Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தின் அரசியல்வாதிகளில் சந்தர்ப்பவாதத்திலும், பிழைப்புவாதத்திலும், காரியவாதத்திலும்,  பச்சோந்தித்தனத்திலும், பொறுக்கித்தின்பதிலும் கொட்டை போட்டவர் ராமதாஸ். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இந்த வாதங்களில் ராமதாசை மிஞ்சமுடியாது என்றாலும் அது மிகையல்ல.


தனது குடும்பத்தினர் அரசியலுக்கும் கட்சிப் பதவிகளுக்கும் வரமாட்டார்கள் என்றும் அப்படி வந்தால் தன்னை முச்சந்தியில் செருப்பால் அடிக்கலாம் என்று சவடால் அடித்தவர், தமிழனுக்கு மறதி அதிகமென்பதாலும், நினைவு வந்தாலும் அடிக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கையாலும் தனது மகன் சின்னய்யா அன்புமணியை வாரிசாக்கி கேபினட் அமைச்சராக்கியும், தமிழோசை நாளிதழ், மக்கள் டி.வி அனைத்திலும் தனது குடும்பத்தினரை வைத்தும் பா.ம.க கம்பெனியை நடத்துகிறார்.

பா.ஜ.க அமைச்சரவையிலும், காங்கிரசு அமைச்சரவையிலும் வளமான துறைகளைப் பெற்று தைலாபுரத்தின் சொத்துக்களை பிரம்மாண்டமாக விரிவாக்கினார். குறுகிய காலத்திலேயே நாளிதழ், டி.வி என தனது சுயநலத்தையே பொதுநலமாக பிரச்சாரம் செய்ய பலகோடி முதலீட்டில் உருவாக்கிக் கொண்டார். இவையெல்லாம் தொலைந்து போகட்டும்.

 

ராமதாஸ்-ராமதாசு-ராமனடிமை

 

தற்போது ஈழப்பிரச்சினையில் காங்கிரசும், கருணாநிதியும் துரோகமிழைத்துவிட்டனர் என அவர்களோடு கூடிக்குலாவியதை மறைத்துவிட்டு வெட்கம் கெட்ட முறையில் கூச்சநாச்சமின்றி பேசிவருகிறார். அவரது மக்கள் தொலைக்காட்சியில் தேர்தலுக்கு முந்தைய நாளான இன்று 12.05.09 முழுவதும் ஈழத்தின் துயரக்காட்சிகளை திரும்பத் திரும்பக் காட்டி மாம்பழத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். ஈழத்தின் மக்கள் பிணங்களாகவும், ஊனமுற்றவர்களாகவும், அழுது அரற்றுபவர்களாகவும் இருக்கும் காட்சியை இதயத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் காட்டி இந்தப் போரை நிறுத்தமுடியாத, போருக்கு உதவி செய்கின்ற இந்திய அரசு, காங்கிரசு கட்சி, இவர்களுக்கு துணைபோகின்ற கருணாநிதி ஆகியோரை இந்தத்தேர்தலில் விரட்டி அடிக்கவேண்டுமென அந்தப் படத்தில் காட்டப்படுகிறது.

காங்கிரசுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்திருந்த ஒளிக்குறுந்தகடுகளை மக்களிடம் காட்டுவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை வைத்து அந்தக் குறுந்தகடுகளை திரும்பத் திரும்ப மக்கள் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். இங்குதான் ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களை வைத்து கறிவியாபாரம் செய்யும் ராமதாசின் ஆபாசம் திருத்தமாக வெளிப்படுகிறது.

2006இலிருந்தே இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான போரை துவக்கி அதன் பெயரில் ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்று வருகிறது. சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் அந்த இன ஒழிப்புப் போர் உச்சத்தை அடைந்திருக்கிறது. இதற்கு ஒத்தூதுகின்ற மத்திய அரசில் இவ்வளவு நாட்களும் பொறுக்கித் தின்ன ராமதாசின் அமைச்சர்கள் எவரும் காபினட் மீட்டிங்கில் கூட ஈழத்தைப் பற்றி வாய்திறந்ததில்லை. இந்த உண்மையை செட்டி நாட்டு சிதம்பரம் போட்டுடைத்தார்.

ஆக ஐந்து ஆண்டுகளும் சம்பாதித்துவிட்டு, அப்போது ஈழத்தின் மக்களைக் கொல்லும் பணிக்கு உதவும் இந்திய அரசில் பங்கேற்று விட்டு அல்லது ஈழத்தின் மக்களை அழிக்கும் பணிக்கு தலைமையேற்றுவிட்டு இப்போது அதுவும் தேர்தல் அறிவித்த பிறகு அ.தி.மு.க கூட்டணியில் சேருவதற்காக பதவி விலகி அப்போதும்கூட காங்கிரசு, மன்மோகன் சிங், சோனியா பற்றி எந்த விமரிசனமும் செய்யாததோடு நிற்காமல் அவர்களை மனங்குளிரப் பாராட்டிவிட்டு இப்போது தேர்தலுக்காக அவர்கள் துரோகிகளாம், அதற்காக தமிழக மக்கள் ராமதாசுக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் தமிழனே அந்த அளவுக்கு நீ கேனயனாக இருக்கிறாய் என்றுதானே பொருள்?

புதுவையில் திரைப்படத்துறையினர் நடத்திய கூட்டத்தில் இயக்குநர் சீமான் உணர்ச்சி பொங்க ஈழத்தின் துயரை வருணித்துவிட்டு அதை துடைக்கவும், அதற்கு காரணமான காங்கிரசைத் தோற்கடிக்கவும் மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இவ்வளவு நாளும் அந்த மாம்பழம் கையுடன் இணைந்து ஈழத்தில் குண்டு வீசிய கதை சீமானுக்கு தெரியாதா? காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டுமென்றால் அந்த காங்கிரசுக்கு முந்தாநாள் வரை தொள்கொடுத்திருக்கும் ராமதாசை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசியிருந்தால் சீமானின் பேச்சில் அர்த்தமிருக்கும். இல்லை நாளைக்கே தேர்தல் முடிந்து ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி சேரமாட்டார் என்பதற்கு அவரது ட்ராக் ரிக்கார்டே ஆதாரத்துடன் பதிலளிக்குமே?

இப்போது நம் கேள்வி ராமதாசுக்கல்ல, மாறாக அவரை சொக்கத்தங்கமாக தமிழீழத்தின் புனிதத் திருவுருவமாக கட்டியமைக்கிறார்களே தமிழின ஆர்வலர்கள் அவர்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும். நாளைக்கு தேர்தல் முடிந்ததும் பா.ம.க வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்வோம். அப்போது ராமதாசு ஈழப்போரை நிறுத்தியாக வேண்டும். இல்லையேல் அரசியல், பதவிகள் எல்லாவற்றையும் துறக்க வேண்டும். இவை நடக்காத பட்சத்தில் ராமதாசுக்கு வால்பிடிக்கும் திருப்பணியில் ஈடுபட்டவர்கள் அதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியவர்கள் இப்போதே அவர்களுக்குரிய தண்டனை என்ன வேண்டும் என்பதை அறிவித்துவிட்டால் நல்லது.