Language Selection

புதிய கலாச்சாரம்

நேரு அரசாங்கத்தின் பெரிய இராணுவ நடவடிக்கைகள் இருந்த போதிலும், நவீன ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தாலும், ஒட்டு மொத்தக் கொலைகள் நடைபெற்ற போதிலும், மக்கள் மீதான பயங்கரமான நடவடிக்கை இருந்தபோதிலும் தெலுங்கானா இயக்கம் பீடு நடையுடன் முன்னேறியது.

விடுதலைக்கான அவர்களின் போராட்டம், தெலுங்கானா அல்லது ஆந்திர மக்கள் முழுமைக்கும் மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவருக்கும் தெலுங்கானா பேரியக்கம் மதிப்புமிக்க பல பாடங்களைத் தந்துள்ளது.

மலேயாவிலிருந்த கம்யூனிஸ்டு கொரில்லா இயக்கத்தை ஒடுக்க பிரிக்குனுடைய திட்டத்தை பிரிட்டிசு ஏகாதிபத்தியம் மலேயாவில் கையாண்டது. நேரு அரசாங்கம், காட்டுப்பகுதியில் கோயா மக்களின் இயக்கத்தை ஒடுக்குவதற்காக இந்தக் கொடுமையான திட்டத்தைக் கையாண்டது.

இராணுவம், காட்டுப் பகுதிகளிலும் நுழைந்து இராணுவ முகாம்களை நிறுவியது. காட்டுப் பகுதிகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் வளர்ந்துவரும் மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதற்கு கொடுமையான முறைகளைக் கையாண்டது. இந்தக் காலகட்டத்திலும், மக்களும் படைகளும் தீரத்துடன் இராணுவத்தை எதிர்த்தனர்.

கோயா மக்களின் மீதிருந்த பல்வேறு வகையான கொடுமையான சுரண்டல்களைப் பற்றி கட்சி பொறுமையாக விளக்கியது. எதிரிகளுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டுமென்று விவரித்தது. அப்போராட்டங்களின்மூலம் எல்லாவகைச் சுரண்டல்களிலிருந்தும் எவ்வாறு விடுதலை பெற முடியுமென்று கட்சி விளக்கியது. கட்சியின் அரசியல் நோக்கங்களையும், தெலுங்கானா இயக்கத்தைப் பற்றியும் அவர்களுக்குக் கட்சி சொல்லிக் கொடுத்தது. காடுகளில் படைகள் சேகரிக்கப்பட்டவுடன், ஊழல் நிறைந்த காட்டு அதிகாரிகளும், வியாபாரிகளும், நிலப்பிரபுக்களும் காட்டுப் பகுதியை விட்டு ஓடினர்.

கட்சி முடிவுப்படி சில படைகள் மட்டுமே சமவெளிகளில் தங்கியது. மற்ற பெரும்பான்மையான படைகள் காட்டிற்குள் சென்று தங்கின.


கிரிஜன்களுடைய நிலைமைகள்

 

காடுகளில் முக்கியமாக கோயாக்கள், செஞ்சுக்கள், காடுகளுடன் தொடர்பான கைத்தொழிலைச் சார்ந்திருந்தவர்கள் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். ஆரம்பத்தில் கோயாக்கள், மக்கள் படைகளை நம்பவில்லை. கோயா மக்களின் நிலைமைகள், அவர்களுடைய ஏழ்மைகளைத் தீர்க்க கட்சி நடத்தும் போராட்டங்களின் நோக்கங்கள் ஆகியவற்றைப் பொறுமையாக விளக்கிய பின்னரே, கோயா மக்கள் படைகளை நம்பத் தொடங்கினர். "பொடு' விவசாயம், கால்நடை உற்பத்தி, காட்டுப் பொருட்களைச் சேகரித்தல் ஆகியவை மக்களின் முக்கியமான வேலைகள். அவர்களால் இவற்றை நம்பி வாழ்க்கை நடத்த முடியவில்லை. அதனால் அவர்கள் உயிர்வாழ காட்டு வேர்களையும் மற்றவற்றையும் நம்பியிருந்தனர். காட்டுக் குத்தகைக்காரர்கள், காட்டு அதிகாரிகள், வியாபாரிகள், முட்டார்லு ஆகியோர் காடுவாழ் மக்களை பல்வேறு முறைகளில் சுரண்டி வந்தனர். காட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு வகையான கொத்தடிமைகளாக இருந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை காட்டிலேயே கழித்து வந்தாலும், அவர்களுக்கு (கிரிஜன்களுக்கு) விவசாயக் கருவிகளையோ, அல்லது காடுகளிலிருந்து கிடைக்கும் வீட்டிற்குத் தேவையான பொருட்களையோ பெறுவதற்குக் கூட உரிமை இல்லை. அவர்கள் "பொடு' நிலங்களை தாங்கள் வாங்கிய கடன்களின்மூலம் வியாபாரிகளிடம் இழந்தனர். இதனால் வியாபாரிகள் நிலப்பிரபுக்களாக உயர்ந்தனர்.

