Language Selection

புதிய கலாச்சாரம்

இதெல்லாம் நடக்க முடியாத விசயங்கள் அல்ல. பிரிட்டிஷ்காரனின் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக நாம் இருந்தபோது அந்நியத் துணிகள் புறக்கணிப்பு இயக்கம் இப்படித்தான் நடந்தது. விலை குறைவான நைஸான வெளிநாட்டுத் துணிகளைப் புறக்கணித்து முரட்டுக் கதராடையையும் கைத்தறி ஆடையையும் நாட்டுப் பற்றுள்ள மக்கள் அன்று விரும்பி வாங்கத்தான் செய்தார்கள்.

"இதெல்லாம் ஆகிற கதையா?'' என்று சிலர் கேட்கலாம். தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரசு, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் ஆகியோரை நம்பிக் காவடி எடுப்பதுதான் ஆகாத கதை. போகாத ஊருக்கு வழி தேடி ஆகாத காரியத்துக்கு மெனக்கிடுவதைவிட ஆகிற கதைக்கு நாம் தாராளமாக மெனக்கிடலாம். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் போன்ற எல்லாப் பிரிவு மக்கள் மத்தியிலும் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று ஆதரவு திரட்டும் வேலையைச் செய்யலாம்.

ஏனென்றால் இது சுதந்திர நாடு அல்ல. உலக வங்கிக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் அடிமை நாடு. திராவிடம், தேசியம், தமிழினம் என்று ஓட்டுக் கட்சிகள் பேசும் பேச்செல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். வெறும் வாய்ச் சவடால்கள். இவர்களுடைய வாய்ச்சவடால்களால் அம்பானியின் கடையிலிருந்து ஒரேயொரு கத்தரிக்காயைக் கூட வெளியே தூக்கியெறிய முடியாது.

கேட்டாலே நமக்கு இரத்தம் கொதிக்கிறதே, ஆனால் இந்த அநீதிகளைக் கேட்பதற்கு ஒரு நாதியில்லையே ஏன்? சிவாஜி கணேசனின் பேரன் கல்யாணத்துக்கும் பேத்தியின் காதுகுத்துக்கும் ஆசி வழங்கத் தெரிந்த தானைத்தலைவரின் காதுகளுக்கு கோயம்பேடு தமிழர்களின் கூக்குரல் மட்டும் எட்டவில்லையே ஏன்? தன்னுடைய மேயர் பதவி பறிபோனவுடன் பதறித் துடித்த தளபதி, ஒரு இலட்சம் தமிழர்களின் வாழ்க்கை பறிபோவதை வேடிக்கை பார்க்கிறாரே, இவர் யாருக்குத் தளபதி?

சிறு வியாபாரிகளும் சில்லறை வணிகத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களும் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்ற காசைப் போட்டுக் கடை வைக்கும் அண்ணாச்சிகள், பெரிய கம்பெனிகளிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள், சிறு தொழில்கள் அழிந்ததால் சில்லறை வணிகத்துக்கு வந்த சிறு தொழில் முதலாளிகள், வேலை கிடைக்காததால் வீட்டை விற்று சுயதொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள்.

நம்முடைய நாட்டில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் வேலை கொடுத்திருப்பது யார்? அரசாங்கமா அல்லது டாடா பிர்லா அம்பானி போன்ற முதலாளிகளா? கைத்தறியும், சிறு தொழில்களும், சில்லறை வணிகமும்தான் மீதியுள்ள மக்களில் கணிசமான பேருக்குச் சோறு போடுகின்றன. இந்தத் தொழில்களைப் பாதுகாக்கத் தவறினால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவதைத் தடுக்க முடியாது.

இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள். அந்த விவசாயிகள் விளைவிக்கும் உணவு தானியங்களுக்கு நியாயமான விலை கிடைத்தால்தான் அவர்களால் வாழமுடியும், விவசாயம் செய்யவும் முடியும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் ஒன்னேகால் இலட்சம் விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அரசாங்கமே புள்ளி விவரம் கொடுக்கிறது. பல கோடி விவசாயிகள் வந்த விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு கூலி வேலை தேடி நகரத்தை நோக்கி ஓடி வருகிறார்கள்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! லாபமீட்டும் அரசுத் துறையான தொலைபேசித் துறையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவு கொடுத்தார்கள். ரிலையன்ஸ் நிறுவனமும் பிற பன்னாட்டு நிறுவனங்களும் செல்போன் கம்பெனி ஆரம்பித்து வாடிக்கையாளர்களைப் பலவிதமாகப் பித்தலாட்டம் செய்து கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு, அரசாங்கத்தின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடைசியாகத்தான் செல்போன் சேவையைத் தொடங்கியது.

தங்களுடைய கொள்ளை இலாபத்துக்காக எந்தவிதமான கிரிமினல் வேலையையும் கொலைபாதகத்தையும் செய்யத் தயங்காதவர்கள் இந்த முதலாளிகள் என்பது அரசுக்குத் தெரியும். அப்புறம் ஏன் இவர்களைப் பாக்கு வைத்து அழைத்து, தொலைபேசி, மின்சாரத்தில் தொடங்கி தானியக் கொள்முதல், சில்லறை வணிகம் வரை அனைத்தையும் அரசாங்கமே இவர்கள் கையில் ஒப்படைக்கிறது? பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் உள்ளூர் விவசாயமும், தொழிலும், வணிகமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லாப் பிரிவு மக்களும் எதிர்த்துப் போராடினாலும் அதைப் பற்றி எந்தக் கட்சியும் கொஞ்சம் கூடக் கவலைப்படாதது ஏன்?

"ரிலையன்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நம்பகத்தன்மை என்று பொருள். ஆனால் நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமே ரிலையன்ஸ் நிறுவனம்தான். "ரிலையன்ஸ் ஃபிரஷ் கடையில் கறிவேப்பிலை வாங்கினாலும் பில் போட்டுக் கொடுக்கிறான்' என்று படித்த அறிவாளிகள் சில பேர் சிலிர்த்துக் கொள்கிறார்கள். பில்லை வைத்துத் தாளிக்கவா முடியும்? அன்றாடம் பத்து லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் கடையில் ஆள் வைத்து பில் போடுவதில் என்ன அதிசயம் இருக்கிறது?

சிறுவணிகர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் யோக்கியதை என்ன? பளபளப்பான தாளில் பேக்கிங் செய்து விற்கப்படும் காட்பரீஸ் சாக்லெட்டிற்குள் புழு இருக்கிறதென்று பல ஊர்களிலிருந்து புகார் வந்து மகாராட்டிரா மாநிலம் முழுவதும் அதன் விற்பனை தடை செய்யப்படவில்லையா? கோக் பெப்சி பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சியும், பல்லியும், ஆணியும் கிடக்கவில்லையா? புற்று நோயை உருவாக்கும் பூச்சி மருந்துகள் அதில் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் கோக்கும் பெப்சியும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லையா?

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE