Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், மனிதாபிமான பேரவலத்திற்கு முடிவில்லை என்று வன்னிப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வார வெளியீடு ஒன்றுக்கு தமது சோகக்கதைகளை விபரித்துள்ளனர்.

இம் மக்கள் கலந்துரையாடலில் கிளிநொச்சியை அண்டிய பிரதேச மக்கள் முன்வைத்த அவர்களின் சோகக் கதைகளையும் போரின் பின்பும் மீண்டு எழுதத் தடையாக இருக்கின்ற நிலைமைகளையும் இப்பகுதியில் தொகுத்துத் தருகின்றோம்



இறந்தோரின் குடும்ப உதவிக்கும் புலி முத்திரையிடும் அதிகாரிகள்: த.தேவராணி (வயது 47) பச்சிலைப்பள்ளி

இறுதி யுத்தத்தில் கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகளை இழந்த நிலையில் இன்று வாழ்வதா சாவதா என்ற நிலையில் ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்.

இதனிடையே யுத்தத்தில் உறவினர்களை இழந்தவர்களுக்கான கொடுப்பனவுகளையே அல்லது உதவிகளையே நாம் பெறுவதற்காக அரசாங்க அதிகாரிகளை நாடும் போது அதிகாரிகள் சொல்கின்றார்கள் உங்கள் பிள்ளை புலியில் இருந்து இறந்தார். உங்கள் கணவர் புலிகளுடன் தொடர்பில் இருந்து இறந்தார் அதனால் உங்களுக்கு உதவிகள் கிடையாது என்று. உண்மையில் என்னுடைய பிள்ளைகளோ கணவரோ புலிகளுடன் எந்தத் தொடர்பினையம் வைத்து இறக்கவில்லை.

அப்பாவித்தனமாக நாம் இருக்கையில் எறிகணை வீச்சுக்கு உள்ளாகி எல்லோரும் திக்குத் திக்காக ஒடும் போதே இறந்தனர். இப்படியாக எம் கண்முன்ணே இறந்தவர்களுக்கு எதற்காக புலி முத்திரை குத்துகின்றனர். உண்மையில் இந்த அதிகாரிகளால் எங்களது சாப்பாட்டுத் தேவைகளைக் கூட செய்து தரமுடியவில்லை ஆயினும் எதற்காக இன்று யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகளின் பின்பும் புலி முத்திரை குத்துகின்றனர்?

மீள்குடியேற்றம் என பளைப்பகுதிக்கு முதலில் வந்தவர்கள் நாங்கள். இங்கு நாங்கள் காலாகாலமாக இருக்கின்ற போதும் எங்களுக் கென்று சொந்தக் காணி கிடையாது. ஆகவே எங்களுக்கான வீட்டுத்திட்டம் எதையும் தரமுடியாது எனவும் கூறி விடுகின்றனர். இங்கு நாம் மீள்குடியேற்றம் என வந்து குடியேறிய உடன் வழமையான மீள்குடியேற்றக் கொடுப்பனவினைத் தந்தார்கள். பின்னர் ஆறு மாதங்களுக்கு உலருணவு தந்தார்கள் இப்போது எல்லாவற்றையும் நிறுத்தி விட்டார்கள். நடந்து முடிந்த யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்த நாம் இப்போது சாப்பாட்டுக்குக் கூட மிகுந்த துன்ப நிலையிலேயே உதவிகளுக்காகக் காத்திருக்கின்றோம்.

உலருணவை என்றாலும் தாருங்கள் ஜனாதிபதி ஐயா: பெரியதம்பி லோகராஜா (வயது 42) பச்சிலைப்பள்ளி

முள்ளிவாய்க்கால் மட்டும் இடம்பெயர்ந்து பின்னர் அருணாசலம் நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டு தற்போது பச்சிலைப்பள்ளிக்கு வந்துள்ளோம். இங்கு வந்தவுடன் உலருணவு நிவாரணத்தினை எமக்கு வழங்கினார்கள். பின்னர் ஆறு மாதங்களுக்கு மட்டுமே எனக் கூறி அதனையும் நிறுத்திவிட்டார்கள். இன்றைக்கு எங்களுக்குள்ள பிரச்சினை அன்றாட சாப்பாட்டுப் பிரச்சினை தான். அதைவிட எந்தப் பிரச்சினையையோ கவலையினையோ எம்மால் முன்னிறுத்திச் சிந்திக்க முடியவில்லை.

தற்போது வாழ்வாதாரத்திற்கு தொழில் முயற்சிக்கான உதவி தருவதாகக் கூறுகின்றார்கள் இதுவும் கிடைத்தால் தான் நம்பிக்கை. தெற்கில் யுத்த வெற்றி விழாவிற்காக பல கோடிகள் செலவுகள் செய்யப்படுவதாக தினம் பத்திரிகைகளில் பார்க்கின்றோம். இந்த செலவு பௌத்த தர்மத்தின் பிரகாரம் வன்னியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவாக பகிர்ந்தளித்தால் அவன் குடும்பத்திற்காகவது புண்ணியம் சேரும் என்று உங்கள் பத்திரிகை வாயிலாக ஜனாதிபதி ஐயாவிடம் சொல்லுங்கள்.

அரசியல் வாதிகள் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குக்கேட்டு வருகின்றார்கள் பின்னர் அவர்களை எங்கள் கிராமங்களில் காணவே இல்லை. நாங்கள் இப்படியான கஷ்ட நிலைமையில் இருக்கையில் உங்களால் வரமுடிகின்றது என்றால் ஏன் இந்த அரசியல் வாதிகளால் வந்து நிலைமையினை அறிந்து போக முடியவில்லை?

இன்னும் எவ்வளவு காலம் தகரக் கொட்டில்களுக்குள் நாம் இருப்பது. தினம் நோய்கள் வருகின்றன. எங்கள் துன்பத்தினை சகலருக்கும் மறைக்காது போய்ச் சொல்லுங்கள்.

எங்களை காப்பார் யாருமில்லையா? - ஆறுமுகம் ராக்கம்மா ( வயது 77) பரந்தன்

கண்டியில் இருந்து 45வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இங்கு வந்து குடியேறினோம். தமிழனாகப் பிறந்ததில் இருந்து அங்க அடிக்கிறாங்கள் என்று இங்க ஓடி வந்தோம். இங்கு வந்தால் ஓடி ஓடியே திரிகின்றோம். இப்ப வயதுபோன நேரத்தில் சாப்பாடு இல்லாட்டி எங்கே போவது வயிற்றை இறுகக் கட்டிக் கொண்டு நித்திரைதான் கொள்ளுகின்றோம். யாரும் எங்கட துன்பத்தினை கேட்பாரில்லை.

இந்த இடத்திற்கு நாங்கள் இடம்பெயர்ந்து போய் திரும்பி வந்து இரண்டரை வருடமாகின்றது. எனினும் சில தகரங்களுக்குள் கொட்டில் வாழ்க்கைதான். தற்காலிக வீடு என்று இதனை சொல்கின்றார்கள். தற்காலிகம் என்ற சொல்லுக்கு எத்தனை வருடம் தான் அடங்கும் என்று யாருக்கும் தெரியாது. யுத்தம் முடிவடைந்தபின் எம்மீது அனுதாபம் கொண்டு வீடுகளை அமைத்துத் தர முடியாத வெளிநாடுகளும் அரசாங்கமும் இனித்தான் வீடுகளை அமைத்துத் தரப்போகின்றதா?

இன்றைக்கு எங்களுக்குப் பிரச்சினை தினம் எதனைச் சாப்பிடுவது என்பது தான். கூலி வேலைக்கு போனாலும் எங்களை எடுக்கின்றார்கள் இல்லை. கணவரும் இறந்து விட்டார். எங்கே போவது என்று அறியாமல் தான் பத்திகைக்காரர்களுடன் கதைக்கின்றோம்.

