Language Selection

புதிய ஜனநாயக மா-லெ கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுத்தமான குடிநீர் கேட்டுத் திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் மக்களுக்கு அரசாங்கம் ராணுவ வேட்டுக்கள் மூலம் துப்பாக்கி ரவைகளை வழங்கி உள்ளது. வடக்குக் கிழக்கில் தமது இன உரிமைகளையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் கேட்டு நின்ற மக்களின் உயிர்களைக் குடித்த அதே இராணுவம் இப்போது சுத்தமான குடிநீர் கேட்ட சிங்கள மக்கள் மீது பாய்ந்து துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளது.

இத் தாக்குதலில் பதினேழு வயது மாணவன் துடிதுடிக்கக் கொல்லப்பட்டுள்ளான். நாற்பதுக்கு மேற்பட்டோர் படுகாயங்கள் அடைந்துள்ளனர். ஆவர்களில் இருவரது நிலை மோசமடைந்துள்ளது. ராணுவம் பொலீஸ் இணைந்து கடந்த முதலாம் திகதி நடாத்திய இம் மிருத்தனமான தாக்குதலையும் உயிர்ப் பறிப்பையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் அப்பிரதேசத்தின் கிணறுகளையும் நீர்நிலைகளையும் மாசடைய வைத்து நச்சுப் படுத்தி வந்த ரப்பர் தொழிச்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஆதரித்தும் நிற்கிறது.

1998ம் ஆண்டிலிருந்து இப் பிரதேசத்தில் செயல்பட்டு வந்து ரப்பர் கையுறை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவு நீரே இப் பிரச்சினைக்கு மூல காரணமாகும். அரசாங்கத்தின் உயர் மட்டங்களின் அரவணைப்போடு இயங்கி வந்த இத் தொழிற்சாலையின் கழிவு நீர் ரதுபஸ்ஹெலவின் வெலிவேரியா பிரதேசத்தில் உள்ள பன்னிரண்டு கிராமங்களின் கிணறுகளையும் நீர் நிலைகளையும் மாசடைய வைத்துக் குடிநீரை நச்சுப்படுத்திக் கொண்டது.

மக்கள் கேட்டது சுத்தமான குடி நீரையேயாகும். அதற்காக ஏற்கனவே மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கமோ அமைச்சர்களோ மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவே இல்லை. இந் நிலையிலேயே கடந்த முதலாம் திகதி சுமார் ஆறாயிரம் மக்களை வரை கூடித் தமது கோரிக்கையினை வற்புறுத்திக் கொண்டனர். அதனைப் பொறுக்க முடியாத நிலையிலேயே ராணுவமும் பொலீசும் கொடூரத் தாக்குதல்களை மக்கள் மீது நடாத்திக் கொண்டனர்.

பல்தேசியக் கம்பனிகளினதும் உள்நாட்டுக் கம்பனிகளினதும் சுரண்டலுக்கும், கொழுத்த லாபங்களுக்கும் மக்களது அன்றாடவாழ்க்கை பலியிடப்பட்டு வருவதன் ஒர் உதாரணமே வெலிவேரிய குடிநீர் மாசடைந்த பிரச்சினையாகும். இது இன்றைய தாராளமய தனியார்மய உலகமாயதலின் கீழான நவ தாராள பொருளாதார நாசங்களின் விளைவேயாகும். இது போன்ற சூழல் மாசடைவுகளும் மக்கள் எதிர் நோக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளும் நாடு பூராவும் பரவி வருகின்றன. இவற்றுக் எதிராக வெலிவேரிய மக்களை போன்று தங்கள் பிரச்சனைகளுக்காக மக்கள் தாங்களே அணிதிரண்டு போராடுவதைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. ஏன்பதனை எமது கட்சி சுட்டிக் காட்டுகின்றது.

சி.கா.செந்திவேல்

பொதுச் செயலாளர்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி