Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_02.jpg

இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, சக்வாரா கிராமம். இங்கு வசித்து வரும் 700 குடும்பங்களில், 70 குடும்பத்தினர் ""பைரவா'' என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்திலுள்ள பொதுக்குளம், அரசின் உதவியோடும், மக்களின் பங்களிப்போடும் தாழ்த்தப்பட்டவர்கள் கொடுத்த நன்கொடை, அவர்களின் உடல் உழைப்பையும் பயன்படுத்திதான் கட்டப்பட்டது.

 எனினும், இப்பொதுக்குளத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து, பார்ப்பனர்களும், ஜாட் சாதியினரும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர்.

 

இத்தீண்டாமைக்கு எதிராக மனதிற்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர், டிசம்பர் 14, 2001 அன்று கலகத்தில் குதித்தனர். இத்தீண்டாமையை முறியடிக்கும் அடையாளமாக, பாபுலால், ராதேஷாம் என்ற இரண்டு தாழ்த்தப்பட்டோர் பொதுக்குளத்தில் இறங்கிக் குளித்தனர். ""அக்குளம் எங்களுக்குப் பயன்படுகிறதோ, இல்லையோ, தீண்டாமைக்கு எதிரான கோபத்தின் காரணமாகவே அக்குளத்தில் இறங்கிக் குளித்ததாக''க் கூறினார், ""கலகக்காரர்'' பாபுலால்.

 

இக்கலகத்தால் இரத்தம் கொதித்துப் போன பார்ப்பன ஜாட் சாதி வெறியர்கள் சாதி பஞ்சாயத்தைக் கூட்டி, தாழ்த்தப்பட்டோர் சாதிக் கட்டுப்பாட்டை மீறியதற்கான தண்டனையாக 50,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனக் கட்டளை போட்டனர்; மேலும், கிராமத்திற்குள் தாழ்த்தப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருட்களை யாரும் விற்கக் கூடாது; அவர்களை வயல் வேலைக்குக் கூப்பிடக் கூடாது; அவர்களுக்கு கடன் தரக் கூடாது எனப் பல்வேறு ""ஃபத்வா''க்களையும் போட்டுச் சமூகப் புறக்கணிப்பும் செய்தனர்.

 

இந்த உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படாத பாபுலால், தனது மக்களின் ஆதரவோடு, மேல் சாதிவெறியர்களின் சட்டவிரோதச் சமூகப் புறக்கணிப்புப் பற்றி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், மாவட்ட நிர்வாகமும், போலீசும் மேல்சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நின்றுகொண்டு, ""அந்தக் குளத்தை நீங்கள் பயன்படுத்தத் தேவையில்லை'' எனக் கட்டைப் பஞ்சாயத்து செய்தன.

 

சமாதானம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தக் கட்டைப் பஞ்சாயத்துக்கும் தாழ்த்தப்பட்டோர் பணிந்து போகவில்லை. அவர்கள், பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் ஆதரவோடு, செப்.2002இல் கிராமப் பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமை கோரி ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினார்கள். மேல்சாதி வெறியர்கள், இப்பேரணி மீது கல்வீச்சுத் தாக்குதலை நடத்திக் கலைக்க முயன்றதோடு, பேரணியில் கலந்து கொண்ட தாழ்த்தப்பட்டோரைக் குண்டாந்தடிகளைக் கொண்டு தாக்கவும் செய்தனர்.

 

இவ்வன்முறைத் தாக்குதலால் தாழ்த்தப்பட்டோர் அடங்கிப் போய்விடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்த மேல்சாதிவெறிக் கும்பல், ஏமாந்து போனது. தாக்குதல் நடந்த மறுநாளே சக்வாரா கிராமத் தாழ்த்தப்பட்டோர், கிராமப் பொதுக் குளத்தில் இறங்கியதோடு, அக்குளத்தைத் தங்களின் தேவைகளுக்காகத் தினந்தோறும் பயன்படுத்தத் தொடங்கினர்.

 

இதன்பின் மேல்சாதி வெறிக் கும்பலோ தீண்டாமையைப் புதிய வடிவில் கடைப்பிடிக்கச் சதித் திட்டம் போட்டது. இதன்படி, அக்கிராமக் குளம் புனிதத் தன்மையை இழந்து விட்டதாகப் பிரச்சாரம் செய்தனர். தீண்டாமைக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்து மத நம்பிக்கைகள், மேல்சாதி வெறிக்குக் கை கொடுத்தன. மேலும், தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தத் தொடங்கிய அக்குளத்தில், காலைக் கடன்களைக் கழிப்பது; குப்பைகளைக் கொட்டுவது போன்ற அடாவடித்தனங்களில் இறங்கி, குளத்தையே மாசுபடுத்தத் தொடங்கினர். தற்பொழுது, கிராம கழிவுநீரெல்லாம் அந்தக் குளத்தில் போய் கலக்கும் வண்ணம் ஒரு வடிகாலையும் வெட்டி விட்டனர். இதன் மூலம், சக்வாரா கிராமத் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி அடைந்த வெற்றியை, நடைமுறையில் அர்த்தமற்றதாகச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, பார்ப்பன ஜாட் சாதிவெறிக் கும்பல்.

 

தண்ணீரைப் பயன்படுத்தும் சமூக உரிமையைக் கூட அனுபவிக்க விடாமல் தாழ்த்தப்பட்டோரைத் தடுக்கும் தீண்டாமைக் கொடுமைகள், இராசஸ்தான் போன்ற பின்தங்கிய மாநிலங்களில்தான் நடக்கும் என முடிவு செய்து விடாதீர்கள். எழுத்தறிவு பெற்றதில் நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழும் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சித்தூர் வட்டத்தில் அமைந்துள்ள பல கிராமங்களில், ""பொதுக் குழாய்களில் தண்ணீர் வரும் சமயங்களில், மேல்சாதியினர் பிடித்த பிறகுதான், தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்க வேண்டும்'' என்ற தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

 

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் பொதுக் குளங்களில் தண்ணீர் எடுக்கும் உரிமையை அங்கீகரிக்கக் கோரி, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ""மஹத்'' என்ற கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினார். காலனி ஆட்சியில் நடைபெற்ற அந்த உரிமைப் போர், இன்றும் தொடர்கிறது, இந்தியாவோ, தன்னை வெட்கமின்றி ""குடியரசு'' என்று கூறிக் கொள்கிறது.


· குப்பன்