Language Selection

உண்மையான ஒரு பொதுத் தொண்டு உண்டு என்றால் அது மக்கள் சமூதாயத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி மக்களை அறிவு வழி நடக்கச் செய்யப்படுவது தான். 2500 - ஆண்டுகளாக மக்கள் மடமையை ஒழிக்க, மக்கள் இழிவை ஒழிக்க, எவருமே முன்வரவே இல்லை. சரித்திரம் சம்பந்தமாக யாரையாவது கூற வேண்டுமானால் மக்களை மக்களாக மதிக்கச் செய்ய, இழிவு கொடுமைகளை ஒழிக்க முன்வந்தவர் புத்தர் தான்.அவர் அரச வாழ்வைத் துறந்தவர். அவரது போக்கில் சந்தேகம் இல்லாததனால் மக்கள் அவரது கொள்கையை எளிதில் ஏற்றுக் கொண்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர் கொள்கை பரவி இருந்தது. ரோடு வசதி இல்லாத காலம், காடும் மேடுமாக இருந்த காலம், போக்குவரத்து வசதி இல்லாத காலம். அந்தக் காலத்தில் தோன்றிய அவனது அறிவுப் பிரச்சாரமானது நாடெங்கும் பரவி இருந்தது.

 

புத்தருடைய புரட்சிகரமான கொள்கை பரவி வருவது கண்டு பார்ப்னர்கள் நம் மடராஜாக்களை வசப்படுத்திக் கொண்டு அந்த அறிவுமார்க்கத்தை ஒழித்து (புத்த) ஸ்தாபனங்களை எல்லாம் தரை மட்டமாகி விட்டார்கள்.புத்தர் வேறு எதுவும் சொல்லவில்லை. உன் அறிவுப்படி சிந்தித்து அதன்படி நட! மகான் சொன்னார்! ரிஷி சொன்னார்! பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதை நம்பாதே! உன் புத்தியின்படி நட! என்று தான் சொன்னார். புத்த மார்க்கத்தின் செல்வாக்கை வீழ்த்த முடியாதது கண்டு தான் பார்ப்பனர்கள் தந்திரமாக புத்த மார்க்கத்தில் பிட்சுக்களாக சேர்ந்து, அந்த மார்க்கத்தில் நச்சுக்கருத்துகளைப் புகுத்தி நாசப்படுத்தி விட்டார்கள். புத்த மடாலயங்கள், கோயில்கள் இருந்ததை எல்லாம் தரைமட்டமாக்கி அங்கெல்லாம் ஆரிய மதக் கடவுள்கள், கோயில்களை எழுப்பினார்கள்.

 

இராமன், கிருஷ்ணன் அவதாரங்களைக்,கூட எல்லாம் புத்தனுக்குப் பிறகு புத்த மார்க்கத்தை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட அவதாரங்களேயாகும். இராமாயணம் விஷ்ணு புராணம் முதலியவைகளில் புத்தனைப் பற்றிய சங்கதிகள் வருகின்றன. நம் மக்களுக்கு எல்லோருக்கும் பாகவதம் தெரியும், இராமாயணம் மற்ற புராணங்கள் தெரியும், இந்த சங்கதிகள் அதில் உள்ளதை எவன் கவலையோடு சிந்தித்துப் பார்க்கிறான்? இந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர். இந்து என்று கூறிக் கொள்ளும் எந்த ஆளுக்கு வேதம் தெரியும்? சங்கராச்சாரியே சொல்லுகிறார் இந்து என்பது தப்பு. "வேதமதம்" என்று சொல்லுவது தான் சரி என்கிறார்.

 

வேதமே தெரியாத நமது முண்டங்கள் நான் இந்து என்று கூறிக் கொள்ளுகின்றார்களே? முஸ்லிம் இருக்கிறான் உன் மதம் எது என்றால் இஸ்லாம் மதம்…. அதற்கு வேதம் குரான் என்கிறான். எப்போது எற்பட்டது? 1400 - ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது என்கிறான்.கிறிஸ்தவன் என் மதம் கிருஸ்தவம் எனது வேதம் பைபிள் என்கிறான். ஏற்பட்டு 1962 - ஆண்டுகள் ஆகிறது என்கின்றான். இந்து என்கின்ற உன் மதத்துக்கு ஆதாரம் எது? எப்போது ஏற்பட்டது? வேதம் என்றால் நீதான் வேதத்தைக் காதால் கேட்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறாயே இப்படி இருக்க நீ ஏன் இந்து என்று கூறிக் கொள்கின்றாய்? இப்படிக் கேட்டு அறிவுப்படி சொந்தப் புத்திப்படி நட என்று கூறுகின்றவர்களை எல்லாம் பார்ப்பான் நாஸ்திகர்கள் என்று எழுதி வைத்து விட்டார்கள்.

 

"சைவன்" எல்லாரும் சிவன் தென்னாட்டுக் கடவுள், தென்நாடு உடைய சிவன் தான் எந்நாட்டுக்கும் கடவுள் ஆனான் என்று பீற்றிக் கொள்ளுகின்றனர். இந்த சிவன் இந்நாட்டுக் கடவுளும் அல்ல. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. வெள்ளைக்கார நாட்டான் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்படுத்திய கடவுளாகும். மேல்நாட்டுக்காரன் காட்டுமிராண்டிக் காலத்தில் உண்டாக்கிய கடவுளை மாட்டு மேல் ஏற்றி வைத்துக் கொண்டு காண்பித்தான். இதற்குப் பேர் (Father God) என்று அழைத்தான். அதுபோலவே தான் மாட்டு மேல் ஏற்றி வணங்குகின்றோம். நாம் சிவன் மனைவி காளி என்கிறோம். இந்தப் பெண் பிள்ளைக் கடவுளைத் தான் வெள்ளையன் (Mother God) என்று அழைத்தான். சிங்கத்தின் மேல் ஏற்றி அதன் கையில் சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறான். அதைத்தான் நம் நாட்டில் காளி என்று பெயர் இட்டு சிங்கத்தில் ஏற்றி சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். வெள்ளையன் "Father God, Mother God" என்று அழைத்ததைத் தான் நமது சைவன் அம்மையே! அப்பனே! என்று பாடித் திரிகிறான். வெள்ளையன் காட்டுமிராண்டிக் காலத்திய கடவுள்களை எல்லாம் விட்டு விட்டு இன்று ஒரே கடவுள் என்ற நிலைக்கு வந்து விட்டான். நாசமாப் போன நம் நாட்டவர்கள் தான் இந்தக் காட்டுமிராண்டிக் காலத்துகடவுள்களையெல்லாம் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.

 

ஒரு கடவுள் இரண்டு கடவுளா? ஆயிரக்கணக்கான கடவுள்கள். பல உருவங்கள் கழுகு, குரங்கு, பன்றி, பாம்பு, இவை எல்லாம் கடவுள்.முஸ்லிமும் கிறிஸ்தவனும் ஒரே கடவுள் ஒன்றும் வேண்டாதவர். உருவமற்றவர். அருளானவர்! அன்பானவர்! என்கின்றான். உன் கடவுள் அப்படியா? 6 - வேளை சோறு! வருஷா வருஷம் கல்யாணம்!கருமாதி, வைப்பாட்டி இவை எல்லாம் செய்து கொடுக்கின்றானே! அன்பே சிவம் வெங்காயம் என்று கூறிக் கொண்டு கடவுள் கையில் அரிவாள் கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், கொட்டாபுளி, சக்கரம்,இவற்றைத் தானே கொடுத்து இருக்கின்றாய்? அருளும் அன்புமானகடவுளுக்கு இவை ஏன்? கடவுளுடைய அருமை என்னடா என்றால், எங்கள் கடவுள் 1000 - பேரைக் கொன்றது 2000 - பேரைக் கொன்றது என்று கூறுவது தான்.

 

(19-07-1962 அன்று நெல்லை மாவட்டம் களக்காட்டில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு."விடுதலை"- 26-07-1962)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_31.html