Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து, வாக்குப் போட்டு இதைச் சட்டமாக்கும் கும்பலே குற்றக் கும்பல்;. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்குவிப்புத் தொடங்கி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள். இவர்களில் பலர் மாபியாக்களாக செயற்படுவது தொடங்கி பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். இதற்கு பற்பல முகங்கள் உண்டு. இவர்கள் தான் சட்டத்தை உருவாக்குகின்றனர். இந்த சட்டத்தை கையில் எடுத்து, அதை அமுல்படுத்தும் பொலிஸ் நிலையங்களை கண்டு அஞ்சுமளவுக்கு அவையோ வதைமுகாம்களாக இருக்கின்றது. இது இலங்கை மக்கள் அனைவருக்கும் அனுபவரீதியாக தெரிந்த ஒரு பொது உண்மையும் கூட.

இவைகளால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்பதும், மக்களுக்கு எதிரானது என்பதுமே உண்மை. தனிமனித குற்றங்களைக் காட்டி, இவற்றை மூடிமறைக்க முடியாத வகையில் அவை மக்களுக்கு தெளிவாக உண்மையாக அவை இருக்கின்றது. இந்த உண்மையை நன்கு அனுபரீதியாக தெரிந்துகொண்ட மக்கள், இவற்றை உணர்வுபூர்வமாக எதிர்த்துப் போராட முன்வருவதில்லை. மக்கள் தம்மைத் தாம் அணிதிரட்டாத வரை, அதை தலைமை தாங்கி அவர்கள் வழிநடத்தாத வரை, மக்கள்விரோத சட்டங்கள் சட்டபூர்வமானதாகவும், மக்கள் ஆதரவு பெற்றதாகவுமே தோற்றம் பெறுகின்றது. மக்கள் தம்மைத் தாம் அணிதிரள வழிகாட்டுவதன் மூலம் தான், இந்தச் சட்டவிரோதமான «சட்டங்களுக்கு» எதிரான உண்மையான போராட்டம் ஆரம்பிக்கும். இதை முன்கூட்டியே தடுக்கத்தான், அரசு தனது சட்டவிரோத செயல்களை சட்டங்களாக்கி சட்டபூர்வமானதாக்குகின்றது.

இந்த சட்டவிரோத செயற்பாடுகளை சட்டங்களாக்குகின்ற பின்புலம் வெறும் ஆளும் தரப்பு மட்டும் சார்ந்தது அல்ல. பெரும் மூலதனத்தைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் (அன்னிய) மூலதனத்தை பாதுகாக்க இருக்கும் அரசு, மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுகின்றனர்.

அரசின் மக்கள்விரோதச் செயற்பாடுகளை சட்டங்களாக்கி, அதை சட்டபூர்வமானதாக்கி விடுவது தான் குற்றவியல் திருத்த சட்டம். சட்டத்துக்கு எதிராகவே செயற்படும் ஆளும் தரப்பு, சட்டத்திருத்தம் மூலம் அதையே சட்டத்தின் ஆட்சியாக்க விரும்புகின்றது. சட்டபூர்வமற்ற தன் செயலை ஜனநாயகத்தின் ஆட்சியாகக் காட்ட, பெரும்பான்மையை பயன்படுத்தி அதை சட்டமாக்குகின்றது. அந்தப் பெரும்பான்மையைப் பெற பணம், அதிகாரம் தொடங்கி இனவாதம், மதவாதம் வரை பேசி, மக்களை ஏமாற்றி அடைவது தான் இந்த பெரும்பான்மை. இதைத்தான் ஜனநாயகம் என்கின்றனர்.

இந்த மோசடிகளைச் செய்தபடி மக்களுக்காக என்று கூறிக்கொண்டு இயங்கும் காவல் நிலையங்கள் (பொலிஸ் நிலையங்கள்), சித்திரவதைக் கூடங்களாக இயங்குகின்றன. சித்திரவதை செய்து குற்றங்களை கண்டுபிடிப்பது என்பதே சட்டவிரோதமானது. இப்படி சட்டவிரோதமானதை சட்டபூர்வமாக்குவது தான் திருத்தச் சட்டத்தின் சாரம். சித்திரவதை செய்து குற்றத்தை நிறுவும் பொலிஸ் ஆட்சிக்கு, தீர்ப்பை வழங்கும் பொம்மையாக நீதிமன்றத்தை இருக்குமாறு சட்டம் கோருகின்றனர். குற்றவாளியாக்கி, தீர்ப்பை எழுதி வைத்துக்கொண்டு வாதிட சட்டத்திருத்தம்.

