Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் இழப்பதன் மூலம் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். மற்றவனுடைய செல்வத்தை அனுபவிப்பது தான் மகிழ்ச்சி. இதுதான் இந்த தனியுடமை சமூக அமைப்பின் அறம் மற்றும் கோட்பாடாகும். இதை அமெரிக்க அரசின் முன்னைய முக்கிய கொள்கை வகுப்பாளரும், முக்கிய மந்திரியுமாக இருந்த கொலின் பாவெல் நறுக்குத் தெறித்தது போல் மிக எடுப்பாகவே கூறியிருந்தார். "தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம் இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது. சுதந்திரச் சந்தையும், சுதந்திர வாணிபமும் நமது தேசியப் பாதுகாப்புத் திட்டத்தில் முன்னுரிமை பெறுகின்றது" என்றார். தனியுடமைச் சமூக அமைப்பு இதைத் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்காது. இந்தத் தனியுடமை சார்ந்த பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாற்றப்பட்டு விடுகின்றான். இந்த சமூக அமைப்பில் ஏற்படும் அதிர்வுகளில் ஒன்றுதான் உலகப் பொருளாதார நெருக்கடி.

"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயற்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!" என்றார் கார்ல் மார்க்ஸ். அவர் அப்படி வாழ்ந்தார் என்பதால், உலகமே அவரிடம் இருந்து கற்கின்றது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாகவும், ஆளும் வர்க்கத்தின் எதிரியாகவும் இருக்க முடிகின்றது. அவர் மரணித்து 130 வருடம் கடந்த நிலையில், இதுதான் எதார்த்தம். எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் அவர் எடுத்துக் காட்டிய உண்மைகளை மறுத்துவிடவோ மாற்றிவிடவோ முடியவில்லை.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இன்னும் வீட்டு உரிமையோ அல்லது காணி உரிமையோ இல்லை. இதை தட்டிக்கேட்க மலையக தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மந்திரிமார்களுக்கு எவ்வித திறமையோ அல்லது அறிவோ இல்லை. ஆனால், அவர்கள் ஊடகங்களிலும் கூட்டங்களிலும் சிங்கங்களைப் போல் கர்ச்சிப்பதை மட்டும் காணமுடிகின்றது. தங்களது உதிரத்தையும் வியர்வையையும் சிந்துகின்ற மக்கள் தொடர்ந்தும் இப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்து கொண்டே வாழ்வதா?

altஎன்னை 3வருடங்களாக வெளித்தொடர்புகள் இன்றி சிறிலங்கா இராணுவத்தினர் அடைத்து வைத்தனர். இந்தக்காலப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தரம் என்னை அவர்கள் பாலியல் வன்புணர்வுக்கும் உட்படுத்தினார்கள்' இவ்வாறு அதிர்ச்சியூட்டும் தகவலை லண்டன் ஐ.ரி.வி க்கு வெளியிட்டுள்ளார் முன்னாள் பெண் போராளி ஒருவர். சனல் - 4வெளியிட்டதைப் போன்று இறுதிக்கட்டப்போரில் இலங்கை இராணுவத்தினர் புரிந்த அட்டூழியங்களை தொகுக்கும் முயற்சியில் ஐ.ரி.வி இறங்கியுள்ளது.

சர்வாதிகாரிகள் கொலைகாரர்களாகவும், கொடுங்கோலர்களாகவும் இருக்கும் அதேவேளையில் கோமாளிகளாகவும் இருக்கிறார்கள். மக்களைக் கொன்று குவித்து, நாட்டை கொள்ளையடித்து, தனதும் தன் குடும்பத்தினதும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போரை காணாமல் போகச்செய்யும் மகிந்துவிற்கு வெறிநாய்களின் மேல் பொங்கும் பாசம் அப்படியான கோமாளித்தனத்திற்கு ஒரு சிறு உதாரணம். மகிந்து சிந்தனை என்னும் ஒப்பற்ற சிந்தனைக்கடலில் விளைந்த முத்துக்களில் ஒன்று வெறிநாய்களைக் கொல்லக்கூடாது என்பதாகும்.

