ஆட்டம்-3
புத்தகப்பூச்சிகளின் புரட்சி (புதிய துவக்கம்)
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா அடுத்தபடியாக ஈரானையும், லிபியாவையும் ஆக்கிரமிக்கத் துடித்தது. அணுவாயுதச் சாக்குப் போக்குகளைச் சொல்லி, முன்போல தன்பாட்டுக்கு உடனே ஆக்கிரமிக்கும் சூழல் அமெரிக்காவுக்கு இப்பொழுது அவ்வளவாக வாய்த்திருக்கவில்லை. வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா மற்றும் மத்திய ஆசியாவுக்குள் அமைந்திருக்கும் அரபு நாடுகளுக்குள், முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் மேவி அதன் சமூக அடிப்படை முரண்பாடுகள் கொதிநிலையாக மேலெழுந்திருந்தன. வெளியே மேற்குநாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் தடித்த மௌனச்சுவர்கள் இப்பொழுது வெளியே தெரியும்படியாயும் இருந்தது. ஐ.நா சபை முன்னைய ஆண்டுகளையும் விட முக்கிய ஆண்டாக 2008ஐ அறிவித்தும் இருந்தது. சர்வதேச சுகாதார தூய்மை ஆண்டாகவும், சர்வதேசமொழிகளின் ஆண்டாகவும், சர்வதேச புவி ஆண்டாகவும், சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாகவும் பிரகடனங்களை அடிக்கிக்கொண்டே போனது. இந்த ஆண்டில் உலகில் வாழும் 260 கோடி மக்களுக்கு தமது மனிதக்கழிவுகளை அகற்றும் கழிவிட வசதிகள் கிடைத்திருக்கவில்லை. இது உலக மொத்த சனத்தொகையில் 41 சதவீதமாக இருந்தது. இதனால் உலகில் 20 கோடி தொன் மனிதக்கழிவுகள் திறந்தவெளிகளிலும், கடற்கரைகளிலும் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.