தற்காலிக கொட்டிலுக்குள் நிரந்தர வாழ்க்கையாகிவிட்டது - முகமட் மீரா மூக்காயி (வயது 72) பரந்தன்

என்னுடைய கணவர் இறந்து விட்டார். கடைசி யுத்த இடம்பெயர்வின் போது என்னுடைய மகளின் கணவரும் இறந்து விட்டார். இப்போது நானும் மகளும் பிள்ளையுமாக தற்காலிகம் என்று சொல்லி அமைத்துத் தரப்பட்ட இந்தக் கொட்டிலுக்குள் இருக்கின்றோம். மகளுக்கு முப்பத்தி இரண்டு வயது. பேரனுக்கு ஏழு வயது.

இப்படியான நிலையில் மகள் தான் தோட்டங்களில் வேலைக்குப் போகின்றா. அப்படி வேலைக்குப் போனாலும் எப்போதாவது தான் வேலை கிடைக்கும். அதுவும் சம்பளம் சரியாகக் கொடுக்க மாட்டார்கள். என்ன செய்வது எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு எங்க போவது யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் வாழ்கின்றோம்.

எனது பிள்ளை எங்கே? கருணை காட்டுங்கள் - ஜீவகன் கனகாம்பிகை ( வயது 50)  இராமநாதபுரம், புதுக்காடு

யுத்தத்தின் இறுதியில் காணாமல் போன எனது 14வயது (காணாமல் போகையில் வயது) மகன் ஜீவகன் விஜயைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். மேலும் 16வயது மகனை கண் முன்னே எறிகணைக்கு இரைகொடுத்துவிட்டோம். கணவர் எறிகணை வீச்சில் படுகாயமடைந்த உடல் இயக்கமற்றவராக இருக்கின்றார். அவருக்கு கால் துண்டிக்கப்பட்டுவிட்டது. வயற்றிலும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் என்னுடைய முதலாவது பிரச்சினை என்னுடைய மகன் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர் விடுவிக்கப்படவேண்டும். அவருக்கு உண்மையில் எந்த பிரச்சினைகளுடனும் சம்மந்தமில்லை. என்னுடைய மகனைத் தேடி நான் என்னால் முடிந்தவரை அலைந்து விட்டேன். ஆனால் எங்கும் அவர் இல்லை என்கின்றனர். நான் வாழ்வதா சாவதா என தவித்துக்கொண்டிருக்கின்றேன். அவரை தயவு செய்து விட்டுவிடுங்கள் ஐயா (கதறி அழுகின்றார்)

இப்போது நானும் கணவரும் மற்றொரு ஆண் பிள்ளையும் வீட்டில் இருக்கின்றோம். எனக்கு மிஞ்சியுள்ள மற்றையவர் அவர் கணவர் நீடித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரச்சினைகளால் அவர் அதிர்ந்து போயுள்ளார். இந்த நிலையில் எங்கட குடும்பம் தினம் சாப்பாட்டுக்கே படாதபாடு படுகின்றோம்.

இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எங்கட நிலையினைப் பார்த்து விட்டு சில உதவிகளை செய்துள்ளார். வாழ்வாதார உதவிக்காக பதிவினையும் செய்துள்ளார். அதற்காகவும் காத்திருக்கின்றோம்.

அரசாங்கத்தினால் எங்களுக்கென்று உரிய உதவிகள் கிட்டவில்லை. தற்காலிக வீடு மட்டும் கட்டித் தந்துள்ளார்கள். உலருணவு நிவாரணத்தினைக் கூட கேட்டுக் கேள்வியின்றி ஆறுமாதங்கள் நீங்கள் குடியேறி ஆகிவிட்டது எனக் கூறி நிறுத்திவிட்டார்கள். அவ்வாறாக உலருணவு நிவாரணத்தினை நிறுத்தியவர்கள் எங்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு விட்டனவா எனப் பார்க்கவில்லை. மாறாக தங்கள் கடமைக்கு வேலை செய்வதைத்தான் பார்க்கின்றார்கள்.

