Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?

மக்களுக்கு ஒரு சுபீட்சத்தை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்கவா!? இல்லை. இன்னும் ஏழு வருடங்கள், மக்களை ஓடுக்கி அவர்களை சுரண்டி தின்பதற்குத் தான் இந்த அவசரமான தேர்தல் கூத்;து. இன்னும் இரண்டு வருடத்தின் பின் தோதலை நடத்தினால், தாங்கள் வெல்ல முடியாது என்று உறுதியான ஒரு நிலையில் தான், இந்த அவசரமான திடீர் "ஜனநாயகத்" தேர்தல்.

ஆனால் விளைவு என்ன? இன்றே மண்ணை கவ்வி விடுவார் என்ற அச்சம், பீதி மகிந்த குடும்பத்தையே ஆட்டிப்படைக்கின்றது. தோற்றால் ஒரு இராணுவ ஆட்சி மூலம், தங்கள் சர்வாதிகார அதிகாரத்தை தக்க வைக்கும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.

அடுத்த இரண்டு வருடம் பின்னான தேர்தலுக்கான அவசியம் ஏன் இன்று எழுந்தது? எதிர்காலத்தில் மக்களுக்கு எதிரான அரசியல் விளைவுகள் எதுவாக இருக்கும்?

1.தமிழினவழிப்பு யுத்தத்தில் நான் வென்றவன் என்று பேரினவாதம் மூலம், இந்த தேர்தலில் மகிந்தா வெல்ல முனைகின்றார்.

2.எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு எதிரியைக் காட்டி, அவர்களை ஏமாற்றி வாக்கைப் பெற முடியாத வெற்றிடம்.

3.யுத்தக்கடன் முதல் நாட்டை விற்று திவாலாக்கிய அனைத்தும், இன்று பாரிய சுமையாக, மக்கள் மேல் வெளிப்படையாக வெளிப்பட்டு வருகின்றது. அந்த சுமை அரசுக்கு எதிரானதாக மாறி வருகின்றது.

4.வன்னி நிலம், மன்னார் கடல் அன்னியரிடம் தாரைவார்க்க உள்ளனர். இங்கு வாழ்ந்த மக்களை, மீள பழையபடி அனைவரையும் அங்கு குடியேற்றப் போவதில்லை. இது இலங்கை தழுவிய அளவில், அன்னிய மூலதனத்துக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான அரசியல் போக்கை உருவாக்கும். அடக்குமுறையும், அன்னியக் கொள்ளைக்குமான அரசியல் சேவை, மக்களின் அதிவெறுப்புக்குரிய ஒன்றாக மாறவுள்ளது.

5. இந்தியா மற்றும் சீனா இலங்கையில் முதலிட்டு சுரண்டும் ஆதிக்கம், மகிந்த குடும்ப சர்வாதிகாரம் மூலம் நடைபெறுவதால், மேற்குடனான முரண்பாடுகள் கூர்மையாகின்றது. மேற்கு யுத்தக் குற்றத்தையும், அதன் நடத்தைகளையும் முன்னிறுத்தி, அதை அம்பலப்படுத்தி மகிந்தாவின் அதிகாரத்தை தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கும்.

இது போன்ற காரணங்களும், அடுத்த வரும் இரண்டு வருடம் மக்கள் மேலான  ஒடுக்குமுறையும், இதன் பின்னான தேர்தலை நிச்சயமாக தோல்வியில் முடிக்கும். இன்று தேர்தலை வைப்பதன் மூலம், ஏழு வருடங்கள் மக்களை ஒடுக்கி சுரண்ட முடியும் என்ற காரணத்தினால் தான் இந்த அவசரமான தேர்தல்.

புலி – புலியெதிர்ப்பு அடிப்படையில் பிளவுற்ற தமிழ் பிரச்சாரகர்கள்

யார் எல்லாம் புலியெதிர்ப்பின் அடிப்படையில் அன்று புலியை எதிர்த்து மகிந்தாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து நின்றனரோ, அவர்கள் மகிந்தாவுக்கு ஏதோ ஒரு வகையில் பிரச்சாரம் செய்கின்றனர். யார் புலியுடன் நின்றனரோ, அவர்கள் சரத் பொன்சேகாவுக்காக பிரச்சாரம் செய்கின்றனர். இதில் வட்டுக்கோட்டை கொள்ளைக்காரர்களும், நாடு கடந்த தமிழீழக் கொள்ளைக்காரர்களும், தமிழ்மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதையும் வெளிப்படையாக சொல்லவில்லை.

மறைமுகமாக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த வகையில் திட்டமிட்ட இரு துணைப் பிரச்சாரங்கள். புலி – புலியெதிர்ப்பு அடிப்படையில் இது நடக்கின்றது. மகிந்தாவை ஆதரிக்கும்படி மார்க்சிய லெனினியத்தின் பெயரிலும், நக்குண்ணிப் பிரச்சாரம்.

தமிழ்மக்கள் தங்கள் அறிவின் எல்லைக்குள், இந்த பிரச்சாரத்துக்கு வெளியில் முடிவுகளை எடுக்கின்றனர். தங்களை கொன்ற, தமிழ் மக்களை இனவழிப்பு செய்த இந்த அரசை தோற்கடித்து, பழிவாங்கும் உணர்வு மேலோங்கி காணப்படுகின்றது. இதை அங்குமிங்கும்  பொருத்த முடியாது.

இங்கு மகிந்தாவின் அரச பாசிசம் தமிழ்மக்களை புலியிடமிருந்து மீட்டார் என்ற புலியெதிர்ப்பு பிரச்சாரக் கூச்சல், அந்த மக்கள் மகிந்தாவுக்கு எதிரான தங்கள் வாக்களிப்பு மூலம் பொய்யாக்குவார்கள் என்பது அநேகமாக முடிவாகிவிட்டது.

இது வன்னி மக்களின் (யாழ் மக்களுக்கு வெளியில்) பதிலாக இருக்கும். இதை மேற்கு நாடுகளின் வழி வந்த வாக்களிப்பு என்றோ, கூட்டமைப்பின் வாக்கென்றோ, புலி வாக்கென்றோ கொச்சைப்படுத்தி புனையும் புலியெதிர்ப்பு அடிப்படைகள் அனைத்தும், பொய்யானவை புரட்டுத்தனமானவை.

மாறாக தமிழ் மக்களின் உரிமைக்காகவும், இனவழிப்புக்கு எதிராகவும் தான், தமிழ்மக்கள் வாக்களிக்க உள்ளனர். இது தவிர்க்க முடியாமல் மகிந்தாவுக்கு எதிரான வாக்களிப்பாக இருக்கும். சரத்பொன்சேகா இதை தீர்ப்பாரா அல்லது ஒடுக்குவாரா என்ற அறிவின் பாலானதல்ல. இந்த நிலையில் மக்களில்லை. தன் எதிரியாக இன்று உள்ளவரை வெறுக்கும் மக்களின் மனப்பாங்கு சார்ந்ததுதான் இந்த வாக்களிப்பு. இந்த அரசியல் வெற்றிடத்தை புரட்சிகரமான அரசியல் வெல்லாத வரை, இதை கூத்தமைப்பு போன்ற சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் தங்கள் அரசியலாக்கி அதை அறுவடை செய்கின்றனர் என்பது தான் மறுபக்க உண்மை.

பி.இரயாகரன்
22.01.2010