Language Selection

மக்கள் சமூக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள், எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள் என்று பார்த்தால், நடைமுறையிலுள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள்தனமானவையென்றே சொல்லலாம். நான், ஏன் இங்கு இந்த ஜீவகாருண்யக் கூட்டத்திற்கு வந்தேன் என்று சிலர் கேட்கலாம். உண்மையிலேயே இங்கு கடலாடியில் நடக்கும் யாகத்தில் ஏதோ சில அய்ந்தோ, பத்தோ ஆடுகள் கொல்லப்படுவதை நான் பிரமாதமாகக் கருதி இங்கு வரவில்லை. லட்சக்கணக்கான ஆடுகள், மாடுகள் மற்றும் சில ஜீவன்கள் தினமும் கொல்லப்படுவது எனக்குத் தெரியும்.

அப்படி இருக்க பின் ஏன் நான் இங்கு வந்தேன் என்றால், யாகத்தின் புரட்டையும், அது செய்யப்படுவதன் உள் எண்ணத்தையும், அதனால் ஏற்படும் பலன்களையும், ‘உயர்ந்த சாதியார் - அகிம்சா தர்மமுள்ள அந்தணர்' என்று கர்வமுடன் தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டவும், கொல்லப்படும் பிராணிகள் யாகத்தின் போரால் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பதையும் ஜனங்களுக்கு அறிவித்து, இப்படிப்பட்ட கொடுமையான சித்திரவதை இனி நிகழாமல் இருக்கும்படி செய்ய, சர்க்காரைத் தூண்டுவதற்காகவுமே வந்திருக்கிறேன்.

முதலில், கொலைக் கொடுமைகளைப் பற்றிச் சொல்லுகிறேன். யாகத்தில் கொல்லப்படும் ஆடுகள் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பது தங்களுக்குச் சிலருக்காவது தெரிந்திருக்குமென நினைக்கிறேன். நான் அறிந்தமட்டில், ஆட்டைக் கால்களைக் கட்டிக் கீழே தள்ளி, கொம்பைப் பிடித்து ஒருவர் அமிழ்த்திக் கொண்டு, வாய்க்குள் மாவைத் திணித்துக் கொண்டிருக்க - ஒருவர் நன்றாகக் கட்டி மூச்சுவிடாமல் சப்தம் போடாமல் செய்து, ஒருவர் விதர்களைக் கிட்டிபோட்டு நசுக்க - மற்றவர் வயிற்றில் ஆயுதங்களால் இடித்துக் கிழித்து அதன் சிற்சில உறுப்புகளைத் தனித் தனியாய் அறுத்து எடுப்பதன் மூலம் கொல்லப்படுகிறது. இது, சகிக்கக் கூடியதா? உயிர்களிடத்தில் அன்பு காட்டக் கூடிய சாதியார் செய்யக் கூடியதா? அகிம்சைக்காரர்களுக்கு ஏற்றதா? இப்படிப்பட்டவர்கள், மேல் சாதிக்காரர்களா? இவர்களுக்கு பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுண்டா? யோசித்துப் பாருங்கள்! ஆடு, கோழிகளைத் தலைகீழாகப் பிடிப்பதையும், தரதரவென்று இழுப்பதையும் ஜீவ இம்சை என்று சட்டஞ் செய்து அம்மனிதர்களைத் தண்டிக்கும் சர்க்கார் இவர்களை என்ன செய்ய வேண்டும்? ஆலையிலிட்டு நசுக்கும்படி சட்டம் செய்தால் அதைத் தப்பு என்று சொல்ல முடியுமா? யோசித்துப் பாருங்கள்!

இந்த யாகம் ஆட்டுக்கு மாத்திரமில்லையாம். மாடு, மனிதர், குதிரை முதலியவைகளுக்கும் உண்டாம். இப்படியே விட்டுவிட்டால் நாளைக்கு இந்த ஆடுகளின் கதியேதான் மனிதர்களுக்கும் ஏற்படும். மத சம்பந்தத்தில் அரசாங்கம் நுழைவதில்லை என்று சொல்லி, அரசாங்கம் சுலபமாய்த் தப்பித்துப் கொள்ளலாம். ஆனால், நாளைக்கு நாமே யாகம் செய்து 10, 20 மனிதர்களை இந்தப்படி சித்திரவதையான கொலைபாதகம் செய்தால், மதத்தில் பிரவேசிக்காமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டு இருக்குமா? அதுபோலவே இப்போது கருதி, இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான சித்திரவதைக் கொலைகளையும், இம்சைகளையும் அரசாங்கம் ஏன் நிறுத்தக் கூடாது?

தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும்போது, ராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. ராவணனையும் அவன் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி, அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்! ராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாகமேயாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்ததற்காகத்தானே கொல்லப்பட்டிருக்கிறாள்? இந்த மாதிரிக் கொலைபாதக யாகத்தை யார்தான் கெடுக்கத் துணியமாட்டார்கள்? யாகத்தைக் கண்டு மனம் வருந்தி, பரிதாபப்பட்டு, அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?

இது நிற்க; இந்த யாகங்கள் புண்ணிய காரியங்களாம்! சொர்க்கத்திற்குக் காரணமானவைகளாம்! புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள்! ஜீவன்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும், சொர்க்க லபிதமாகவும் இருந்தால் - இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம், சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்துக் கால் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் மண்ணை அடைத்து, விதரைப்பிடித்து நசுக்கிக் கொன்றுபோட்டால் புண்ணியமும் சொர்க்கமும் கிடைத்து விடும்போல் இருக்கிறது. சொர்க்கம், நரகம் என்பவைகள் சோம்போறிகளின் வயிற்றுப் பிழைப்புச் சாதனங்கள் என்று பல தடவைகள் நான் சொல்லி வந்திருக்கிறேன். பாடுபட்டு உழைத்தவன் பொருளை, கையைத் திருக்கிப் பிடுங்கிக் கொள்வதற்குப் பதிலாக, சொர்க்க நரகங்கள் எனும் பூச்சாண்டிகளைக் காட்டிப் பயப்படுத்திப் பிடுங்கிக் கொள்ளப்படுகின்றது. இப்படிப்பட்ட சொர்க்க, நரகத்திற்கு உண்மையான அர்த்தம் நல்ல விதத்தில் செய்ய வேண்டுமானால், மனிதனின் மூர்க்க சுபாவமும், பழிவாங்கும் தன்மையும் சொர்க்கம், நரகம் என்னும் வார்த்தைகளால் கற்பனைகளாகப் பிரதிபலிக்கின்றன என்பதாகும்.

சென்னையில் 3.6.1934இல் ஆற்றிய உரை. ‘புரட்சி' 10.6.1934
http://www.keetru.com/rebel/periyar/24.php