Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


ஆரம்பத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு படை நிறுவப்பட்டது. கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் இந்த மாவட்டப் படைக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் மிகச் சீக்கிரத்திலேயே கீழணிகளிடம் ஆயுதங்கள் இல்லாமலிருப்பது தவறு என்று புரிந்து கொள்ளப்பட்டது. எனவே மாவட்டப் படை கலைக்கப்பட்டது. தாலுகா மட்டத்தில் படை அமைக்கப்பட்டு, அவர்களுடைய வேலைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. கிராம மட்டத்திலான படைகளும் நிறுவப்பட்டன. கிராமங்களைப் பாதுகாப்பதே அவர்களுடைய முக்கியமான வேலையாக இருந்தது. ஆயுதந்தரித்த ரஜாக்கர் குண்டர்கள், இராணுவம் ஆகியவை உபயோகித்து வந்த பாதைகளைக் கூட அவர்கள் அழிக்க வேண்டியிருந்தது. கிராமத்திலுள்ள எல்லா இளைஞர்களும் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தபோதே இந்தக் கிராமப் படைகளிலும் பங்கெடுத்துக் கொண்டனர்.


படைகளில் முழுநேர ஊழியர்களாக வேலை செய்யச் சித்தமாயிருந்த இளைஞர்களால் முறையான கொரில்லாப் படைகள் நிறுவப்பட்டன. இதற்கான ஆர்வத்தையும் உறுதியையும் அவர்கள் பெற வேண்டியிருந்தது. இந்த முறையான படைகள் முக்கியமாக, ஆயுதந்தாங்கிய ரஜாக்கர் குண்டர்களையும் இராணுவத்தையும் எதிர்ப்பதாக இருந்தன. கிராமங்களைப் பாதுகாப்பது அவர்கள் வேலையாயிற்று. இந்தப் படைகள் தன்னகத்தே 10லிருந்து 25 பேர் வரை கொண்டிருந்தது. சில சமயங்களில் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு ஒரு குழு மற்றொரு குழுவுடன் சேர்ந்து குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்திற்று. பின்பு தத்தம் இடங்களுக்குச் சென்றது.


இதுவரை உழுவதை மட்டுமே அறிந்த சாதாரண விவசாயிகளின் புதல்வர்கள் எதிரிகளிடமிருந்து ஆயுதங்களைப் பிடுங்கினர். இவர்கள் சண்டைகளின்மூலமும், அனுபவங்கள்மூலமும் போர்த் தந்திரங்களைத் தெரிந்து கொண்டனர். சாதாரண கல்வி கூடப் பெறாத இவர்கள், முறையான கொரில்லாப் படைகளின் தலைவர்களாக உருவாயினர். சாதாரண மக்கள் மத்தியிலிருந்து சிறந்த தீரர்கள் உருவாயினர்.


கொரில்லா படைகள் அமைந்ததன் பயனாக, தெலுங்கானா இயக்கம் ஒரு புதிய, உயர்ந்த கட்டத்தை அடைந்தது. ரஜாக்கர் குண்டர்களின் தாக்குதல்களிலிருந்து கிராமங்களைப் பாதுகாப்பதுடன் மக்கள் திருப்தியடையவில்லை. விவசாய கொரில்லாப் படைகள் தாங்களாகவே ரஜாக்கர் குண்டர்கள் மற்றும் போலீசாரின் சிறிய முகாம்களைத் தாக்க ஆரம்பித்தன. விவசாயக் கொரில்லா படையினர் அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்துக் கொண்டனர். போலீசு அல்லது ரஜாக்கர்களின் வருகைக்காக மறைவாகக் காத்திருந்தனர். அவர்கள் மீது திடீர்த் தாக்குதல் தொடுத்தனர். இதன்மூலமாகப் பல வெற்றிகளை அடைந்தனர்.


படைகளுக்குப் பக்கபலமாக மக்கள் நின்றனர். போலீசார் மற்றும் ரஜாக்கர் குண்டர்களின் தாக்குதல்களை மக்களும் படைகளும் ஒன்று சேர்ந்து வீரத்தோடு எதிர்த்தனர். எதிரிகளுக்கு மக்கள் பலவழிகளில் தொல்லைகளைக் öகாடுத்தனர். இம்மாதிரியான தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடந்த வண்ணமிருந்தன. ஒவ்வொரு கிராமமும் போர்க்களமாக மாறியது. அம்மெனபரொலு, பைரனிபள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பெற்ற எதிர்த் தாக்குதலானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை, தெலுங்கானா மக்கள் எல்லோரையும் ஊக்குவித்தன. இந்தச் சமயத்தில் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை வீரத்துடன் போராடிய வீரப்புதல்வர்கள் பலரைக் கட்சி இழந்தது. அவர்கள் தங்கள் கைகளில் செங்கொடியை ஏந்தியும் "கம்யூனிஸ்ட் கட்சி ஓங்குக!'' என்று முழங்கியும் கம்யூனிஸ்டுகளாகப் போராடினர்.


இந்த வீரமான மக்களில், தோழர் யாதகிரி என்பவரும் ஒருவர். இவர் சூரியபேட்டா தாலுகாவிலுள்ள சிலுவஜந்தா கிராமத்தில் விவசாயத் தொழிலாளியாக இருந்தார். ஜன்னாரெட்டி பிரதாபரெட்டி என்ற கொடுமை வாய்ந்த நிலப்பிரபுக்களிடம் பண்ணைக் கூலியாக இருந்தார். அவர் ஒரு போலீசு லாரியைப் பிடிக்க ஓடினார். போலீசு சுடப்போவதையும் அவர் பொருட்படுத்தவில்லை. இறுதியில் அவர் காலில் குண்டடிபட்டது. மேற்கொண்டு ஓட முடியவில்லை. அருகிலிருந்த அடர்ந்த மரங்களுக்கிடையில் ஒளிந்து கொண்டார். போலீசு உடனே அவரைத் தேட ஆரம்பித்தது; பின்பு அவரைப் பிடித்து மான்ட்ராய் போலீசு பாசறைக்குக் கொண்டு சென்றனர்.


படைகளின் இரகசியம் அறிவதற்காக நாள் கணக்காக அவர் சித்திரவதை செய்யப்பட்டார். இந்தச் சித்திரவதை ஒருநாள் இரண்டு நாள் மட்டுமல்லாது தொடர்ந்து 10 நாட்களுக்கு நடந்தது. அவருடைய விரல்களுக்குள் ஊசி குத்தப்பட்டது. அவருடைய உடம்பு முழுவதும் பிளேடுகளால் கிழிக்கப்பட்டது; சிகரெட் நுனிகளால் சுடப்பட்டது. அவர், தலைகீழாகத் தொங்கவிடப்பட்டார். தடிகளாலும், துப்பாக்கியின் பின்பகுதிகளாலும் அடித்தும், போலீசு பூட்ஸ் கால்களால் உதைத்தும் அவருடைய ஒவ்வொரு எலும்பும் நொறுக்கப்பட்டது.


இவ்வளவு சித்திரவதைபடுத்தப்பட்ட போதும், நமது வீரர் யாதகிரி சிறிதும் வளைந்து கொடுக்கவில்லை. படைகளைப் பற்றிய இரகசியங்கள் ஒன்றைக் கூட அவர் சொல்ல மறுத்துவிட்டார். அவர் உறுதியாகச் சொன்னார்: "உங்களுக்கு முன் நான் பணியப் போவதில்லை. நான் இறந்தாலும் கூட எங்களுடைய சங்கம் உயிருடன் இருக்கும். அது உங்கள் எல்லோரையும் அழித்து விடும்.'' இதுவே அவர் கடைசி வரைக்கும் சொன்ன வீரமிக்க வார்த்தைகள்.


இறுதியில் இராணுவ அதிகாரி அவரை ஒரு நாற்காலியில் அமரச் செய்து இரகசியங்களைச் சொல்லிவிடுமாறு கெஞ்சினான். ஆனால் யாதகிரி உறுதியான, முடிவான பதிலையே திரும்பச் சொன்னார். இதனால் கோபமடைந்த இராணுவ அதிகாரிகள் அவரைக் கொல்வதற்கு உடனே உத்தரவுகள் பிறப்பித்தனர்.


யாதகிரியினுடைய கால்களும் கைகளும் கட்டப்பட்டன. இராணுவத்தினர் அவருடைய உடம்பின் பகுதிகளை ஒவ்வொன்றாகச் சுட ஆரம்பித்தனர். இடையிடையே அவரை இரகசியங்களைச் சொல்லிவிடுமாறு கேட்டனர். ஆனால் யாதகிரி மறுத்துவிட்டு "சங்கம் வாழ்க! கம்யூனிஸ்ட் கட்சி ஓங்குக!'' என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொன்னார். இறுதியில் அவருடைய இதயத்தில் சுடப்பட்டு உயர்ந்த தியாகியானார். அவர் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் ஆனார். கம்யூனிச சித்தாந்தத்திற்குச் சிறந்த மதிப்பைப் பெற்றுக் கொடுத்தார்.