Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இரு வேறு அரசியல் போக்குகளை கொண்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி பெரு முதலாளிகளை, நில உடமையாளர்களை தனது அடித்தளமாக கொண்டிருக்கிறது. அந்நிய முதலாளிகளிற்கு நாட்டின் வளங்களையும், மக்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு அது என்றுமே கதவைத் திறந்து வைத்திருக்கிறது. முதலாளிகள் தடையின்றி வேகமாக கொள்ளைலாபம் அடிப்பதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கையின் அரசியல் அமைப்பையே மாற்றினார். பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு அரசியல் அமைப்பை மாற்றினார்.

முதலாளிகளிற்கே முழு அதிகாரங்களும் வழங்கும் சட்டங்களைக் கொண்ட சுதந்திர வர்த்தக வலயங்கள் என்னும் கொத்தடிமைக்கூடங்கள் மக்களிற்கு வேலைவாய்ப்பு என்னும் பெயரில் திறக்கப்பட்டன. தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் அமைக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் அனுமதி இல்லை என்பதே அங்கு முதலாவது சட்டமாக இருந்தது. இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி முதலாளிகளின் கட்சியாக, அந்நிய நாட்டு முதலாளிகளின் தரகர்களாக என்றைக்கும் இருந்து வருகிறது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி சிறு முதலாளிகள், சிங்கள மொழி ஆசிரியர்கள், சுதேச வைத்தியர்கள், சிறு விவசாயிகள், ஒரு பகுதி தொழிலாளர்கள் என்பவர்களுடன் சிங்களத் தேசியவாதிகளையும் தனது ஆதரவுப் பிரிவினராக வைத்திருந்தது. நிலச்சீர் திருத்தங்கள், வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டமை, அந்நிய நாடுகளின் இறக்குமதிகளிற்கு தடை விதித்தமை போன்றவை அதன் பொருளாதாரக் கொள்கைகளாக இருந்தன. இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசு அமைத்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் தேசிய முதலாளித்துவத்தை கட்டி எழுப்பும் நோக்கில் அமைந்திருந்தன.

புதிய பொருளாதார ஒழுங்கு முறைகளின் கீழ் உலகமயமாக்கல் தீவிரம் அடைந்ததன் காரணமாக தேசிய முதலாளித்துவ அரசுகள் உலகு முழுக்க அழிக்கப்பட்டன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, பிரேமதாசா போன்றவர்களின் தரகு முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சி அரசுகளிற்குப் பின்பு வந்த சந்திரிகா குமாரதுங்காவின் சுதந்திரக் கட்சி அரசும் தனது தேசிய முதலாளித்துவ கொள்கைகளை கைவிட்டு உலகமயமாக்கல் கொள்ளையை இலங்கையில் தொடர்ந்தது. இவ்வாறு இலங்கையின் இருபெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் எந்தவித வித்தியாசங்களும் இன்றி உலகமயமாக்கல் என்னும் மக்கள் விரோத கொள்ளையை தொடர்கிறார்கள். இன்று இரு கட்சிகளும் சேர்ந்து தேசிய அரசொன்றை அமைக்கும் அளவிற்கு வந்துள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வலதுசாரிக் கட்சி என்பதற்கு அதன் அரசியல் அறிக்கையை வாசிக்க தேவையில்லை. அதன் பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்று தேடிப் பார்க்க தேவையில்லை. அவர்களின் எஜமானர்கள் யாரென்று பார்த்தால் போதும். "இந்தியா இல்லை என்றால் என்றால் எங்களால் போரை வென்றிருக்க முடியாது" என்று கோத்தபாயா ராஜபக்ச நற்சான்றிதழ் கொடுத்த பாரத தேசம் தான் கூட்டமைப்பின் கூட்டாளிகள். அதாவது தமிழ்மக்களை இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்றவர்கள் தான் தமிழ்மக்களிற்கு தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று கற்பூரம் கொழுத்தி சத்தியம் செய்யுமளவிற்கு எஜமான விசுவாசத்துடன் இருக்கும் அடிமைகள் இவர்கள்.

இந்தியா இவர்களிற்கு சிறுதெய்வம் என்றால் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற உலகமகா கொலைகாரர்கள்; காலனித்துவம், உலகமயமாக்கல் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடி போட்டுக் கொண்டு கொள்ளையடிக்கும் தீவட்டி கொள்ளைக்காரர்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தேடித்தொழும் பெருந்தெய்வங்கள். அமெரிக்காவின் மைந்தர்களான செவ்விந்தியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் இலங்கை அரசின் இனப்படுகொலையில் மரணித்த எம்மக்களிற்கு நீதி பெற்றுத் தரும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தெய்வங்களை போற்றிப் பாடும் திருவாசகம்.

கடந்த இலங்கைத் தேர்தல்களில் மைத்திரி சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்காவுடன் கூட்டுச் சேர்ந்த இவர்கள் இன்று தாம் எதிக்கட்சி என்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரும் ஆகி விட்டார். எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்பவற்றிற்கு இடையில் எந்த விதமான வித்தியாசங்களும் இல்லையோ அதே போல் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஆளுங்கட்சிகளிற்கும் இடையிலும் எந்த விதமான வித்தியாசங்களும் இல்லை.

அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனோ, அவரது கட்சியான தமிழ் தேசியக் கட்சியோ இலங்கை அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் எதிர்த்து பேசுவதில்லை. மக்களை அணி திரட்டி போராடுவதில்லை. மகிந்த ராஜபக்சவின் இனப்படுகொலையினால் எம் தமிழ் மக்களின் வாழ்வே அழிந்து போனது; இவர்கள் எமது மக்களின் மரணங்களை, உயிர் தப்பியும் மரணத்தில் வாழும் எம்மக்களின் வாழ்வை ஐக்கிய நாடுகள் சபைக்கும், அமெரிக்காவிற்கும் மனுப் போடுவதுடன் முடித்து விடுகிறார்கள். எந்த வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க என்றைக்குமே குரல் கொடுத்ததில்லை. அரசியற் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த பின்னரே அரசிடம் கெஞ்சுகின்றனர்.

"நல்லாட்சி" நடக்கும் என்று சொல்லிக் கொண்டு ஆட்சியைப் பிடித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களிற்கு பிற்பாட்டு பாடியது. ஆனால் எம்மக்கள் இன்னும் முகாம்களில் வாழ்கிறார்கள். இராணுவம் அபகரித்த எமது மக்களின் வீடுகள், வயல்கள், தோட்டங்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. எமது கடற்தொழிலாளர்கள் காலங்காலமாக தொழில் செய்த கரைகளில் கடற்படையினர் முகாம் வைத்து தொழிலாளரை கடலில் இறங்க விடுவதில்லை. "தேசிய நிறைவேற்று சபை" என்ற அமைப்பின் மூலம் அரசியல் அமைப்பு திருத்தங்கள், உயர்மட்ட முடிவுகளை எடுக்கப் போவதாக கதை சொன்னார்கள். இந்த சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல் எந்தத் தீர்வும் எமது மக்களிற்கு வந்து சேரவில்லை.

சிறு மீன்குஞ்சைக் கூட விடாது வாரி அள்ளும் பெரும் இயந்திரப்படகுகளில் வந்து வட கடலின் வளங்களை அள்ளிச் செல்லும் இந்திய கடற்தொழிலாளர்களினால் இலங்கைத் தமிழ் கடற்தொழிலாளர்கள் வறுமையினால் வாடுகிறார்கள் என்பதை எதிர்க்கட்சித்தலைவர் என்றைக்குமே பேசியதில்லை. இலங்கை கடற்பரப்பிற்கு வரும் தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படை கொல்வது குறித்தும் எதுவும் பேசுவதில்லை. இலங்கையின் தமிழ் சிங்கள கடற்தொழிலாளர்கள் இணைந்து மானிய விலையில் எரிபொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று போராடுகிறார்கள். இலங்கை முழுவதற்குமான எதிர்க்கட்சித் தலைவரோ மானிய விலையில் எரிபொருட்கள் தொழிலாளர்களிற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று அரசைக் கேட்டதுமில்லை; தொழிலாளர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டதுமில்லை.

இலங்கை மக்களின் அடிப்படை உரிமையான இலவசக்கல்வியை இல்லாமல் செய்ய முதலாளித்துவ இலாபவெறி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இலங்கை அரசுகள் செய்யும் முயற்சிகளை எதிர்த்து மாணவர்கள் வருடக்கணக்காக போராடுகிறார்கள். அண்மையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மைத்திரி - ரணில் அரசு தம் கோரமுகத்தை காட்டியது. மாணவர்கள் மீது கொடிய வன்முறை ஏவப்பட்டது. "கல்வி விற்பனைக்கு அல்ல", "ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதே" என்று கேட்ட மாணவர்கள் மீது இலங்கை அரசின் காவல்துறை கடித்துக் குதறியது. இந்த வன்முறை குறித்து அரசகட்சி உறுப்பினர்கள் சிலர் கூட பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அரசின் அராஜகத்தை எதிர்த்துக் கேட்க வேண்டிய எதிர்கட்சித் தலைவர் எதும் பேசாமல் இருந்து விட்டு சாவகாசமாக ஒரு வாரம் கழித்து எதோ பேசினார்.

தமிழ் மக்களிற்கான கூட்டமைப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள் தமிழ்மக்களின் பிரச்சனைகள் குறித்தும் பேசுவதில்லை, தமிழ்மக்களை அணிவகுத்து போராடுவதுமில்லை என்னும் போது இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பதினால் மட்டும் இலங்கை மக்களின் எரியும் பிரச்சனைகளான வறுமை, வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றை பேசவா போகிறார்கள்? ஏனென்றால் ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக் கட்சி என்பன எந்த வித்தியாசங்களும் இன்றி அரச கட்சிகளாக இருப்பதைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சி என்ற பெயரில் ஆளும் கட்சியாகவே இருக்கிறது. ஏனென்றால் பெயர்கள் தான் வேறு, வேறாக இருக்கின்றனவே தவிர எல்லாக் கட்சிகளும் வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகள். நாட்டை விற்று, மக்களின் உழைப்பை விற்று கொள்ளையடிக்கும் கொள்கையில் ஊறிய கட்சிகள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாமே மக்களின் எதிரிக்கட்சிகள் என்பது தான் காலங்காலமான வரலாறு.