வருகிறார்.

 

ஆதலால் செங்கல்பட்டு ஜில்லாவாசிகள் இந்த சமயம் தங்கள் புத்திகளையும் மனசாட்சிகளையும் பார்ப்பனர் சூழ்ச்சிக்கும் தந்திரத்திற்கும் பறி கொடுத்து விடாமல் நமது நாட்டு நிலைமையும் நமது பார்ப்பனரல்லாதார் வகுப்பு நிலைமையையும் கவனித்து புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ள வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா ஜமீன்தாரர்கள் தங்களை எவ்வளவு பெரிய ஜாதியார் என்று சொல்லிக் கொண்டாலும் தாங்கள் எவ்வளவு பெரிய வர்ணாசிரம தர்மி என்று சொல்லிக் கொண்டாலும், பார்ப்பனர் அகராதியில் அவர்களை சூத்திரர்கள் என்றுதான் குறிக்கப்பட்டிருக்கிறதே அல்லா மல், ஜமீன்தார்கள் வேறு பிறவி என்று இல்லவே இல்லை. ஆகையால் உள்நாட்டு கட்சி விவகாரத்தின் பலனாய் பார்ப்பனர்களின் கையாளாயிருக்கக் கூடாது என்று ஜமீன்தாரர்களையும் மிராசுதாரர்களையும் மறுமுறை வேண்டிக் கொள்ளுகிறோம்.

 

(குடிஅரசு 19.09.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_11.html