Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உழைக்கும் மக்களாகிய நாங்கள் எமது பின்னடைவுகளையும் தோல்விகளையும் பற்றி மட்டுமே கவலைபடுகின்றோம். அதற்கான காரணங்களை கண்டறியாது விடுகின்றோம். மூளை உழைப்பாளிகள் மட்டுமன்றி உடல் உழைப்பாளர்களில் சிலரும் இன்னும் தங்களை தொழிலாளர்கள் என்று ஏற்றுக் கொள்வதில்லை. தங்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்றும் ஏற்பதில்லை. தற்போது மூளை, உடல் உழைப்பாளர்கள் அனைவரும் புதிய பாணிகளில் சுரண்டப்படுவதுடன் பிறரை நம்பி வாழும் புதியவகை ஏழைகளாக்கப்பட்டுள்ளனர் என இலங்கை கொம்யூனிஸ்ட்; ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பார்களான தோழர் டபில்யூ.வீ. சோமரத்ன தோழர் இ. தம்பையா வெளியிட்டுள்ள மேதின அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அத்துடன் மக்கள் தொழிலாளர் சங்கம் காவத்தையில் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்தில் பங்குகொள்ள கேந்திரம் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன் அதில் பங்குகொள்ளுமாறு ஜனநாயக, இடதுசாரி அமைப்புகளுக்கும் நபர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; நம் முன்னோர்களின் உழைப்பு, சாதனை, அர்ப்பணிப்பு, தியாகம், ஓயாத போராட்டம் போன்றவைகளே இன்று நாம் காணும் உலகத்தையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஓய்வின்றி நீண்ட நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட எம் முன்னோர்கள் எட்டு மணித்தியாலமே வேலை செய்வோம் என்பதை வழியுறுத்தி அமெரிக்காவின் சிக்காகோவில் நடத்திய மாபெரும் போராட்டத்தின் வெற்றி நாளே இந்த மே தினம்.

அந்நாளை நினைவுகூறும் நாம் அவ்வுரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு பல மணித்தியாலங்கள் ஓய்வின்றி உழைக்கின்றோம். ஆனால் எமது அடிப்படை தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவற்றைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாது இன்றும் சிரமப்படுகின்றோம்.

நாடு அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியபோதும் நாடு மட்டுமன்றி நாமும் பெரும் கடனாளிகளாகியுள்ளோம். வெளிநாடுகளின் முதலாளியத்தின் நவகொலனித்து, நவதாராளவாத கொள்கைகளை அரசாங்கம் ஏற்று பின்பற்றுவதால் இந்நாட்டின் உழைப்பாளர்களாகிய நாமும் அந்நிய சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி வருகின்றோம்.

சில சுயநல பாராளுமன்ற அரசியல்வாதிகளினாலும் தொழிற்சங்கவாதிகளினாலும் இலங்கையின் உழைக்கும் மக்களாகிய நாம் இன, மத, சாதிய ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கப்பட்டுள்ளோம்.

தேயிலை, இறப்பர் பெருந்தோட்டங்களில் உழைப்பவர்கள் தொழில் பாதுகாப்பற்றவர்களாக்கப்பட்டுள்ளோம். தொழிற் சட்டங்களினால் உறுதி செய்யப்பட்டுள்ள ஆகக் குறைந்த பாதுகாப்புகளையும் இழந்து கொண்டிருக்கின்றோம். தனியார் துறை தொழிலாளர்கள் தொழில் தருநரின் தயவில் வாழ்பவர்களாக்கப்பட்டுள்ளோம். அரசாங்கத் துறை தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைகள் இழக்கப்பட்டுள்ளோம். அரசாங்கத்துறைகளில் அதிகாரிகளினதும் பாதுகாப்பு படைகளினதும் பாசிச அடக்கு முறைகள் மேலோங்கி இருக்கின்றன. எல்லா துறைகளிலும் பெண்கள் மிகையான உழைப்புச் சுரண்டலுக்கும் பால் ரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணங்களோ நீதியோ வழங்கப்படவில்லை. அடக்கப்படுகின்ற தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை. யுத்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இன்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ற பேரில் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாடெங்கும் எல்லா விடயங்களிலும் இராணுவ ஆதிக்கம், நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் ஜனநாயகம் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு பாசிச ஆட்சி முறை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அரச கட்டமைப்பிற்கு வெளியிலும் பாசிச சக்திகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் சுரண்டப்படுவர்கள் அடக்கப்படுகின்ற தேசிய இனங்கள், ஒடுக்கப்படுகின்ற பெண்கள் உட்பட ஏனைய பிரிவினரும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்ற பொதுவான அடிப்படையில் ஐக்கியப்பட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்காய் ஓரணிதிரள்வோம்.