Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிணம் தின்னும் கழுகுகள் சிரியாவை கடித்துக் குதற தருணம் பார்க்கின்றன. அப்கானிஸ்தானில் தலிபான்களாலும், ஈராக்கில் சதாம் குசைனாலும் மக்கள் கொல்லப்பட்டார்கள். சர்வாதிகார, அடக்குமுறை ஆட்சிகள் மக்களைக் கொல்கிறார்கள், உலகத்தின் மனச்சாட்சி உறங்குகிறதா? கொலைகளிற்கு எதிராக உலகம் ஒன்று பட வேண்டும் என்று அமெரிக்காவும், அதனது அடிமைகளும் கூப்பாடு போட்டன. அந்த நாடுகளை ஆக்கிரமிப்பு செய்தார்கள். தலிபானும், சதாமும் கொன்றதை விட பலமடங்கு அதிகமாக அமெரிக்காவும், அதன் அடிமைகளும் அந்த மக்களை கொல்கிறார்கள். அந்த நாடுகளின் வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள்.

மீண்டும் அதே நாடகம், அதே கதை வசனம். இம்முறை வில்லன் அசாத். ஆயிரத்து நானுறு சிரிய மக்களை ரசாயன ஆயுதங்கள் மூலம் அசாத்தின் அரசு கொன்றதை கண்டு துடித்து பதைக்கிறார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன். 27.08.13 திகதி மெற்றோ (METRO) பத்திரிகையில் வெளிவந்த செய்தியின்படி இரசாயன ஆயுதங்களை தயாரிக்கக்கூடிய மூலகங்களை சிரியாவிற்கு விற்ற நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. 16.03.1988 அன்று ஈராக்கில் குர்திஷ் மக்களின் பிரதேசமான கலாப்ஜாவில் (HALABJA) வைத்து ஜந்தாயிரம் குர்திஷ் மக்கள் சதாமினால் இரசாயன ஆயுதங்களினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஈரானிய படைகளாலும், குர்திஷ் போராளிகளாலும் அப்பிரதேசம் வெற்றி கொள்ளப்பட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்தில் இது நடந்தது. தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை கொண்டு மக்களைக் கொல்கிறார்கள் என்று ஊளையிடும் இதே மேற்குநாடுகள் தான் சதாமிற்கு அவற்றை விற்றார்கள். அதை விடக்கொடுமை என்னவென்றால் அப்படுகொலைகளிற்கு பிறகு கூட இரசாயன ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலகங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை மீண்டும் புதுப்பித்தது பேய்களின் தாயான மார்க்கிரட் தச்சரின் பிரித்தானிய அரசு.

ஆயுதங்களை உற்பத்தி செய்து கொள்ளை லாபம் காணும் போது அவை மக்களை கொல்லத்தான் வாங்கப்படுகின்றன என்று தெரியாத பச்சைப்பிள்ளைகளாம் இந்த சர்வதேசநாடுகள். தாங்கள் வளர்த்து விடும் பின்லாடன்கள், சதாம்கள், அசாத்கள் தங்கள் சொல்லை கேட்காமல், தங்களின் கொள்ளைகளிற்கு இடமளிக்காமல், தங்களின் எதிரி நாடுகளிடம் ஆயுதங்கள் வாங்கும் போது மட்டும் இவர்களிற்கு அவர்களின் சர்வாதிகாரம், கொலைகள், மனித உரிமை மீறல்கள் திடீரென தெரிய வரும். உலகில் வேறெந்த நாட்டை விட கூடுதலாக போர் செய்யும், தனக்கு துளியும் தொடர்பில்லாத நாடுகளில் கூட மூக்கை நுழைக்கும் அமெரிக்கா மனித உயிர்களைப் பற்றி பேசும். மனிதர்கள் கொல்லப்படுவதை தாங்காமல் கண்ணீர் விட்டு கசிந்துருகும். தங்களின் வளர்ப்புப்பிளைகளின் மீதே படையெடுத்து உலக சமாதானத்தையும், மக்களின் உயிர்களையும் காப்பாற்றுவார்கள்.

அப்படி அவர்கள் மக்களைக் காப்பாற்ற துடிக்கும் நாடுகளில் எண்ணெய் இருக்க வேண்டும். நாலு லட்சத்திற்கும் அதிகமானோர் சூடானில் கொல்லப்பட்டார்கள். ஜந்து லட்சத்திற்கும் அதிகமானோர் கொங்கோவில் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இன்றுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். இறந்து போன அந்த உயிர்களைப் பற்றி, இறக்காமல் மரணத்தில் வாழும் மனிதர்களைப் பற்றி அவர்கள் மறந்தும் கதைப்பதில்லை. டமாஸ்கசில் சாரின் பயன்படுத்தி ஆசாத் அரசு கொன்றிருக்கிறதை காட்டி தங்களின் படையெடுப்பு முயற்சிகளை நியாயப்படுத்துகிறவர்களிற்கு ஆனந்தபுரத்தின் கருகிப்போன உடல்கள் என்றைக்குமே ஞாபகம் வருவதில்லை. செஞ்சோலையில் செங்குருதி சிந்தி இறந்து போன குழந்தைகளின் சிதைந்து போன சிறு உடல்கள் ஞாபகம் வருவதில்லை.

உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கும் சிரியாவில், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு விரைவில் நடக்கக்கூடும் என்னும் சூழ்நிலையில் கூட ஊடகங்கள் நடப்பவற்றை வெளிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இலங்கையில் மகிந்துவின் அரசு இரும்புத்திரை போட்டு போர் நடத்தியது. ஊடகவியலாளர்களிற்கு அனுமதி அளிக்கவில்லை. அந்த வன்னியின் கொலைவெளிகளைப் பற்றி இந்த மனித உரிமை மயிர்புடுங்குபவர்கள் மறந்தும் கதைப்பதில்லை.

இந்த சர்வதேசத்தின் துணையுடன் தான் இலட்சியதை அடையப்போவதாக சுன்ணாகத்தில் வைத்து சூழுரைத்திருக்கிறார் சுமந்திரன். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். இவ்வளவு மரணங்களிற்குப் பிறகும், இவ்வளவு இழப்புகளிற்குப் பின்னும் இப்படிப் பேச எப்படி உங்களிற்கு மனச்சாட்சி இடங்கொடுக்கிறது? காயம்பட்டவர்களின் வேதனைக்குரல்களின் மத்தியில் நின்று கொண்டு பிழைப்புவாத அரசியல் செய்ய உங்களிற்கு வெட்கம் என்பதே இல்லையா!!

05/09/2013