Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

09_2005.jpgகுர்கானில் ஹோண்டா தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்தியுள்ள கொலைவெறியாட்டத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை ஆதரித்தும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராட தொழிலாளி வர்க்கத்துக்கு அறைகூவல் விடுத்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

 

 

மு சென்னையில், 30.7.05 அன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், ""இது வெறும் போலீசு வெறியாட்டமோ, தொழிற்சங்க உரிமை பறிப்பு குறித்த பிரச்சினை மட்டுமோ அல்ல. நாடு முழுவதும் ஏவிவிடப்பட்டிருக்கும் மறுகாலனியாதிக்கத்தின் கொடிய விளைவுதான் இது. இந்த உண்மையை உணர்ந்து தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்'' என்று உரையாற்றிய முன்னணியாளர்கள் குறிப்பிட்டனர். வர்க்க உணர்வோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமைச் சங்கங்களின் இணைப்பு சங்கங்களின் பிரதிநிதிகளும், திரளாகத் தொழிலாளர்களும் பங்கேற்றனர்.


மு ஓசூரில் 3.8.05 அன்று மாலை காந்தி சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமையேற்று உரையாற்றிய தோழர் சீனு. இரவிச்சந்திரன், பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், நவீன கொத்தடிமைத்தனமும் அடக்குமுறையும் பெருகி வருவதையும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகச் சட்ட வரம்பை மீறிப் போராட வேண்டிய அவசியத்தையும் விளக்கினார். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணித் தலைமையாக தம்மைக் காட்டிக் கொள்ளும் எந்தவொரு தொழிற்சங்கமும் குர்கான் தாக்குதலுக்கு எதிராக எதுவும் செய்யாத நிலையில், பு.ஜ.தொ.மு. நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

 

மு புதுவையில், பு.ஜ.தொ.மு.வின் இணைப்பு சங்கமான, காட்ரெஜ் சாராலீ ஊழியர் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கும் மேட்டுப்பாளையத்தில் 8.8.05 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். முன்னணியாளர்களும் தோழமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றிய இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளாகத் தொழிலாளர்கள் பங்கேற்றதோடு, வர்க்க உணர்வோடு எந்தச் சங்மும் இப்படி பிரச்சாரமும் ஆர்ப்பாட்டமும் நடத்தியதில்லை என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டனர்.


தகவல்: பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.