நாங்கள் யுத்தத்தினால் நிர்மூலஞ்செய்யப்பட்டிருக்காவிட்டால் யாரிடமும் உதவி கேட்க வேண்டியதில்லை. எங்கட பிள்ளைகள் நாங்கள் சேர்ந்து எங்கட சொத்துக்களைக் கொண்டு தொழில் செய்திருப்போம். ஆனால் இன்று எம்மை வெறுங்கையுடன் நடைப்பிணமாகத்தானே மாற்றிவிட்டார்கள். இனி எங்கே போவது?

உறவினர்களை விடுவியுங்கள் - சிவசுப்பிரமணியம் சண்முகராஜா (வயது 46) வட்டக்கச்சி

என்னால் வாய்பேச முடியாது. உங்களிடம் எழுத்தில் தான் என்னுடைய துன்பத்தைக் கூறுகின்றேன். எனது தம்பி இரத்தினகுமாரை யுத்தத்தினை அடுத்துக் காணவில்லை. அவரை எங்கெல்லாம் தேடி விட்டேன். பார்க்க முடியவில்லை. இப்போதும் அவரைத் தேடித்தான் இங்கு வந்துள்ளேன்.

குடும்பத்தில் யுத்தத்திற்குப் பின்பு மிகவும் கஷ்டமான நிலைமை. வாழ்வதற்கே மிகவும் கஷ்டமாகவுள்ளது. இந் நிலையில் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

பெற்ற தாயிடம் பிள்ளையை ஓப்படையுங்கள் - த. பரஞ்ஜோதி (வயது 57)

கடைசி யுத்தத்தில் எறிகணை வீச்சினால் காயமடைந்த நிலையில் எனது மகன் இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார். பின்னர் அவர் இல்லை. என்ன நடந்தது? நாங்கள் தடுப்பு முகாம்கள் சிறைச்சாலைகள் என சகல இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டோம். அவர் இல்லை என்கின்றனர்.

எனக்கு என்னுடைய பிள்ளை வேண்டும். தயவு செய்து ஒரு தாயின் உணர்வினைப் புரிந்து கொண்டு அவரை விடுவியுங்கள். அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர். இன்று நாம் எங்கள் பிள்ளைகள் இல்லாமல் யார் எதைத்தான் தந்தாலும் எம்மால் வாழ முடியாது.

பிள்ளைகள் விடுவிக்கப்படவில்லை முதியவர்கள் தவிக்கின்றோம் - கந்தசாமி பொன்னம்மா (வயது 66) கண்டாவளை

எனது மகன் கந்தசாமி இரவிச்சந்திரன் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் பணிநிமிர்த்தம் அப்போது அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் சென்றார். திரும்பி வரவில்லை. போன இடத்தில் யாரே பிடித்துவிட்டார்கள். இனி எம்மிடம் முறைப்பாடு செய்வதற்கு இடமில்லை. செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை ஆணைக்குழு என சகல இடத்திலும் முறைப்பாடு கொடுத்து விட்டோம். முடிவுதான் இல்லை.

மேலும் மகள் குடும்பம் (நடேசு முரளிதரன்)  குடும்பத்தினருடன் பிரான்சிஸ் பாதர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்கள் இன்றுவரை இல்லை. கிருஸ்ணகுமாரி சுகந்தி (மகள்)  பேரப் பிள்ளைகளான சாருஜன் வயது 4அபிதன் வயது 2ஆகியோர் இன்று எங்க தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடத் தெரியாமல் தவிக்கின்றேன். என்னால் உறங்கவும் முடியவில்லை. உண்ணவும் முடியவில்லை. எவ்வாறாயினும் கருணை காட்டி என் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்.