உண்மை தெரிந்து கொள்வதற்காக அல்ல, உண்மையைக் கொண்டு வாழ்வதற்காகவே மனிதன் போராடுகின்றான். மனித வாழ்வை சுற்றிய நிகழ்வுகளையும், காரணங்களையும் தீர்மானிப்பது எது என்று தேடிய மனிதன், எது உண்மை என்று தேடினான்? இந்த வகையில் மார்க்ஸ் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படித் தேடிய மார்கஸ் 1837 ஆண்டு எழுதினார் "நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன். அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்" என்றார். இப்படி மார்க்ஸ் தேடிய உண்மையை இறுதியில் தெருவில் (மக்கள் மத்தியில்) இருந்தே கண்டெடுத்தார். இப்படி மார்க்ஸ் கண்டெடுத்தவைதான், சமூக விஞ்ஞானமான மார்க்சியமாகும். இப்படி மக்களின் வாழ்வில், அதன் போராட்டத்தில் இருந்து உருவான தத்துவமே மார்க்சியம் என்பதால், இது இறுக்கிப் போன கோட்பாடு அல்ல. மக்களில் இருந்து அன்னியமான வரட்டுவாதமுமல்ல. மார்க்சியம் மக்களின் வாழ்விலும், அதன் உணர்விலும் இருந்து அன்னியமான தத்துவமல்ல.

கண்டி ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இப்படி ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பணம் சுமார் 100 கோடி ரூபா மீளப் பெறவேண்டிய நிலையில் உள்ளது.

இதேவேளை அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும், இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் அரசுடன்; இணக்க அரசியல் செய்யும் எடுபிடிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவற்றிற்கான அதிகாரம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இந்த வேளையில் கிழக்கு மாகாணசபையும் தனது அதிகாரங்களை வழங்கும்படியும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்தும், இந்திய மத்திய அரசில் இருந்தும் சிலவகையான குரல்கள் மேலெழுந்தவாரியாக வந்து கொண்டு இருக்கின்றது.

இந்த வேளையில் தமிழ் மக்கள் தமது ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என்ற சிந்தனைக்கு மாற்றாக தம்மையே தோற்கடிக்கப்படக் கூடிய சக்திகளை தெரிந்தெடுத்துள்ளார்கள் என்பது ஒரு புறமிருக்க, தேர்தலின் பின்னர் முதலீடு, அதிகாரம் போன்றவற்றைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக தமிழக அரசியல்வாதிகள் பேசிக் கொள்கின்றனர்.

கூட்டமைப்பின் அதிகாரம் இனம் சார்ந்த ஆட்சி அதிகாரமல்ல. மாறாக வடமாகாணத்தை நவதாராளமயமாக்கலுக்கான அரசியல் அதிகாரம். இந்த அதிகாரத்தை இனரீதியான வாக்களிப்பு மூலம் பெற்று கொண்டுள்ளது கூட்டமைப்பு. வடக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ள கூட்டமைப்பு, தமிழ்தேசிய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கப்போவதில்லை. அப்படி ஒரு கொள்கையும் அதனிடம் கிடையாது. மாறாக தரகுமுதலாளித்துவ நவதாராளமயமாக்கல் பொருளாதாரத்தையே தன் கொள்கையாக வட மாகாணசபை முன்னெடுக்க உள்ளது. "தேசியம்", "இனத் தேசியம்" என்பது இங்கு மாயையும், கற்பனையுமாகும்.

வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேற்படி மனு விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிமலரூபனின் மரணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். உயிரிழந்த நிமலரூபனின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் நீதிமன்றத்திடம் விளக்கினார்.

வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் புனிதயாகப்பர் றோமன் கத்தோலிக்க ஆரம்ப பாடசாலையில் மாணவர் மன்றம் நடக்கும். எங்கள் ஊருக்கு பாட்டு பைத்தியம். மாணவர் மன்றத்திலும் தொடங்கி முடியும் வரை பாட்டுத்தான். ஒவ்வொரு முறையும் மணியக்கா ரீச்சர், கப்பலோட்டிய தமிழனில் வரும் "காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கிறேன்" பாரதி பாடலை பாடச்சொல்லி மோகனிட்டை சொல்லுவா. வாத்திமார்கள் எல்லோரும் ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள். அதாலே மணியக்கா ரீச்சர், செல்வம்மாமா வாத்தியார் என்று உறவு சொல்லித்தான் எல்லாரையும் கூப்பிடுவோம்.

