Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"தமிழனுக்கு" ஒரு அளவுகோள், "சக்கிலியனுக்கு" வேறு அளவுகோள். இது தான் தமிழ்த் தேசியம். திருகோணமலை நகரசுத்தி "தமிழ்" தொழிலாளர்களை சாதி ரீதியாக ஒடுக்கும் "தமிழனின்" நடத்தை, வேறு விதத்தில் இதனை விளங்கிக் கொள்ள முடியாது. திருமலை நகர சுத்தி தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து கள்ள மௌனம் சாதிக்கும் அனைவரதும் பொதுப் புத்தியானது, அவர்களுக்கு உள்ளேயான சாதிய புத்தி மட்டும் தான்.

தமிழ் தேசியத்தின் உள்ளே சாக்கடையாக உள்ள சாதியத்தை இனம் கண்டு கொள்ள, ஒரு சிறந்த உதாரணம். தமிழன் என்ற ஒரு காரணத்துக்காக கல்வி- வேலை வாய்ப்பு, நிலப்பறிப்பு, இன ஒடுக்குமுறை போன்ற பேரினவாத ஓடுக்குமுறைகளுக்கு எதிராக போராட முனைகின்றோம். அதே நேரம் மனிதவுரிமை மீறலாக, இனவாதமாக அடையாளம் கண்டு கொண்டு போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

அதே போல் சாதிய ரீதியாக ஒடுக்கு முறைகள், அடக்கு முறைகள் நடக்கும் போது ஏன் போராட முனைவதில்லை. ஒடுக்கும் சாதிகளால் சக்கிலியராக அடையாளப்படுத்தப்படும் ஒரே காரணத்தால், அவர்களுக்கு நிரந்தமற்ற வேலை, குறைந்த கூலி, குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பை மறுக்கும் போது, இந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராட மறுப்பது ஏன்? சைவ வேள்ளாள சாதிய ஒடுக்குமுறையாக இதை இனம் கண்டு கொள்ள மறுப்பது ஏன்?

உங்களுக்குள் உள்ளது சாதியா? சாதியப்புத்தியா?

தமிழனுக்கு ஒரு நீதி, தமிழனால் ஒடுக்கப்படும் ஒடுக்கப்பட்ட சாதிய மக்களுக்கு வேறு நீதியா! சொல்லுங்கள். நீங்கள் நேர்மையான மனச்சாட்சி உள்ள மனிதர்களா? இதை மனிதவுரிமை மீறலாக கருதி ஏன் செயற்படுவதில்லை? ஏன் குரல் கொடுப்பதில்லை?

தமிழனால், தமிழனுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறை மூலம் நடத்துக்கின்ற இந்த இழிவான கேடுகெட்ட இழி நடத்தையை, கேள்வி கேட்க ஏன் மறுக்கின்றோம்?

தேசியத்தின் பெயரில் சாதிய ஒடுக்கு முறையை முன்னெடுக்கும் இந்த துரோகிகளுக்கு தானே வாக்களிக்கின்றீர்கள்! நீங்கள் வாக்களிக்கும் இந்த தேசியம் சாதியத்தை பாதுகாப்பதை கொண்டது என்பதாலா, வாக்களிக்கின்றீர்கள்? சொல்லுங்கள்!

இந்த சாதிய ரீதியான பாகுபாட்டை திருமலை நகர சபையில் உள்ள சிலரின் தனிபட்ட நடத்தையாக கூறுகின்றவர்கள் அல்லது குறித்த நகரசபையின் செயலாக மட்டும் குறுக்கிக் காட்டுகின்றவர்களிடம் கேட்கின்றோம், தமிழ் தேசியம் பேசும் கூட்டணியின் தலைமை இதற்கு எதிராக என்ன தான் செய்கின்றது? எப்படி, எதன் அடிப்படையில் தனது வேட்பாளர்களை தெரிவு செய்கின்றது? சாதியத்திற்க்கு எதிரான அதன் நடைமுறை தான் என்ன? இவர்களுக்கு வெளியில் உலகளவில் தமிழ் தேசியம் பேசுகின்றவர்கள், இதற்கு எதிராக என்னத்தைப் புடுங்குகின்றனர்.

தமிழ் தேசியம் என்பது சாதியமாகவும், தமிழனைத் தமிழன் ஒடுக்கின்றதாகவும் இருப்பது இன்று வெளிப்படையாக இப்படியான பல நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் மூலம் அம்பலமாகி இருக்கின்றது. கடந்த காலத்தின் இந்த சாதிய சிந்தனை முறை தான், இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை காட்டிக் கொடுத்து தோற்கடித்தது என்பதே எமது கடந்தகால வரலாறாகும்.