இந்த சட்டத்தை கொண்டு வந்தவர்கள் தான், இலங்கையில் நடந்த பாரிய குற்றங்களுக்கு பொறுப்பாளிகள். இலங்கையில் நடந்தேறிய கடத்தல்கள், காணாமல் போதல்கள், கொலைகளில் பெரும்பகுதியைச் செய்தவர்கள், செய்பவர்கள் இவர்கள். இப்படி இவர்களால் நடந்த கொலைகள் முதல் காணாமல் போனவர்கள் பற்றிய எந்த விசாரணையையும் மறுக்கும் இந்த அரசு தான், குற்றத்தை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் என்பது தன் சொந்தக் குற்றத்தை மூடிமறைக்கத்தான்.

அரசையும் ஆளும் தரப்பையும், ஆளும்தரப்பு சார்ந்து மேல் இருந்து எதிர்க்கின்றவர்களைக் கூட இந்த அரசு விட்டுவைக்கவில்லை. இனம் தெரியாதவர் மூலம் மிரட்டவும், தாக்கவும், கொல்லவும் முனையும் இந்த அரசு தான், நாட்டின் நீதியையும் சட்டத்தையும் குழி தோண்டி புதைத்து வருகின்றது. அதை சட்டபூர்வமாக்க சட்டத்திருத்தம் செய்கின்றது.

அரசு சாதாரண மக்களினதும், அந்த மக்களை அணிதிரட்டிப் போராட முனைவோரினதும், ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதில்லை. குண்டர்களைக் கொண்டு வீதியில் அடக்குமுறை செய்யும் இந்த அரசு, சட்டத்தைக் கொண்டு தண்டிக்கவும் முனைகின்றது. இதன் மூலம் நாடு சட்டவிரோதமாகவும், சர்வாதிகார ஆட்சியாகவும் மாறிச் செல்லுகின்றது.

வலிந்த இன மத ஒடுக்குமுறைகள் மூலம், இதை மூடிமறைக்க முனைகின்றது. சட்டத் திருத்தங்கள் மக்கள் சார்ந்தாக காட்டுவது போல் தான், தூண்டப்படும் இனமத உணர்வுகள் பெரும்பான்மை நலன் சார்ந்ததாக காட்ட முனைகின்றது. மக்களைப் பிரித்து தன்னை பெரும்பான்மையின் பிரதிநிதியாகக் காட்டி அணுகுவதன் மூலம், தனது சர்வாதிகாரத்தை புகுத்தி வருகின்றது.

இலங்கை வாழ் முழு மக்களையும் அடக்கியொடுக்கத்தான் சட்டங்கள். மக்களை ஏமாற்ற, இவை மக்களுக்கானதாக காட்டிக் கொள்ள முனைகின்றது. பெரும் மூலதனத்துக்கும், அதை பாதுகாப்பதற்கும் அப்பால் சட்டங்கள் இல்லை. அன்னிய மூலதன நலனை பாதுகாக்கும் சட்டம் தான் இருக்கின்றது, தேசிய நலனை முதன்மைப்படுத்திய சட்டங்கள் இல்லை.

இப்படி மக்களுக்கும், தேசத்துக்கும் எதிரான சட்டங்கள் தான் இருக்கின்றன. அதை பாதுகாக்க நடைபெறும் சட்டவிரோத அரச செயற்பாடுகளை சட்டபூர்வமாக்குவது தான் புதிய சட்டங்களும், சட்டத்திருத்தங்களும். தனிமனித குற்றங்களைக் காட்டி, ஆளும் வர்க்க குற்றங்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் தான் தொடர்ந்து சட்டமாக புகுத்தப்படுகின்றது. மக்களின் உரிமைகளைப் பறிக்கவும், அவர்களை ஒடுக்கவும் சட்டம். மக்களுக்காகவும், தேசத்துக்காகவும் சட்டங்கள் என்பது, மக்கள் தம்மைத் தாம் ஆளும் போது மட்டும்தான் உருவாக்க முடியும். இல்லாதவரை சட்டங்கள் என்பது மக்கள் விரோத சட்டங்கள் தான்.

பி.இரயாகரன்

24.01.2013