Language Selection

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிலங்களை கொள்வனவு செய்ய விரும்புகின்ற முதலாளிகளும், பெரும் முதலீட்டாளர்களும் அவர்கள் விரும்புகின்ற நிலங்கைளப் பார்வையிடுவதற்காக பொதுப் பணம்  செலவுசெய்யப்பட்டு ஹெலிகொப்டர்களில் அழைத்துச் செல்லப்படுகிற அதேவேளை ஏழை எளிய மக்களை  புறந்தள்ளி ஒதுக்குகின்ற அரசியலையே அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது என முன்னிலை சோஷலிஷக் கட்சியின் சார்பில் அதன் மத்தியகுழு உறுப்பினரான துமிந்த நாகமுவ இன்று (31) இராஜகிரியவில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இது நிர்வாக அதிகாரிகள் அல்லது மீரியாபத்த மக்கள், ஒரு சில அரசியல்வாதிகள்  தொடர்பான பிரச்சனையல்ல, மொத்த ஆட்சியமைப்பினதும் பிரச்சனையாகும் என்றார். அவர் மேலும் விபரிக்கையில், 

2005 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் மண்சரிவு ஆபத்து பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் மக்களது பாதுகாப்புக் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருந்ததன் விளைவே மீரியாபத்த அனர்த்தமாகும். மக்களுக்கு வேறிடத்தில் நிலம் வழங்கப்பட்டபோதும் மக்கள் அங்கிருந்து செல்லவில்லை என அதிகாரிகள் ஒருபுறம் சொல்ல, மக்கள் தங்களில் சிலருக்கு அவ்வாறு வேறிடத்தில் நிலம் தரப்படவில்லை என்று கூறுவது மறுபுறமாகவும், வேறு சிலர் தாங்கள் நிலங்களை பெற்றுக்கொண்ட போதும் அந்த நிலங்கள் வசிப்பதற்கு உகந்த வகையில் இருக்கவில்லை என்று இன்னொருபுறமுமாக கூறுவதுமாக பல குழப்பமான கருத்துக்கள் எழுகின்றன. கடமைக்கும் பேருக்கும் காணியொன்றை வழங்க வேண்டுமென்பதற்காக அவற்றை எங்கேயோ ஒரு மூலையில் வழங்குவதில் எந்த பிரயோசனமுமில்லை. மக்கள் எப்படி அக்காணிகளில் வீடுகளைக் கட்ட முடியும்? அந்தப் பிரதேசத்திலிருந்து நாளாந்த தோட்டத்தொழில் வேலைக்கு அவர்களால் போக முடியுமா? அவர்களது பிள்ளைகள் அங்கிருந்து பாடசாலைக்கு சென்றுவர முடியுமா? இவ்வாறான பல பிரச்சனைகள் அந்த மக்களுக்கு உண்டு. சுனாமி அச்சுறுத்தலை வைத்து கரையோரப்பகுதியில் குடியிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்தது. நகர்ப்புறங்களில் வசித்த ஒடுக்கப்படுகின்ற ஏழை எளிய மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். சம்பூரில் நிலப்பறிமுதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த மக்கள் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருக்கிறார்கள்.

மக்களை வெளியேறுமாறு கோரும் உரத்த ஒலிபெருக்கி மூலமான எச்சரிக்கைகள் விடப்பட்ட காரணத்துக்காக, மக்கள் இவ்வாறு வெளியேறி விட முடியாது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு காவிச் செல்லக்கூடிய செங்கற்களல்ல மக்கள். இவை போன்ற இயற்கை அனர்த்தங்கள் விழையும் ஆபத்து காரணமாக மக்கள் அவர்களது இல்லங்களிலிருந்து வெளியேற்றப்படுவதாக இருந்தால், அது பற்றி மக்களுடன் கலந்துரையாடுவது பிரதானமானது.  தங்களது வாழ்வு வசிப்பிடம் பற்றி தீர்மானிக்கின்ற உரிமை மக்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த உரிமையை மக்கள் கொண்டிருக்கவில்லை.