யுத்தத்தின் பின் எமக்கு வீடு மட்டும் கட்டித் தந்துள்ளார்கள். நாங்கள் பரம்பரையாக விவசாயம் செய்கின்றவர்கள். இப்போது விவசாயத்தினை மீள ஆரம்பிப்பதற்கு எந்தவித வசதிகளும் இல்லை. வீட்டில் ஆட்களும் இல்லை. நானும் என்னுடைய வயது முதிர்ந்த கணவரும் தான் வீட்டில் இருக்கின்றோம்.

எங்கள் துன்பத்தில் இரக்கம் காட்டமாட்டார்களா? - கந்தசாமி தேவி (வயது59) வெளிக்கண்டல்

எனது பிள்ளையினை இப்போது நான் இழந்து நிற்கின்றேன். ஒருவர் 2006ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்துக் காணாமல் போனார். ஆவரைத் தேடி சிறைகள் தோறும் சென்றுவிட்டேன். இருக்கின்றார் என்பார்கள். பின்னர் இல்லை என்பார்கள். நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வரவேண்டியது தான். யாரிடம் போய் எமக்கு நடந்த கதிக்கு பரிகாரம் தேடுவது?

தயவு செய்து போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் என்று மகிழ்ச்சி கொண்டாடுகின்றீர்கள் நீங்கள். நாங்கள் கண்ணீரில் மிதக்கின்றோம். எல்லோரும் மனிதர்கள் தானே. எங்கட துன்பத்தில் பங்கெடுத்து இரக்கம் காட்டமாட்டீர்களா. நாங்கள் எதைக் கேட்கின்றோம். பெற்ற பிள்ளைகளைத் தானே தயவு செய்து விட்டு விடுங்கள். இரந்து கேட்கின்றோம்.

யுத்தத்தால் மீளமுடியாத முக்களாகிவிட்டோம் பொன்னம்பலம் இரத்தினகுமா ( வயது 48) பரந்தன்

பதின்மூன்று வயதில் கேகாலையில் இருந்து இங்கு வந்து குடியேறினோம். தொடர்ச்சியான யுத்தத்தினாலும் அதன் பின்னரும் உரிய கவனிப்பின்றியும் நாம் தெருவில் விடப்பட்டிருக்கின்றோம். முள்ளிவாய்க்கால் மட்டும் ஓடிச்சென்று இப்போது எமது கிராமத்திற்கு வந்துள்ளோம்.

வந்தவுடன் 2பொதிகளில் பொருட்களைத் தந்தனர். அதில் சட்டி பானைகள் இருந்தன. வீடு என்று சொன்னால் தகரக் கொட்டில்களை தற்காலிக வீடுகளாக அமைத்தத் தந்துள்ளார்கள். இக்கொட்டில்களில் தினம் நோய்வாய்ப்பட்டே அலைகின்றோம்.

எனது 17வயது பெண்பிள்ளையை நான் தேடிக்கொண்டிருக்கின்றேன். புடித்துவிட்டு வீட்டில் இருந்த பிள்ளையினைக் கொண்டு சென்றார்கள். இப்போது பிள்ளை இல்லை. நாங்கள் எங்களால் முடிந்தளவிற்குத் தேடிவிட்டோம். இப்போது எங்கே தேடுவது என்ற நிலையில் வசதியின்றி இருக்கின்றோம்.

மீளக் குடியேற்றம் என நாம் வந்தவுடன் ஆறு மாதங்களுக்கு உலருணவு வழங்கினார்கள். இப்போது நிறுத்திவிட்டார்கள். நாம் சாப்பாட்டுக்கு கூலி வேலை செய்துதான் உழைக்கின்றோம். கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கின்றார். சில சமயங்களில்தான் எமக்கும் வேலை கிடைக்கும். இங்கும் எல்லோரும் மிகவும் கஸ்டமான நிலைமையில் தான் இருக்கின்றனர்.

