Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"நாங்க ஊருல இருந்த எல்லாக்கோயிலையும் பள்ளிக்கூடமா மாத்திட்டோம்"

பொது வெளி என்பதே ஆண் வெளி யாகவும் அதை வெகு இயல்பான ஒன்றாக கட்டிக்காத்துக் கொண்டு, ஜம்பமடித்துக் கொள்ளும் இந்து ஜாதிய சமூகத்தில் பெண்ணாக பிறந்து, மக்கள் முன்பு வீதிக்கொட்டகைகளிலும், இயக்கப் பிரச்சார நாடகங்களிலும் நடிக்க துவங்கி ஆண்மைக் கொடிக் கட்டிப் பறக்கும் திரையுலகில் ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலாக காலூன்றி கதாநாயகன, காமெடியன் போன்ற ஆண்களுக்கு இணையாக தன் ஆளுமையை நிறுவியவர் மனோரமா அம்மா. அவரை ஒரு முறை' தினமணி' மார்ச் மகளிர் மலருக்கு பேட்டியெடுத்தார்கள்.

இறுதிக் கேள்வியாய் ... "நீங்கள் வாங்கிய விருதுகளில் உங்களது மனதிற்குப் பிடித்த சிறந்த விருது எது?"

மனோரமா: "சிதம்பரத்திற்கு பக்கத்திலுள்ள 'பூந்தோட்டம்' என்கிற கிராமத்திற்கு ஒரு முறை ஷூட்டிங்கிற்காக போய்த்தங்கியிருந்தோம். காலையில் எழுந்துக் குளித்து முழுகி வழக்கம் போல், பக்கத்திலிருக்கும் ஏதாவதொருக் கோயிலுக்கு சென்று சாமிக் கும்பிடலாமென்று, இரண்டு மூன்று மணி நேரமாய் ஊரச்சுத்தி சுத்தி வ்ர்றோம் நானும் எங்களது குழுவினரும். ஊர்ல ஒருக் கோயிலைக் காணல...

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறப் பழமொழிக் கொண்ட தமிழ்நாட்டுல என்னக் கும்பிட ஒருக் கோயில் இல்லாத இந்த ஊரு என்ன ஊரு.. என அலுப்பும் ஆச்சிரியத்தோடும் அந்த ஊரின் தலைவரை அணுகி விசாரித்தோம்.

"அம்மா நீங்க எதிர்பார்க்கிறா மாதிரிதான் எங்க ஊரும் இருந்தது. ஆனா இப்ப இல்ல. நாப்பது வருசத்துக்கு முன்னாடி, அப்ப ஈவெரா பெரியார் ஒரு முறை எங்கக் கிராமத்துக்கு வந்தாரு. ஒங்க கிராமத்துல இத்தன கோயிலிருக்குதே எத்தனப் பள்ளிக்கூடமிருக்கு எவ்வளவு தற்குறியாவும் கைநாட்டுப்பசங்களாவும் திரியிரிங்க, பொம்பளை்ங்களை புள்ளைப் பெக்குற மிஷினாட்டம் வச்சிக்கினுக்கீறிங்க, அவளை படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் படிக்கவச்சி காப்பாத்திக்குவான்னு அன்னைக்கி அவரு பேசின பேச்சில நாங்க ஊருல இருந்த எல்லாக்கோயிலையும் பள்ளிக்கூடாமா மாத்திட்டோம். அதுமட்டுமில்ல இன்னைக்கு வீட்டுக்கு ஒரு பிள்ளையை டீச்சருக்கு படிக்க வைக்கிறோம். அதுவும் பொம்பளைப் புள்ளைங்கள" என அந்தப் பெரியவர் சொல்ல அசந்துப் போனேன். அப்படிப் பட்ட மாமனிதர் 'பெரியார் விருதை' பெரியார் திடலில் பெற்றதை பெரும் பேறாக கருதுகிறேன்"

நன்றி

கறுப்பு நீலகண்டன் (முகப்புத்தகத்திலிருந்து)

Karuppu Neelakandan