Language Selection

ஆதிதிராவிடர் மக்களும் மனிதர்களே; ஆயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களை விடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகிறீர்கள். இதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாகவும், ராவ் சாகிப்களாகவும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயும் இருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளும் இருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த சாதியை ஒட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றீர்கள் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அது, சாதி வித்தியாசக் கொடுமையே ஆகும்.

ஒவ்வொருவரும், ‘நமக்கென்ன? நம் பிழைப்பிற்கு வழியைப் பார்ப்போம்' என்று இழிவிற்கு இடங்கொடுத்துக் கொண்டு போகும் வரை, சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. சாதிக் கொடுமைகள் ஒருபோதும் ஒழிய மார்க்கம் ஏற்படாது என்பது திண்ணம். சாதிக் கொடுமைகளை ஒழித்து சமத்துவத்தினை நிலைநாட்டும் பொருட்டுத் தான், சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சுயமரியாதை இயக்கத்தினால் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் அவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு, சாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமூக முன்னேற்றத்துக்கும், விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர புராணங்களையும் சுட்டெரிக்க, சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் தயாராய் இருக்கிறோம். மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால், அது எந்த மதமாயிருந் தாலும் அதனை ஒழித்துத்தான் ஆகவேண்டும்.

‘கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார். சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார். அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார்’ என்று கடவுள் மேல் பழிபோட்டு, கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு, அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அனுகூலமாயும் இருக்கும் கடவுளைதான் ஒழிக்க வேண்டும் என்கிறோம். கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் – கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்கு உட்பட்டுக் கேவலமாகத்தான் இருக்க வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்த கடவுளும், மதமும் போகவேண்டியதுதான். இதை ஒளித்துப் பேசுவதில் பயனில்லை.

நமது பெரியார்கள் சொல்லியவை கணக்காக வாயளவில் பாராயணம் செய்யப்படுகின்றனவே அன்றி, செய்கையில் அதனால் ஒரு பலனும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை. இன்றைக்கும் சாதிக் கொடுமையினால், இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப் பட்டுவிடும்; அவன் அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன. ஒருவர், ‘ஆதிதிராவிடர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனரா? இல்லை இல்லை. நந்தனாரை நாங்கள் அறுபத்து நாயன்மார்களுள் ஒருவராகப் பூசித்து வரவில்லையா?’ என்று வாய் வேதாந்தம் பேசுகின்றார். ‘பறையனாய் இருந்த நந்தனார் திருநாளைப் போவார் ஆகிவிடவில்லையா? அப்படியிருக்க புராணத்தை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?’ என்கிறான்.

அந்த அறிவாளி அந்த நந்தனுடைய பின் சந்ததியினராகிய பேரப் பிள்ளைகளை, அந்த திருநாளைப் போவாராகிய நந்தன் இருக்கும் இடத்தைக்கூட ஏன் பார்க்க விடுவதில்லை? அப்படிக் கேட்டால் அந்த நந்தன் வேறு ஜென்மம், இவர்கள் வேறு’ என்று பல புராணப் புரட்டுகள் பேசுகின்றார்கள். ஆலயங்களின் பெயரால் செய்யப்படும் அக்கிரமங்களுக்கும், கொடுமைகளுக்கும் எல்லையில்லை. உதாரணமாய், மதுரை மீனாட்சி கோயிலை எடுத்துக் கொள்வோம்.

அக்கோயிலின் ஒரு கோபுர வாசலுக்குக் குறைந்தது அரை மைலுக்கு அதிகமான தூரமிருக்கும். இவ்வழி சாதாரண ரஸ்தாவைவிட அகன்று வண்டிகள் தாராளமாய்ப் போய் வரத்தக்கதாய் இருக்கின்றது. இவ்வழியாகப் பிற மதத்தினரான முஸ்லிம் மக்களும், கிறித்துவர்களும் மிதியடி போட்டுக் கொண்டு துவஸ்தம்பம் வரையிலும் தாராளமாகப் போக அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்துக்களாகிய நாடார்கள் என்னும் வகுப்பாரும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் மட்டிலும், அந்தக் கோயில் மதில் சுவர் அருகில் வந்தாலும் சாமி செத்துப் போகும் என்கிறார்கள். அது சாமியா? போக்கிரித்தனமா? நம்முடைய உதவி வேண்டும்போது, இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நம் சுதந்திரத்தையும், உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகும் என்பதும் என்ன அயோக்கியத்தனம்?

(3.8.1929 அன்று கண்ணப்பர் வாசக சாலை திறப்பு விழாவில் பெரியார் ஆற்றிய உரை)

http://www.keetru.com/rebel/periyar/82.php