கஞ்சிக்குக் கூட திண்டாட்டம் யாரிடம் உதவி கேட்பது - வீரப்பன் காளியம்மா (வயது 44) சிவபுரம்

சாப்பாட்டுக்குக் கூட தினம் நம்பிக்கை இல்லாத வாழ்க்கை. பத்திரிகைகளில் அது கொடுத்தோம் இது கொடுத்தோம் என்கின்றார்கள் ஆனால் எமக்குத்தான் தெரியும் எமது நிலை. உலருணவு நிவாரணத்தினையும் திடீர் என்று நிறுத்திவிட்டார்கள். உலருணவு நிவாரணத்தினை நிறுத்தியவர்கள் எமக்கென்று தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது பற்றி யோசிக்கவில்லை.

கஞ்சிக்குக் கூட திண்டாட்டம் தான். யாரிடம் போய்க் கேட்பது. நாங்கள் வாழமுடியாத அளவுக்கு எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இனி எங்க போவது என்பது தான் பிரச்சினை.

இப்பவும் புல்லுப் பிடுங்குவதற்குத்தான் தோட்டங்களில் வேலை செய்து விட்டு வருகின்றோம். கணவரும் யுத்தத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக வீட்டில் இருக்கின்றார். குடும்பத்துடன் எப்பிடி பிள்ளைகளைப் படிப்பிக்கப் போகின்றோம்? வாழப் போகின்றோம் என்று நம்பிக்கை இன்றியே இருக்கின்றோம்.

உதவிகளுக்காக காத்திருக்கின்றோம் - சிறிதரன் உமா (வயது 45) பரந்தன்

அரசாங்கத்தின் உதவிகள் என்று எமக்கு கிடைக்கவில்லை. நாங்கள் கடற்தொழில் செய்பவர்கள். ஏதோ வலைகளை மட்டும் வாங்கிக் கொண்டோம். ஆனால் வீடுகள் அமைப்பதற்கு எல்லாம் எங்களால் முடியாது.

யுத்தம் டிவடைந்து ன்றான்டுகள் ஆன பின்பும் இந்தக் கெட்டில்களில் தான் இருக்கின்றோம். மத ஸ்தாபனங்களிடம் உதவி கேட்டுள்ளோம். அவர்கள் பெற்றுத்தருவதாகக் கூறியுள்ளனர். என்ன செய்வது? எமது துன்பத்தினை சொல்லி யார் தான் உதவ முன்வரப் போகின்றார்கள்.

காணி உரித்து வழங்காததால் உதவிகளில் புறக்கணிக்கப்படுகின்றோம் - செல்லையா விஸ்வநாதன் (வயது 42 ) பரந்தன் சிவபுரம்

மீள்குடியேற்றத்தின் பின்னர் 316குடும்பங்கள் மீண்டும் இந்த பரந்தனில் உள்ள சிவபுரம் பகுதிக்கு வந்துள்ளோம். இங்கு எமக்கு யாருக்கும் நிரந்தர வீடுகள் அமைத்துத் தருகின்றார்கள் இல்லை. காரணம் எங்களுக்கு இந்தக்காணிகளில் உரித்து உரியவாறு வழங்கப்படவில்லை என்கின்றார்கள்.

நாங்கள் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் இருக்கின்ற போது அரசாங்க அதிகாரிகளால் நாம் இங்கு குடியேற்றப்பட்டோம். பின்னர் எமது இந்த காணிகளுக்கு காணி பெர்மிட் வழங்குவதற்கான வேலைகள் நடைபெறுவதாக பலதடவைகள் பதிவுகளை மேற்கொண்டார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

எனவே எமக்கு காணி உரித்தினை உரியவாறு அரசாங்க அதிகாரிகள் வழங்கி உரியவகையில் வீடமைப்புத் திட்டத்திற்கான வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.

--http://www.lankaviews.com/ta/