1949 இறுதி வரைக்கும் எல்லா இடங்களிலும் மக்களிடமிருந்தும், மக்களுடைய படைகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பை இராணுவம் சந்தித்தது. 5060 இராணுவத்தினர் கூட கிராமத்திற்கு வந்து திரும்ப முடியவில்லை. இதனால் இராணுவம் தனது தந்திரங்களை மாற்றிக் கொண்டது. ஒரே சமயத்தில் 5000லிருந்து 6000 வரையிலான இராணுவத்தினர் சேர்ந்து கொண்டு 5 அல்லது 6 கிராமங்களைச் சுற்றி வளைத்து தேடும் படலம் கொண்ட திட்டத்தை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல், சுற்றி வளைத்துத் தாக்குவது என்று சொல்லப்படும். அவர்கள் இவ்வாறாக ஒவ்வொரு பகுதியையும் தேடினர்.

காங்கிரசு ரஜாக்கர் குண்டர்களின் உதவியுடன் யூனியன் இராணுவம் கிராமங்களின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் படை உறுப்பினர்களையும், கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் கைது செய்வதற்காக, கொரில்லாக் குழுக்களின் மறைவிடங்களைத் தேட மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டது. இவர்கள் மக்களை சித்திரவதை செய்தனர். இந்தச் சூழ்நிலையில் மக்களும், படைகளும் சாதாரண ஆயுதங்களை வைத்துக் கொண்டே தடுத்தனர். அவர்கள் தீவிரமாகப் போரிட்டனர். சில வீரர்கள் போராட்டத்தில் வீழ்ந்தனர். ஆனால் இந்த இழப்புக்களினால் மக்களுடைய எதிர்ப்பு பலவீனமடையவில்லை. இராணுவம் வரும் பாதைகளில் மறைந்திருந்து திடீரெனத் தாக்கி பல வெற்றிகளைப் பெற்றனர்.

யூனியன் இராணுவம் நுழைந்தவுடன், நிஜாம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒப்புக்காகக் கலந்து கொண்ட பணக்கார விவசாயிகளும் சிறிய நிலப்பிரபுக்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டனர். தெலுங்கானாவை காங்கிரசு அரசாங்கம் விடுவித்து விட்டது என்று கூறி மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர் சில தலைவர்கள் மக்கள் துரோகியாக மாறிவிட்டனர்.

 

யூனியன் இராணுவம் நுழைந்த ஒரு வார காலத்திற்குள் நிஜாம் நவாப்பின் அரசு சரணடைந்தது. நிஜாம் அரசு முழுமையும் யூனியன் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கவர்னர் ஜெனரல் ஜெ.என். சௌத்திரியின் கீழ் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.

அதுநாள்வரை மக்களின் எதிரிகள் தங்கள் சுரண்டல் சாம்ராஜ்ஜியத்தை சுதந்திரமாக நடத்திவர நிஜாமின் ரஜாக்கர் குண்டர் படைகளைச் சார்ந்திருந்தனர். ஆனால் நிஜாம் இராணுவம் இந்திய யூனியனிடம் ஒரு வாரத்திற்குள் சரணடைந்தது. ரஜாக்கர் குண்டர்கள் மக்களிடம் சரணடைந்து ஆயுதங்களை ஒப்படைத்தனர். இந்தச் செயல்களின்மூலமாக மக்களைச் சுரண்டியவர்களுக்கு நடுக்கம் கண்டது. எதிரிகளின் தவறான செயல்களுக்குப் பழிவாங்க எல்லா மக்களும் ஒன்றாகத் திரண்டதைக் கண்ட சுரண்டல்காரர்கள் அச்சம் கொண்டனர். ஒரு பகுதியினர் தங்களுடைய வைக்கோல் போர்களுக்குள் ஒளிந்து கொண்டனர்.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE