Language Selection

"திராவிடன்" பத்திரிக்கை கோயில்களைப் பற்றி ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் எழுதியதற்கு சமாதானம் எழுதுவதாவது :

 

ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியார் கடும் வர்ணாசிரமக்காரர். பிறவியில் உயர்வு, தாழ்வு உண்டு என்று கருதிக் கொண்டிருக்கிறவர். எனவே அவர் மகாத்மானவைக் கண்டிப்பதில் அதிசயமில்லை. அன்றியும் இவர் கோவில்களின் மூலம் பார்ப்பனர்களின் வாழ்வு இன்னது என்று தெரிந்தவர். இந்து மதம் என்கின்ற பெயர் இல்லாவிட்டால் இந்நாட்டில் பார்ப்பனருக்கு எவ்வித மரியாதையும் இல்லாததோடு குணத்தைப்பற்றி மக்களை வகுப்பதின் மூலம் பார்ப்பனர்கள் தீண்டாதவர்களாகி விடக் கூடும் என்பதையும் உணர்ந்தவர். ஆதலால் இவர் தன் சமூகத்தின் வாழ்வுக்காக அப்புக் கட்டுவதில் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது இவர் கடமை. ஆனால் நாம் அக்கோவில்கள் விபச்சார விடுதிகள் என்பதை விளக்க இதை உபயோகித்துக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

 

மகாத்மா காந்தி இப்போதைய கோயில்களின் நிலைமையைப் பற்றித்தான் அவ்விதம் கூறுகிறார் போல் தோன்றுகிறது. ஆனால் நாம் ஆதியில் உள்ள கோயில்களைப்பற்றியும், அதிலுள்ள சுவாமிகளைப்பற்றியும் அங்கு நடக்கும் அக்கிரமங்களைப்பற்றியும், அவைகள் ஆதியில் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றியுமே கவனித்து அப்படிச் சொல்லுகிறோம். உதாரணமாக ஆரிய சமாஜத் தலைவர் அதாவது வேகத்தைக் கூட ஒப்புக் கொள்ளுகிறவரான சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எழுதியிருக்கும் சத்தியார்த்தப் பிரகாசத்தில் இவ்விஷயத்தை நன்றாய் விளக்கி இருக்கிறார். மற்றும் சைவக் கடவுளைப்பற்றி இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சைவர்களையும், வைணவர்களையும், வைணவக் கடவுள்களைப்பற்றி அதே இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சைவர்களையும் கேட்டாலும் அல்லது அவரவர்கள் வேதசாஸ்திர புராண ஆதாரங்களைக் கொண்டு எழுதி முழங்கியிருக்கும் சைவ மத கண்டனம் என்னும் புஸ்தகங்களைப் பார்த்தாலும் தெரியவரும். அன்றியும் அந்தக் கடவுள்கள் அன்னிய ஸ்திரீகளிடம் தினமும் அக்கோவில்களில் படுப்பதும், அக்கடவுளுக்கு வைப்பாட்டிகளாக, விபச்சாரப் பெண்கள் ஏற்படுத்தப்படுவதும் அவர்கள் சுவாமிக்குத் தொண்டு செய்வது என்னும் பேரால் தங்களை அலங்கரித்துக் கொண்டு தினமும் கோவிலுக்கு வருவதும், அவர்களைப் பார்க்கவிட புருடர்கள் பக்தியின் பேரால் சாமி கும்பிட என்று அங்கு வந்து சம்மதம் ஏற்படுத்திக் கொள்ளுவதும், இவர்களைப் பார்த்து குல ஸ்திரீகளும் அலங்கரித்துக் கொண்டு வருவதும், அவர்களைப் பார்த்து நிஜமாகவே பக்திக்காக வந்த புருஷர்களும் பக்தி கெட்டு அக்குலப் பெண்களை சுவாதீனம் செய்ய முயற்சிப்பதும், ஒருவருக்கொருவர் காதல் ஏற்பட்டு தினப்படி முக தரிசனத்திலேயே ஒருவித காதல் திருப்தியை அடையக் கருதி இருவரும் பெரிய பக்தர்களாகி தினமும் கோவிலுக்குப் போக ஏற்பாடு செய்து கொள்ளுவதுமான காரியங்களை ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தங்கள் தங்களுடைய வாலிப பருவத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டால் இவை கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வரும் என்றே சொல்லுவோம்.

