Language Selection

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்' என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்' என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ' என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்' என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்' என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன்.

தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.

இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலையில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய்விடுகிறது.

சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட, நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது, அறிவுடைய மக்களின் தலையாயப் பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாததாலேயே நம் நலத்துக்கு மாறான சேதிகளும், உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டு விட்டதுடன், அவைகளையே பொருள் கொடுத்தும், காலத்தையும் ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து, அறிவும் மானமும் கெட்டு, முற்போக்கும் தடையுற்றுக் கீழ் நிலைக்கு வர வேண்டியவர்களானோம்.

சென்ற மாதம் சென்னையில் நடந்த தமிழ் இசை மாநாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் ஒரு பெரிய திருநாள்போல் நடந்தது; பல பதினாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் 4, 5 மணி நேரம் செலவழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப் போனார்கள். வள்ளல் அண்ணாமலையார் உணர்ச்சியும் ஊக்கமும் ஆழ்ந்த சிந்தனையும், அவர்களது பந்துமித்திரக் குழாங்களும், அறிஞர் சண்முகம் அவர்களது அறிவுரைகளும் ஆற்றல்களும் எல்லையின்றிப் பயன்படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து அவர்களது வாய்க்கு ஆவிகூட வெளிப்படமுடியாதவாறு ஆப்புகள் சம்மட்டியால் அறையப்பட்டன. வெற்றிக் கொடி ஆகாயத்தை அளாவிப் பறந்தது.

ஆனால், விளைந்த பயன் என்ன? ஏற்பட்ட படிப்பினை என்ன? இம்மாநாடு, பண்டிதர்களைத் தமிழில் பஜனைப் பாட்டுகளைத் தொடுக்க வைத்தது; இசைவாணர்களை (பாட்டுத் தொழில்காரர்களை) வீட்டில் தனிமையில் உட்கார்ந்து பாட்டுகளைப் பாடிப்பாடிப் பழக்கம் செய்து கொள்ளச் செய்தது; இந்தப்படியான தமிழ் பஜனைப் பாட்டுப் பாடத் தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சியை நமது செல்வவான்கள் பலருக்கு ஊட்டியது; இசை நுகரச் செல்லும் மக்கள் பலருக்கும் (இந்த இசைவாணர்) தமிழில் இசை இசைக்கிறாரா அல்லது வேறு மொழியில் இசைக்கிறாரா - வேறு மொழியில் இசைத்தால் கலவரம் செய்யலாமா என்கின்ற சிந்தனையைச் சிலருக்கு ஊட்டிற்று என்பனவாகிய இவை ஏற்பட்டன என்றே வைத்துக் கொள்ளலாம்.

இவற்றால் சகல உயர்வும், தகுதியும் இருந்து ஒரு சிறு கீழ் மக்கள் குழுவால் இழி மக்களாய்க் கருதப்பட்டு, சுரண்டப்பட்டு, மானமற்று நடைப்பிணங்களாய்க் கிடக்கும் தமிழ் மக்களுக்கு, இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ஊசி முனை அளவு பயன் ஏற்பட்டதா என்று வணக்கத்தோடு கேட்கிறேன். நலம் பெறுவதற்கு வழி சிறிதும் இல்லாவிட்டாலும், கேட்டிற்காவது சரிவு வழி ஏற்படாமல் போயிற்றா என்று கேட்கிறேன்.

இவ்வளவு பொருளும், ஆற்றலும், மதியும், மற்றதும் செலவழித்ததற்கு நாம் கண்ட பயன் என்ன? நாட்டில் உள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒரு காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீப தூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்துப் பஜனைப் பாட்டுகள் பாடச் செய்வதும், அதன் மூலம் மக்களுக்குப் பக்தி புகட்டுவதுந்தானா? இது யார் செய்யவேண்டிய காரியம்? எதற்கு ஆகச் செய்ய வேண்டிய காரியம்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்?

(சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7.2.1944 அன்று ஆற்றிய சொற்பொழிவு.)

http://www.keetru.com/rebel/periyar/53.php