Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதற்கு மாறாக சுயவிமர்சனம் செய்ய மறுக்கின்ற, பொதுக்கொள்கையிலான வேலைத்திட்டத்தையே புலி கோருகின்றது. "சுற்றிச்சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்", கயிறு திரிக்கவே முனைகின்றனர்.

இனி புலிகளிடம் எந்த தியாகமும் கிடையாது. இதைச் சார்ந்த எந்த வீரமும் கிடையாது. இனியும் கூட புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு, கொடிபிடிக்க மட்டும்தான் முடியும். இதைத்தான் தமிழ் மக்களின் விடிவிற்கான, ஒரு பொதுவேலைத்திட்டமாக புலிகள் காட்ட முனைகின்றனர்.

கடந்த காலத்தில் புலிகள் மாற்றுக்களை எல்லாம் அழித்தபடி, தாமே தொடர்ச்சியாக போராடுவதாக கூறினர். இதன் மூலம் தமக்கு பின்னால் ஒரு தியாகத்தைக் காட்டினர். இதன் மூலம் ஒரு படுபிற்போக்கான இன அழிவினை, சமூகநடைமுறையாக்கினர். அதையே அவர்கள் அறுவடை செய்தனர்.

இவர்கள் தான் இன்று பொதுவேலைத்திட்டத்தைக் கோருகின்றனர். இவை எதற்காக? ஏன்? இவை தமிழ்மக்கள் நலன் சார்ந்ததா? இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் காரணங்கள், இவர்கள் சார்ந்து அவை அனைத்தும் உண்மையானவையல்ல. அவை அனைத்தும்  நேர்மையற்றவை. ஏன் இதை இப்படி நாம் கூறுகின்றோம்.

முதலில் மக்கள் மேல் புலிக்கு அக்கறையிருந்தால், இருப்பதாக கருதும் எவனும், கடந்தகால வரலாறு முழுமையையும் முழுதுமாய் சுயவிமர்சனம் செய்ய வேண்டும். ஏன் அதை விமர்சனம் கூட செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம்தான், இந்த மக்களின் இன்றைய நிலைமைக்கான வரலாற்றுக் காரணத்தை சரிசெய்ய முடியும். இல்லாத அனைத்தும், புதிய வரலாற்றுத் தவறுகளை மீண்டும் அம்மக்கள் மேல் திணிப்பதாகவே அமையும்.

தமிழ் மக்களுக்கு, முஸ்லீம் மக்களுக்கு, கிழக்கு மக்களுக்கு, வன்னி மக்களுக்கு, சிங்கள மக்களுக்கு எதிரான புலிகளின் ஒவ்வொரு நடடிவடிக்கையையும், இன்று இனம் காணப்பட வேண்டும். அவை விமர்சனம் சுயவிமர்சனம் மூலம், சரிசெய்யப்பட வேண்டும்;. அந்த மக்களிடம் பகிரங்கமாகவே, இதற்காக மன்னிப்புக் கோரவேண்டும். இதைச் செய்யாத, செய்ய முன்வராத எவையும், மக்களுக்கானவையல்ல.

1. கடந்த 25 வருடத்தில், 20000 முதல் 30000 வரையிலான பொதுமக்களை புலிகள் கொன்றுள்ளனர். இதில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அடங்குவர். தமிழன் அல்லாத சிங்கள முஸ்லீம் அப்பாவி மக்களைக் கூட, எம்மினத்தின் எதிரியாக காட்டி கொன்றழித்த வரலாறு எம் வரலாறு. அது கிழக்கு மக்களுக்கு எதிராகக் கூட, இறுதிக்காலத்தில் பரிணமித்தது. இப்படி மக்களை எதிரியாக்கி, கொன்ற வரலாறு எம் தேசியம். இதை நியாயப்படுத்திக் கொண்டும், இதைப்பற்றி பேசாதும், மக்களுக்காக யாரும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவும் செயல்படவும் முடியாது.

2. அடுத்து சுயவிமர்சனம், விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டியது, கடந்த காலத்தில் தேசியத்தின் பெயரில் வைக்கப்பட்ட அரசியல். இந்த தமிழ் தேசிய அரசியல், மக்களுக்கு எதிரானதாக இருந்துள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களையும், ஒடுக்கும் தமிழ் தேசியமாகவே புலிகளின் தேசியம் இருந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் எதிரான தேசியம், அந்த சமூகப் பிரிவுகளை ஒடுக்கியது. இதன் மூலம் மொத்த மக்களையும், அது தனக்கு எதிராக நிறுத்தியது.

இந்த அரசியல், உண்மையான தமிழ் தேசியத்தை மறுப்பதாக மாறியது. தேசியம் என்பது சிங்கள அரசுக்கு பதில், தமிழ் அரசு என்று காட்டுமளவுக்கு அது எதிர்ப்புரட்சியாக மாறியது. தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்கள் மறுக்கப்பட்டு, அன்னிய சமூக பொருளாதார நலனை ஏற்றுக்கொள்ளும் ஒரு தனி அரசைக் கோரும் எதிர்ப்புரட்சியே, தமிழ் தேசியமாகியது.

இப்படி மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த தேசியக் கூறுகளை ஒடுக்கும் வண்ணம், பாசிச மாபியா வழிகளின் மூலம் அவை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது. தேசியம் மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த தேசியம் மீது, ஒரு எதிர்ப்புரட்சி கூறாகவே பயணித்தது. இதை சுயவிமர்சனம், விமர்சனம் செய்யாத எந்த நிலையிலும், யாரும் மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவும் செயல்படவும் முடியாது.

3. இன்றைய நிலையை, எதார்த்தத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். புலியின் ஆயுதப் போராட்டம் மட்டுமின்றி, அதன் அடாவடித்தனமான அதிகாரமும் முடிவுக்கு வந்துள்ளது. மண்ணில் எஞ்சியது உதிரியான அரசியலற்ற புலி அராஜகக் குழுக்களும், தனிமனிதர்களும் தான். இது தவிர அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த எதார்த்தம் ஒருபுறம். மறுபுறம் புலத்துப் புலிகள், பழைய அதே அடாவடித்தனத்துடன் கனவில் மிதக்கின்றனர்.

ஏகாதிபத்தியத்துக்கு பின்னால், கொடி பிடித்துக் கொண்டு ஒடுகின்றனர். மக்களை எப்படி வெல்வது என்பதையோ, தம் தவறுகளை இனம் கண்டு திருத்தவோ முனையவில்லை. அன்னிய சக்திகள், தமிழ் மக்களுக்கு மடிப்பிச்சை போடும் என்று படம் காட்டுகின்றனர்.

இவை எவையும், தமிழன் பெயரால் எலும்புத்துண்டைக் கோருவதுதான். இன்றைய உலக ஒழுங்கையும் அது சார்ந்த எதார்த்தத்தையும், எம் இன்றைய எதார்த்தத்தையும் புரிவது அவசியம். மக்கள் மக்களுக்காக போராட, அவர்களின் சொந்த செயலை செயல்படுத்துவது அவசியமானது. மக்கள் தாம் தம் வழியை தாமே தீர்மானிக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் என்பதை சிந்திப்பதே அடிப்படையானது.

இந்தவகையில் இலங்கையில் வாழும் மக்களை, முற்றுமுழுதாக சார்ந்து நிற்கும் ஒரு பொது வேலைத்திட்டமே மாற்று வழியாகும். இதற்கான முயற்சி என்பது, கடந்த தவறுகளை இனம்காட்டி விமர்சனம் சுயவிமர்சனம் செய்து முன்னேறுவது. இலங்கையில் வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், இலங்கை அரசுக்கு எதிராக ஜக்கியப்படுத்த முனைவதாகும்;;. இதற்கு தடையான அனைத்தையும், நாம் எம்மிலிருந்து களைவதாகும்.

மக்களின் நலன் சார்ந்த பொதுக்கொள்கை, அதை ஒட்டிய வேலைத்திட்டம் என்பது  இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அதாவது அரசுக்கு எதிரான, அனைவரையம்  ஒன்றிணைக்க வேண்டும். அந்தளவுக்கு எம்மை நாம்  விமர்சனம், சுயவிமர்சனம் செய்ய வேண்டும். இதற்கமைய ஒடுக்கப்;பட்ட உலக மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். இப்படி மக்களுக்கு எதிரான எதிரிகளை, பொதுக்கொள்கையிலான வேலைத்திட்டம் இனம் காணவேண்டும். (வேலைத் திட்டம் ஒன்றை, நாம் விரைவில் வெளியிடவுள்ளோம்).

இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும், அரசுக்கு எதிராக இணைக்காத எவையும் மக்கள் நலன் சார்ந்தவையல்ல. இந்த அடிப்படையில், சிந்தனை செயல் நடைமுறையை முன்னெடுக்காத வரை, தமிழ் மக்களுக்கு விடிவில்லை. இந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவற்றை நடைமுறையில் முன்வைக்காத வரை, எந்த உணர்வும் மக்களில் இருந்து எழுபவையமல்ல. அவை மக்கள் விரோத உணர்வேயாகும்.

பி.இரயாகரன்
06.06.2009