Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அரசியலில் தொடராக வந்த பேரினவாத அரசுகள், எம்நாட்டின் தேசிய இனங்களைப் பிரித்தாண்டே வந்துள்ளன. அதிலும் சாதாரண சிங்கள-தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவுகள் ஏற்படுத்துவதில் மிகக் கண்ணும் கருத்துமாகவே இருந்து வருகின்றன.

கிழக்கு மாகாணம் மூவின மக்களின் குவிமையம். இவ் மூவின மக்கள் மத்தியில் பேரினவாத அரசுகளும் சரி, தமிழ்த்தேசியத்தின் "தனித்துவங்களும்"  சரி, அம்மக்களின் அபிலாசைகளில் இருந்து அரசியல் செய்யவில்லை.

தமிழ்த் தேசியத்தின் " தனித்துவங்களின்", சுயநிர்ணயம் என்பது, தனியே தங்களுக்கானது என்ற ஒற்றைப் பரிமாணத்திற் கூடாகவே பரிணாமமாகப் பெற்றடைந்து வளர்ந்து வந்துள்ளன.  சுயநிர்ணயம் மற்ற தேசியங்கள், தேசிய இனங்களுக்களுக்கு, அதன் மக்களுக்கானது என்ற கோட்பாட்டின் பாற்பட்டு செயற்படவில்லை. யாழ்-பிற்போக்கு பழமைவாதத்தின் முனைப்பிலான அரசியலே
சகலதின் எடுகோள்களாகவும் முடிவுகளாகவும் இருந்தது.

இதனாலேயே முஸ்லிம் மக்களும், மலையக மக்களும் இவர்களில் இருந்த அந்நியப்பட்டுள்ளனர். இம்முரண்பாட்டை பேரினவாதம் தனக்கு சாதகமாக சரியாக
கையாள்கின்றது. இம்மக்கள் மத்தியில் "கிறிஸ் பூதம்" போன்று காலத்திற்கு காலம் ஏதாவது ஒன்றை ஏற்படுத்தி விடுவார்கள்.

இப்போ அரசு, கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கே வழங்கவேண்டும் என்ற ஒன்றை முஸ்லிம் காங்கிரஸிற் கூடாக கிளப்பி விட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரவூப் ஹக்கீம், அவர்களை நிறுத்த மகிந்தா முடிவு செய்துள்ளதாக அண்மையில் வந்த செய்தி யாவரும் அறிந்ததே.

முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம் நிறுத்தப்படுவதை அரசுடன் இணைந்துள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள் விரும்பவில்லை. ஏன் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச்செயலாளர் காரியப்பரே விரும்வில்லை.

இந்நிலையில் கடந்தவாரம் கிழக்கு மாகாணத்திற்கு சென்ற பொழுது அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம்கூட இதுபற்றி பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை.

"கட்சியின் உயர்பீடம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்போர்களின் கருத்துக்கொண்டு கலந்து பேசி முடிவு எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்" என்றுள்ளார்.

சூடு பிடிக்கும் பிரதேசவாதம்! பரிதாபத்தில் கிழக்குமாகாண முஸ்லிம் சமூகம்.

இது என் கருத்தல்ல! இவ்வார "யாழ்-முஸ்லிம்"  இணையதளத்தின் குரலாகும் இதற்குள் பொதிந்திருக்கும் பொருள் பலவகைப்பட்டது.

எனவே இன்றைய நிலையில் கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருகே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை புறந்தள்ளிவிடக்கூடிய ஒன்றல்ல. இது இனச் சுத்திகரிப்பிலான அரசின் நிகழ்ச்சி நிரல் கொண்ட கிழக்கின் மக்களைப் பிரிககும் செயற்பாட்டிற்கு வழி வகுக்கக்கூடாது.

மாறாக முஸ்லிம் காங்கிரஸின் நிஸாம் காரியப்பர் விடும் கோரிக்கையான….. "தமிழ் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்ய வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. அதேவேளை வடக்கு மாகாண சபைக்கும் தேர்தல் நடக்க இருப்பதால் கிழக்கில் ஒரு முஸ்லிம் மகன் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் சமூகம் இம்முறை இடமளிக்க வேண்டும் எனும் வேண்டுகோளும், "கிழக்கு மக்களின் விருப்பத்திற்கிணங்க குறித்த வேட்பாளர் தெரிவு இடம்பெறும். இது தொடர்பில் சகல தகைமையும் பெற்ற ஒருவருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது" என்ற அணுகுமுறையோடும் இதைச் சாதிக்கலாம்!

இதற்கு கூட்டமைப்பு உதவவேண்டும்!

குறைந்தது முதலமைச்சர் பதவி சுழற்சி முறையிலோ, அல்லது மகாணசபை ஆயுட்காலத்தின் அரைவாசி கொண்டும் பதவி வகிக்கலாம்!

இப்படிச் செய்கின் இல்லாதாக்கப்பட் தமிpழ் முஸ்லிம் உறவுகளுக்கு வித்திடும் முதற் படியாக அமையும்!

யாழ்-மேட்டுக்குடி அரசியலின் பிரதேசவாதப் பழி நீங்கும்!

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திற்கும், சுயநிர்ணயத்தின் உண்மைத்தன்மைக்கும் பொருள்படும்!

தடங்கலிலுள்ள சுயநிர்ணய உரிமைப்போரை முன்னெடுக்க வழி வகுக்கும்!