விளிம்பு நிலை என்ற சொல்லிற்கான உண்மையான அர்த்தத்தினை கண்டடைய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தச் சொற்பதம் என்பது பல மயக்கத்தை கொடுத்துள்ளதாகவே கருத வேண்டியிருக்கின்றது. இங்கு (marginalization) தரப்படுத்துதல் அல்லது ஒதுக்குதல், ஒடுக்கப்படுத்தல் (oppressed, exploited) என்று சுரண்டப்படும் மக்கள் தொகுதியை கூற பயன்படுத்தப்படும் பொது சொற்பதங்களாகும். ஆனால் ஒடுக்கப்படும், சுரண்டலுக்கு உள்ளாகும் விழிம்பு நிலை என மக்கள் கூட்டத்தினை விழிப்பதற்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது. இங்கு மேற்கு தேசங்களில் பயன்படுத்தப்படும் அரசியல் சொற்பதங்கள் தமிழ்படுத்துவது ஒன்றும் இலகுவானது அல்ல. உதாரணத்திற்கு லும்பன் (உதிரிப்பாட்டாளி) பூர்சுவா (முதலாளித்துவ) வர்க்கம் என்ற சொற்தொடர்கள் பயன்பாட்டில் உள்ள போதிலும் அதற்கு நிகரான சொற்கள் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் இருக்கின்றது. மேற்கண்ட சொற்கள் அரசியல் அரங்கில் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆனால் விழிம்பு நிலை என்ற சொற்பொருள் குறித்து அரசியல் உலகில் பரீட்சையம் உள்ளவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. ஆனால் இணைய விவாதங்களை நோக்குகின்ற போது இந்தச் சொல்லாடல் பின்னவீனத்தில் பின்னரான அரசியல் உரையாடல்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என அறிய முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போர் காலத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் முகாமிட்டிருந்த இடங்களில் அவர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட சிறுசிறு புத்தர் சிலைகளை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புதிதாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வைத்து அந்த இடத்தில் விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மாவட்டத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் என்னிடம் முறையிடுகின்றனர்.

தமிழன் என்ற "உணர்வும்", கடந்தகால தமிழனின் "மனச்சாட்சியும்" தான் தேர்தல் முடிவை தீர்மானித்ததாக கூறுகின்றவர்கள் அனைவரும், எதார்த்தம் சார்ந்த உண்மைகளை மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர். தமிழ் மக்களின் இன்றைய எதார்த்தம் தான் (சமூக வாழ்க்கை தான்) தேர்தல் முடிவைத் தீர்மானித்தது. இன்றைய எதார்த்தம் கடந்த "உணர்வும்", "மனச்சாட்சியும்" அல்ல.

பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பொருளாதாரம் படுபாதாளத்தில் தள்ளப்பட்டு மீளமுடியாத சிக்கலில் சிக்குண்டு கிடக்கின்றது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன தலைவிரித்தாடுவதன் காரணத்தினால் மக்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தமது வாழ்க்கை செலவினை சமாளிக்க முடியாமல் அன்றாட வாழ்வுக்கு அல்லல் பட்டுக் கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியினை காரணம் காட்டி மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த மானியங்களை அரசு பாரிய அளவில் குறைத்துள்ளது.

அனைத்து தமிழ் மக்களின் இன நலனையே முன்னிறுத்தி நிற்பதாக, கூட்டமைப்பால் இனி வேஷம் போட முடியாது. இதுவரை காலம் போட்ட இன வேஷத்தை களைந்தாக வேண்டும். தேர்தல் வெற்றி மூலம் இன வேஷத்தைக் கடந்து, ஒடுக்கும் தமிழ் அதிகாரம், நவதாராளமயமாக்கல் என்ற அவர்களின் உண்மை முகத்துடன் களமிறங்கியுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE