Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


 "இங்கிலாந்து நாட்டுக்குப் படித்த வகுப்பினர் எதிரிகளல்ல; நண்பர்களாவர்.'' (1898ல் காங்கிரசுத் தலைவர் ஆனந்த மோகன் போஸ்)ஆ "பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்து ஊசலாட்டமின்றிச் சேவை செய்வதே யல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றுவதல்ல! மாறாக, அதன் அடிப்படையைப் பரவலாக்குவதாகும்.'' (சுரேந்திரநாத் பானர்ஜி)


 "இந்திய மக்கள் உடனடியாக மாற்றத்தையோ புரட்சியையோ விரும்பவில்லை... நிலவுகின்ற அரசைப் பலப்படுத்தவும், அதை மக்களோடு நெருக்கமாகக் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளனர். இந்திய விவசாயம் மற்றும்  தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அரசுச் செயலகத்திலும், வைசிராயினுடைய நிர்வாகக் ழுவிலும் சில இந்திய உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்.''  (1901ல் காங்கிரசு தீர்மானம்)


— வேறொன்றுமில்லை. இவையாவும் மூ­த்த காங்கிரசுத் தலைவர்களின் பொன்மொழிகள். வெள்ளையனின் பாதாரவிந்தங்களை நக்கி ருசிகண்ட நாக்குகளிலிருந்து வெளிப்பட்ட இந்த வாக்கு­லங்களும், தீர்மானங்களும் எதை நிரூபிக்கின்றன? மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு என்ற வெள்ளையர்களின் அறிக்கை இதற்கான பதிலைக் கூறுகிறது:


"இந்திய மக்களில் அரசியல் மனப்பான்மை கொண்ட பகுதியினர்... அறிவுபூர்வமாக நம் குழந்தைகள். நாம் முன் வைத்த கருத்துக்களை அவர்கள் மனதில் வாங்கிக் கொண்டார்கள்.'' (மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு அறிக்கை 1918 பக்: 115)
இதை உறுதிப்படுத்தி காந்தி கூறுகிறார்:


"இந்த ஸ்தாபனம் (காங்கிரசு) முதன் முதலாக ஒரு ஆங்கிலேயரால்தான் ஏற்படுத்தப்பட்டதென உங்களிடம் கூறுகையில் நான் அளவிலா ஆனந்தமடைகிறேன். காங்கிரசு மகாசபைக்கு ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயர் தகப்பனாக விளங்கினார். (இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் காந்தியின் உரை)


உண்மைதான். இவர்களே பெருமைப்பட்டுக் கொள்வதைப் போல் காங்கிரசு வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அறிவுப்பூர்வமான குழந்தைதான்! மறுப்பதற்கில்லை. இந்த அறிவுப்பூர்வமான கள்ளக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய அவசியம் பற்றி சர். வில்லியம் வெட்டர்பர்ன் என்ற வரலாற்று ஆசிரியன் கீழ்க்கண்டவாறு கூறுகிறான். 1878ஆம் ஆண்டு, ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம், தாய்மொழிச் செய்தியேடுகள் தடைச் சட்டம் ஆகிய சட்டங்கள் கொண்டு வந்ததையொட்டி அவன் கூறுகிறான்.


"ரசியபாணி போலீசு அடக்குமுறையுடன் அதிர்ஷ்டம் கெட்ட இந்தப் பிற்போக்குச் சட்டங்களும் சேர்ந்து, லிட்டன் பிரபுவின் கீழ் இருந்த இந்தியாவைப் புரட்சிகரமான எழுச்சிக்கு வெகு அருகாமையில் இழுத்துச் சென்று விட்டன. தக்க தருணத்தில் திரு. ஆலன் ஆக்டேவியன் ஹியூமும், அவருடைய இந்திய ஆலோசகர்களும் தலையிட ஊக்கம் கொண்டனர்.'' (சர். வில்லியம் வெட்டர்பர்ன்: ஆலன் ஆக்டேவியன் ஹியூம், இந்திய தேசிய காங்கிரசின் தந்தை 1931; பக்:101)


1857இல் வீறுகொண்டு எழுந்த சுதந்திரப் போரினைத் தொடர்ந்து காலனியாட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத்தான் வெட்டர்பர்ன் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறான். ஹியூமும் அவனுடைய ஆலோசகர்களும் இவ்விசயத்தில் ஊக்கத்தோடு தலையிட்ட காரணத்தைச் சொல்லும் முன்பாகச் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது இங்கு பொருத்தமானது.