Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெயரளவிலான பாராளுமன்ற ஜனநாயகம் தான் இலங்கையில் நிலவுகின்றது அது தன் சட்டம் நீதி என அனைத்தையும், பொதுமக்களுக்கு மறுதலிக்கின்றது. மகிந்தா தலைமையிலான ஒரு கொலைகாரக் கும்பலின் பாசிச படுகொலை ஆட்சியை, சமூகத்தின் ஒரு பொது ஒழுங்காக நாட்டில் நிறுவி வருகின்றது.

இதற்கமைய இலங்கையில் அனைத்து சிவில் கட்டமைப்புகளையும் இல்லாதொழிக்கின்றது. நாட்டின் சிவில் சட்டம், சிவில் ஒழுங்கு என அனைத்தையும் முடக்கி வருகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகின்றது. அதை அடித்தும் மிரட்டியும் படுகொலை செய்தும், முற்றாக அதை செயல் இழக்க வைக்கின்றது. மறுபுறத்தில் தேர்தல்கள் என்பது ஊர் உலகத்தை ஏமாற்ற, சடங்குக்காக அவை நடத்தப்படுகின்றது. வன்முறை மூலமான தேர்தலில் முறைகேடுகள் ஊடாக பாசிசம் தன் கொடியை பறக்க விடுகின்றது.

 

மறுபக்கத்தில் நாட்டின் உயர் அதிகாரங்கள், சிவில் கட்டமைப்புகள் இராணுவத்திடம் வழங்கப்படுகின்றது. தம் பாசிச பயங்கரவாதத்தை நிறுவ, வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் மேல் கடும் கண்காணிப்புடன் அவர்களை  நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றது.

 

ஒரு குற்றக் கும்பல் தான் இன்று நாட்டை ஆள்கின்றது. இதற்கு ஒரு குற்றக் குடும்பம் தலைமை தாங்குகின்றது. இதன் மூலம் தன் குற்றத்தை மூடி மறைக்க முனைகின்றது. தாம் தொடர்ச்சியாக ஒரு ஆளும் வர்க்கமாக ஆட்சியில் அமர்ந்து இருக்க, அனைத்து சமூக கட்டுமானங்களையம் ஒடுக்க முனைகின்றது. இதனால் இது எல்லாவிதமான சட்டவிரோத செயலையும், மனிதவுரிமை மீறல்களையும் செய்து வருகின்றது. அதை நியாயப்படுத்துகின்றது. புலியென்று முத்திரை குத்துகின்றது.

 

கடத்தல், காணாமல் போதல், படுகொலை செய்தல் என்பது, புலியொழிப்பின் பெயரிலான மகிந்தா சிந்தனையாக இருந்தது, இருக்கின்றது. கடந்தகாலத்தில் 3000 முதல் 5000 பேர்களை சட்ட விரோதமாக இந்த மகிந்தா சிந்தனையிலான அரச குண்டர்கள், தங்கள் இரகசிய வதைமுகாம்களில் வைத்தே கொன்றொழித்தனர். இன்று அவை தொடருகின்றது. இந்த நிலையில் பாதாள உலகத்தை அழித்தல் என்ற பெயரில், சட்டவிரோதமான பாசிச கொலை வெறியாட்டத்தை இந்த அரச தொடங்கியுள்ளது. நாட்டின் சட்டங்கள், நீதிகள் என அனைத்தையும் புறக்கணித்து, சட்டத்துக்கு புறம்பான இந்த பாசிச செயல்கள் அரங்கேறுகின்றது.

 

இதன் மூலம் நாட்டின் சட்டம் மற்றும் ஜனநாயகக் கூறுகளை எல்லாம்  இல்லாதொழிக்கும் பாசிசம், இன்று தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. எங்கும் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. ஜனநாயகம், சுதந்திரம் அனைத்தையும், மனித குலத்துக்கு மறுக்கின்றது.

 

தமிழ் மக்கள் மேலான இனவழிப்பை நடத்தியவர்கள், இனக் களையெடுப்பை தங்கள் திறந்தவெளி வதைமுகாமில் மக்களை அடைத்து வைத்து நடத்துகின்றனர். இன்று எங்கும் தமிழ் மக்கள் முற்றாக இராணுவ சூனியப் பிரதேசத்தில், அவர்களின் கண்காணிப்பின் கீழ்  வாழவேண்டிய அவலம். இங்கு அரசின் கீழ் இயங்கும் கொலைகார கூலிக்குழுக்கள், மக்களை மிரட்டி அதிகாரம் செலுத்துகின்றன. இதைத்தான் இங்கு சிவில் நிர்வாகம் என்கின்றனர். இவர்கள் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள தேர்தல்; நாடகம்.

 

எங்கும் எதிலும் சட்ட விரோதக் கும்பலாகவே, இக் கும்பல்கள் இயங்குகின்றது. சகலவிதமான மனிதவுரிமை மீறல்களையும் வெளிப்படையாகவே செய்கின்றது. இந்த கொலைகாரக் குண்டர் கும்பலை கொண்டு தமிழ் மக்களை அடக்கியொடுக்க, ஆளுநனராக சிங்களவர்களை நியமிக்கின்றது இந்த பேரினவாத அரசு. அதேநேரம் குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளைக் கொண்டு, தமிழ் பகுதியை நிர்வாகத்தின் பெயரில் அடக்கியாள முனைகின்றது.

 

தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதற்கு புலிகள் தான் தடையென்றவர்கள், இன்று புலியில்லாத ஒரு நிலையில் தீர்வையே மறுக்கின்றனர். இந்த பாசிச இனவாத கிரிமினல்கள் தங்கள் சொந்த முகத்தை, தம் பாசிச இராணுவ இனவழிப்பு வடிவங்கள் மூலம் தான் பதிலளிக்கின்றனர்.

 

மறுபக்கத்தில் இந்த இராணுவ பாசிசம் மூலம், சிங்கள மக்களை அடக்கியாள தமிழினத்தின் உரிமையை மறுத்து தன்னை இனவாதியாக காட்டிக்கொள்கின்றது. பாதாள உலகத்தை அழித்து, தன் "தூய்மையைக்" காட்டியும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட முனைவதாக கூறிக்கொண்டு, சட்டத்தை கையில் எடுத்து முழுநாட்டின் மீதும் வன்முறையை நிறுவி வருகின்றது.

 

அரசுக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடும் வழக்கறிஞர்களை தேசத்துரோகிகள் என்கின்றனர். அரசை எதிர்த்து எழுதும் பத்திரிகை, பத்திரிகையாளரை தேசத்துரோகி என்கின்றனர். கண்காணிப்பு, கடத்தல், அடி உதை மற்றும் படுகொலை மூலம் நாட்டை முழு அச்சத்தில் உறையவைத்து, தமது பாசிச இராணுவ ஆட்சியை மேலும் பல ஆண்டுக்கு நிறுவமுனைகின்றனர். பாசிசங்களில் ஒன்று மற்றொன்றை அழித்து, முழு நாட்டிலும் ஒரு கும்பலின் பாசிச பயங்கரவாதத்தை உலகறிய நிறுவி வருகின்றது.

 

பி.இரயாகரன்
13.07.2009