Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


சுயராச்சியம் என்று காந்தி எதைச் சொன்னார்? "முடிந்தால் ஆங்கிலேயப் பேரரசுக்குள் ஒரு சுயாட்சி; அவசியமேற்பட்டால் அதற்கு வெளியே'. இது, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து, அதன் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையையும், தேசிய சுதந்திரத்தையும் குறிப்பதாகக் கொள்ள முடியுமா? அகமதாபாத்தில் 1921இல் நடந்த காங்கிரசுக் கூட்டத் தொடர் இதற்கான விடையைக் கொடுத்தது. அந்தக் கூட்டத்தொடரில் ஹஸரத் மொஹானி என்பவர் கொண்டு வந்த தீர்மானத்தில் சுயராச்சியம் என்பதற்கு "முழுச்சுதந்திரம்; எல்லா வெளிநாட்டுக் கட்டுப்பாடுகளிலிருந்தும் சுதந்திரம்'' என்று விளக்கம் கொண்டிருந்தார். அதைக் கடுமையாக விமரிசித்த காந்தி, "ஹஸரத்தின் தீர்மானத்தில் பொறுப்புத் தன்மை குறைவாக இருப்பது எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய தீர்மானத்தின் ­மூலம் அவர் ஆழம் தெரியாமல் தண்ணீருக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார்; ஆழம் தெரியாத தண்ணீருக்குள் நாம் போக வேண்டாம்'' எனக் கூறினார்.


இந்த இடத்தில் 1918இல் இந்திய அரசாங்கக் கூட்டத்தைத் துவக்கி வைத்து ஆங்கிலேய அரசன் பேசியதை நினைவுபடுத்துவது சரியாக இருக்கும். அவன் சொன்னான்: "பல ஆண்டுகளாக, ஏன் பல பரம்பரைகளாக தேசபக்த இந்தியர்கள் சுயராச்சியக் கனவு கண்டு வந்திருக்கிறார்கள். இன்று நீங்கள் என்னுடைய பேரரசின் கீழ் சுயராச்சியத்திற்கான ஆரம்பத்தைப் பெறுகிறீர்கள்.'' என்ன ஒற்றுமை! காந்தியார் கனவை அவன் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான்.


நாடெங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களும் பல்கிப் பெருகி மக்கள் தங்களைத் தியாகத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தபோது காந்தியும் காங்கிரசும் இப்படிப்பட்ட கோரிக்கைகளையும் போர்க்குணமற்ற போராட்ட முறைகளையும் அறிவித்து மக்கள் திரளை இதை நோக்கித் திசைதிருப்பி ஏகாதிபத்தியங்களுக்குத் தங்களாலான உதவிகளையெல்லாம் முடிந்தவரை செய்தனர். 1921 ஒத்துழையாமை இயக்கம் இவர்களின் கட்டுப்பாட்டை மீறி இறுதியில் வன்முறையில் திரும்பியவுடன் காந்தி "சுயராச்சியம் என் ­மூக்கில் நாறுகிறது'' என்று அரற்றினார்.


1918 முதல் 1922 காலம் வரை மிகப் பரந்த நமது இந்திய பூமியில் புரட்சிகரப் போராட்டங்களும், ஆயுதந்தாங்கிய போராட்டங்களும் எல்லா வர்க்கங்களையும் உலுக்கி ஈர்த்துக் கொண்டது. நாட்டின் ­மூலை முடுக்குகளில் இருந்தவர்கள்கூட போராட்டங்களிலே ஈடுபட்டனர். ஆனால் காங்கிரசு தலைமை இப்போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து பலவீனமடைய வைத்தது. மக்களுடைய தன்னெழுச்சியான போராட்டங்கள் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியவில்லை.


இத்தகைய கால கட்டங்களில் ஏகாதிபத்தியம் அடக்கு முறையை நடத்திக் கொண்டே, இன்னொருபுறம் சட்டமன்றத் தேர்தல்கள் (நவ.1926) போன்ற முறைகளையும் கையாண்டது. காங்கிரசு தலைமையில் மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் ஆகியோர் "சுயராச்சியக் கட்சி' என்ற ஒரு பிரிவு அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். மத்திய சட்டமன்றத்தில் சுயராச்சியக் கட்சித் தலைவராக அமர்ந்த மோதிலால் நேரு தாங்கள் சட்டமன்றத்திற்கு வந்தது பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்குத்தான் என்றும் தங்களுடைய ஒத்துழைப்பை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொண்டால் சொல்லாலும் செயலாலும் அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்களாக இருப்பார்கள் என்றும் புரட்சிகர இயக்கத்தைத் தடுத்து நிறுத்த தங்களால் இயன்றதனைத்தையும் செய்வோம் என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.


காங்கிரசு தலைமையில் உள்ள எந்த நபருக்கும் சரி, அவர்களுக்குத் தெளிவான ஒரு குறிக்கோள் இருந்தது. அதுநாடு முழுதாகச் சுதந்திரம் அடைந்து விடக்கூடாது; ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும், அதை விரட்டியடிக்கும், உண்மையான விடுதலையின் மீது பற்றுக் கொண்ட அமைப்புக்களை ஒழித்துக் கட்டுவது என்பதுதான். காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கம் மக்களிடையே அம்பலப்பட்டுப் போனதால் மாணவர்கள் இளைஞர்களின் கவனம் புரட்சிகர அமைப்புக்களின் மீது படரத் தொடங்கியது. அனுசீலன் சமிதி, இந்துஸ்தான் குடியரசுப் படை, நவஜவான் பாரத சபை, பஞ்சாப் கிருதி கிசான் கட்சி என புரட்சிகர இளைஞர், மாணவர் அமைப்புக்கள் தோன்றின. 1928ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் 3,16,77,000 வேலை நாட்களை உள்ளடக்கிய வேலை நிறுத்த இயக்கங்களில் ஈடுபட்டனர். வங்காளத்தைச் சேர்ந்த கிஷோர்கன்ஜ் பகுதியிலும், பீகாரைச் சேர்ந்த புட்டானா பகுதியிலும் உழவர்கள் நிலப்பிரபுக்களையும் காலனி ஆட்சியாளர்களையும் எதிர்த்து ஆயுதமேந்திப் போராடினர்.