 

இது தவிர, சுவாமி வீட்டுக்குப் போதல், வேறு பெண்களை சிறையெடுத்து வருதல், வேறு பெண்கள் மீது காதல் கொண்டு மாறு வேஷம் போட்டுக் கொண்டு போய் அப்பெண்களை கற்பழித்து விட்டு வருதல், ஆண்சாமிகளிலேயே ஒரு சாமிக்கு மற்றொரு சாமி மேல் மோகம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கலந்து பிள்ளை உண்டாக்குதல் முதலான இந்து மத வேத சாஸ்திர புராணங்களைக் கொண்டு கோவில்கள் கட்டி இம்மாதிரி சாமிகளை அவைகளில் வைத்திருத்தல், இம்மாதிரி நடவடிக்கைகளை உற்சவமூலம் நடத்தல் ஆகிய காரியங்களை கோவிலின் தத்துவங்களைப்பற்றி நாமும், மகாத்மாவும் கூறுவதை நன்றாய் ருஜீ செய்யும். அன்றியும் கோவில் யோக்கியதை இப்படியானால், உற்சவங்கள் என்பவைகள் எதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது என்று பார்த்தால் அதிலும் கோவில்கள் எவ்வளவு தூரம் விபசாரம் விடுதி என்பது புலப்படும்.

 

மேலே சொல்லப்பட்ட மாதிரியான கருத்துக்கள் கொண்ட உற்சவத்திற்குப் போகும் பெண்ணும், ஆணும் தங்களை அலங்கரித்துக் கொண்டு போவதும் ஒருவரை ஒருவர் நாடித் திரிவதும், அன்னிய ஸ்திரீகள் சினேகமும் அன்னிய புருஷர்கள் சினேகமும் கொண்ட ஆண், பெண்கள் கோவில்களையும், உற்சவங்களையும் சங்கேத ஸ்தலங்களாக உபயோகித்துக் கொண்டு போவதும் யாவரும் அறியாமலிருக்க முடியாது. சிற்சில ஊர்களில் உற்சவக் காலங்களில் கோவில்களுக்கு வெளியில் உள்ள சுற்று விடுதிகளுக்கு விபசாரத்தின் பொருட்டு வாடகைகள் அதிகம் ஏற்படுத்துவதும் யாவரும் அறிந்ததே. அதாவது சுகாதார வசதிக்கு ஆக ஏற்படுத்திக் கொள்ளப்படும் நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு எப்படி ஒரு வருஷத்திய வாடகை இரண்டு மாதங்களுக்கு வாங்கிக் கொள்ளப்படுகிறதோ அதுபோலவே ஒரு சிறு அறைக்கு ஒரு வாரத்திற்கு 10 - 15 ரூபாய் வீதம் குடக்கூலி ஏற்படுகிறது. இந்த வாடகைகள் கோவிலுக்கு வரும் ஆண் பெண் பக்தர்களாலேயே சரிகட்டப்பட்டும் 100 - 200 ரூபாய் சம்பாதித்துக் கொண்டும் போகப்படுகிறது.

 

உற்சவ காலங்களில் சுவாமி கோவில்கள் மாத்திரமல்லாமல் அர்ச்சகர்கள் வீடுகளிலும், சில விபசார வீடுகளாக ஆக்கப்பட்டுவிடுகின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது. நல்ல அழகிய பெண்ணை மணந்த அர்ச்சகர்களிடமே அதிக யாத்திரைக்காரர்கள் போய்ச் சேருகிறார்கள். அதிக கட்டளைக்காரர்களும் ஏற்படுகிறார்கள். இதன் காரணம் என்ன? நமக்குத் தெரிய பல சமயங்களில் யாத்திரைக்காரர்களை தங்கள் வீட்டின் நடையில் படுக்க விட்டு விட்டு, பெண்களை கூப்பிட்டு "இன்று ராத்திரி எனக்கு கோவிலில் படுக்கை முறை, ஆதலால் காலையில் தான் வருவேன் வீதிக்கதவை ஜாக்கிரதையாக தாள் போட்டுக் கொள்! என்று சொல்லிப் போகிற அர்ச்சகர்களையும் நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். இவைகளில் எதை நமது ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் அவர்கள் மறுக்கிறார்கள் என்றும் கேட்கிறோம். இவர்களை கோவிலை விட்டுத் தள்ளுவதற்கு என்ன சட்டம் இருக்கிறது என்று கேட்கின்றோம். இவைகளை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால் அவர்களைப்பற்றி ஜனங்களுக்கு சாமி, பூதம், பேய், பிசாசு, கோயில், குளம் முதலியவைகளிடம் அதிலும் பாமர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டு நம்பிக்கையை ஆதாரமாய் உபயோகித்துக் கொண்டு "கோவிலைத் திட்டுகிறார்கள், நாஸ்திகம் கேசுகிறார்கள்" என்று தூற்றி மனதறிந்து அக்கிரமமாய்ப் பேசி பாமர மக்களை ஏமாற்றுகிறார்களே ஒழிய அவர்கள் இம்மாதிரியான அக்கிரமங்களை மறுக்க காரணம் காட்ட முடியுமா என்று மறுபடியும் கேட்கிறோம்.