முதலாளிகளுக்கு நிலங்கள் வழங்கப்படுகின்ற வேளையில், எந்த நிலம் அவர்களுக்கு பிடித்திருக்கின்றதோ அந்த நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவர்கள் ஹெலிகொப்டர்களில் பொதுப்பணம் செலவுசெய்யப்பட்டு நிலங்களைப் பார்வையிடுவதற்கென அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஜேம்ஸ் பக்கருக்கு இவ்வாறே நிலம் வழங்கப்பட்டது. சங்கிரி லா, இராணுவ தலைமை அலுவலகத்தின் நிலத்தினை வாங்கவெனக் கோரியபோது, இராணுவத் தலைமையகம் அப்புறப்படுத்தப்பட்டு அந்த நிலம் அவர்களுக்கு  கொடுக்கப்பட்டது. ஆனால் ஒடுக்கப்படுகின்ற மக்கள் எங்கு வசிக்க விரும்புகிறார்கள் அவர்களுக்கு இருக்கும் தேவைகள் என்ன என்ற கேள்வி அவர்களிடம் கேட்கப்படுவதில்லை. அரசியல் அதிகாரிகள் கூடி முடிவுகளை எடுக்கிறார்கள். இன்று மீரியாபத்த மக்கள் மேல் பழியைப் போடுவது போல் மக்கள் மேல் பழியினை போட்டுத் தப்புவது அல்லது வனதாமுல்லை மக்களைத் துரத்தியது போல் துரத்துவது என்றவாறே இந்த அதிகாரிகள் நடக்கின்றார்கள்.

அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்படும் சேதங்களே இந்த இயற்கை அனர்த்தங்களுக்கான அடிப்படைக் காரணமாகும். அபிவிருத்தி என்ற பெயரில் நடாத்தப்படும் விளைவுகளின் காரணமாய் நாட்டின் எப்பகுதியும் தற்போது வசிப்பதற்கு பொருத்தமில்லாதவையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வடமத்திய மாகாணத்தில் குடிநீர் நஞ்சாகின்றது. கரையோரப்பகுதிகள் சுனாமி அச்சம் காரணமாய் கைவிடப்படுகிறது. மண்சரிவினால் தற்போது மத்திய மாகாணமும் இந்நிலைக்குள்ளாகிறது. நாட்டின் பல பகுதிகள் அனர்த்த அபாயம் உள்ளவையாக இருக்கின்றன. மக்கள் தங்களது வசிப்பிடம், பொருளாதாரம், அபிவிருத்தி சம்பந்தமாக தாங்கள் சுயமாக தீர்மானிக்கும் உரித்துடையவர்களாவதற்கு, மக்கள் இறையாண்மை கொண்டவர்கள் என்றாவதைத் தவிர இந்தப் பிரச்சனைகளுக்கு வேறு தீர்வில்லை.

இங்கு தனிநபர் தவறுகளல்ல காரணம் ஒட்டுமொத்த அமைப்பினது தவறே இதற்குக் காரணம். தாய் தந்தையரற்று அனாதைகளாகிப் போய்விட்ட குழந்தைகளுக்கு தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று கூறிவிடுவதானால் இதற்குப் பொறுப்பானவர்கள் தப்பித்து விட முடியாது. சுற்றுச்சூழலினை சேதப்படுத்தாக பொருளாதாரத்திற்காக, தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியினை மக்கள் கரங்களுக்கு வழங்கும் ஒரு உண்மையான ஜனநாயக அமைப்புக்காக நாங்கள் போராடுகிறோம். இந்த அனர்த்த வேளையில் அரசியல் அனுகூலங்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்று சொல்வதன் மூலம் இந்த அனர்த்தத்தின் பின்னுள்ள தங்கள் அரசியலை மறைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டியிருக்கின்றது. அதேபோல் அரசாங்கத்தை தனியே எதிர்ப்பதற்காய் என்று இதனை மட்டுப்படுத்தி விட முனையும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். என்று அவர் வலியுறுத்தினார்.