 

கோவில்களில் கட்டளைகள் ஏற்படுத்துவதின் யோக்கியதைகள் அநேகமாய் என்ன என்று பாருங்கள்! கட்டளைக்காரன் பணம் கொடுப்பதும், வருஷத்திற்கு மும்முறை அர்ச்சகர் வீட்டில் சாப்பிட்டு விட்டு படுத்திருந்து போவதுமல்லாமல் மற்றபடி 100-க்கு 75 – கட்டளைகளின் கருத்தும், தத்துவமும் என்ன என்று கேட்கிறோம். கட்டளைக்காரன் நினைத்துக் கொண்டிருக்கிறபடி கட்டளை "பூஜை" நடக்கின்றதா? "அர்ச்சனை" நடக்கின்றதா? அஷ்டோத்திரம் நடக்கிறதா? மண்டல பூசை நடக்கின்றதா? என்றும் கேட்கின்றோம். கட்டளை அர்ச்சகர் ஊரெல்லாம் பணம் வசூலிக்கப்போவதும் அர்ச்சகர் வீட்டில் அவரது சம்சாரம் வீட்டுக்கு தூரமாகி அதாவது பகிஷ்டையாகி வேறு வேலை இல்லாமல் இருக்கும் காலத்தில் விபூதி, குங்குமம், வில்வம், மஞ்சள், நாமக்கட்டி, திருச்சூரணம், துளசி இலை இவைகளை தனித்தனி சிறுசிறு பொட்டலங்களாகக் கட்டி விலாசமெழுதி வைத்திருக்கும் காகிதத்துடன் போட்டு தபாலில் போடுவதுமல்லாமல் வேறு என்ன காரியம் நடக்கின்றது? இவ்வர்ச்சனைகளுக்கு பலன் என்ன என்றும் கேட்கின்றோம்?

 

இந்தக் கோவில், சாமி, உற்சவம், கட்டளை இவைகளுக்கு யாருடைய பணம் போகிறது? எவ்வளவு பணம் போகிறது? இவ்வளவு பணங்களும் எதற்கு உபயோகப்படுகிறது? என்று பகுத்தறிவைக் கொண்டு பார்ப்பதுடன் இதனால் சுவாமிக்காவது பக்தனுக்காவது என்ன காரியம் உண்டாகிறது என்பதையும், வாஸ்தவத்திலேயே கோவிலில் கடவுள் இருப்பாரானால் இவ்வக்கிரமங்கள் ஒரு இடத்திலாவது ஒருவராலாவது செய்ய இடம் ஏற்படுமா என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.இவைகள் தவிர கிராமக் கோவில்களில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றியோவென்றால் அது சொல்லத் தொலையாது. அர்ச்சகர் குடி இருப்பு படுக்கை சாப்பாடு முதலியவைகள் கோவில்களிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூரமான பெண்களும் அங்கேயே படுக்கிறார்கள். சுவாமி பேரால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தங்கள் எல்லாவற்றிலும் இந்த தூரமான பெண்கள் துணிகள் துவைக்கப்படுகின்றன. ஸ்நானபானமும் செய்யப்படுகிறது. சுவாமிகள் தீர்த்தம் முதலிவைகளும் அதிலிருந்தே எடுத்து சாமிக்கு ஸ்நானமும் சமையலும் செய்யப்படுகின்றன.

 

இவைகளில் எதை ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியார் மறுக்கிறார் என்று கேட்கிறோம். இது விஷயத்தில் மாத்திரம் எங்கும் சுவாமி இருப்பதாக ஒப்புக்கொள்ளும் ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் அவர்கள் "தீண்டாதவர்கள்" கோவிலுக்குப் போக ஏன் சம்மதிப்பதில்லை என்று கேட்கின்றோம்? சிங்கம், கரடி, நாய், நரி, பன்றி, பாம்பு, தேள், பூச்சி, புழு, மலம் முதலியவைகள் மலிந்து கிடக்கும் மலைமேல் கூட ஏறக்கூடாது என்கிறார்களே! அது ஏன் என்று தான் கேட்கின்றோம்?

 

(09-10-1927 "குடி அரசு" இதழில் தந்தை பெரியார் எழுதியது. "பெரியார் களஞ்சியம்" தொகுதி:2…. பக்கம்:130)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_30.html