Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள்.

 

இந்த பேட்டி, அரச "ஜனநாயகம்;" எப்படிப்பட்டது என்பதையும், அது கையாளும் பாசிச வக்கிரத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. குற்றவாளிக் கும்பல்கள், நாட்டை ஆளும் விதமும், ஆள விரும்புகின்ற விதமும் இது. இப்படி இலங்கையில் மகிந்த சிந்தனை எவ்வளவு அகோரமானது என்பதையும், கொடூரமானது என்பதையும், இது எடுத்துக் காட்டுகின்றது. புலிகள் பகுதியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் மிரண்ட படி, விழுங்கியும், திணறியும், சமாளித்தளித்த பேட்டி, பாசிசத்தின் முகத்தை எடுத்துக்காட்டுகின்றது. இந்த மருத்துவர்களை அரசு தன் வதைமுகாமில் வைத்து வதைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தான், இந்தப் பேட்டியை கொடுக்கும்படி பத்திரிகையாளர்களை கொண்டு வந்துள்ளது. வேடிக்கையான பிரச்சார உலகம்.

 

அவர்களை "ரை" கட்டிய பொம்மைகளாக, மேடையில் நிறுத்தியது. அவர்கள் மூலம் அரசு தான் குற்றம் எதையும் யுரியவில்லை என்று, சொல்ல வைக்கின்றது. இப்படி சொல்ல வைப்பதன் மூலம், குற்றம் எதுவும் இழைக்கப்படவில்லை என்று உலகம் நம்பிவிடும் என்று நம்பும், பாசிச கிறுக்கர்கள் தான் இந்த நாட்டை ஆளுகின்றனர்.

 

இலங்கையில் ஒரு சாத்திரி கூட, தமக்கு எதிராக சாத்திரம் செல்ல முடியாது. இதற்காக சாத்திரியைக் கூட கைது செய்து சித்திரவதை செய்கின்றது அரச பாசிசம். இப்படி எல்லாவற்றையும் ஒடுக்குகின்றது இந்த அரசு. கருணா என்ற மகிந்தாவின் பாசிச நாய், தமிழ் கட்சிகளே இனி இலங்கையில் இருக்கக் கூடாது என்று குலைக்கிறது. அது கட்சிகளை மிரட்டியும், உருட்டியும், விலை பேசியும், அவற்றை இல்லாததாக்குகின்றது. கீழ் இருந்து மேலாகவும், மேல் இருந்து கீழாகவும் தமிழ்க்கட்சிகளையே, அரச பாசிசம் கருணா என்ற நாய் மூலம் இன்று அழித்தொழிக்கின்றது. இங்கு தான் தேர்தல், ஆனால் சுதந்திரமாக யாரும் பிரச்சாரம் செய்யமுடியாது. இப்படி பாசிசம் பல முகமெடுத்தாடுகின்றது. இந்த வகையில்தான், பாசிசம் மருத்துவர்கள் மூலம் தமக்காக உளற வைத்துள்ளது.

 

எப்படிப்பட்ட ஒரு பாசிசம் இலங்கையில் தலைவிரித்தாடுகின்றது என்பதற்கு, இவை சிறந்த உதாரணங்கள். மகிந்தா குடும்பமே குற்றவாளிக் கும்பலாக, இன்று மாறி நிற்கின்றது. மகிந்த சிந்தனை என்பது, வடிகட்டிய பாசிசம் தான்.

 

இன்று மருத்துவர்களைக் கொண்டு தாம் இனப்படுகொலையை செய்யவில்லை என்று அறிக்கைவிடுகின்றது, கொலைகார அரச கும்பல், போர்க்குற்றம் செய்யவில்லை என்றால் ஒரு பகிரங்கமான சர்வதேச விசாரணைக்கு முன்வரவேண்டிது தானே. ஆனால் குற்றவாளிகள் அதை மறுக்கின்றனர். குற்றவாளிகள் தங்கள் மேலான விசாரணையைத் தடுக்க, ஜ.நா வரை இலஞ்சம் கொடுக்கி;றது. அதாவது இதை தடுத்து நிறுத்தும் நாட்டுக்கு, தங்கள் நாட்டையே இன்று தாரைவார்க்கின்றனர்.

 

இப்படிப்பட்ட குற்றவாளிக் கும்பல் தான், இன்று இலங்கையில் குதியாட்டம் போடுகின்றனர். தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, மருத்துவர்களையே சிறையில் அடைத்து வைத்துள்ளது. தனக்கு ஏற்ப பொய்ப் பேட்டியை தயாரித்து அதை சொல்ல வைக்கின்றது. மருத்துவர்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்க மறுக்கின்றது. அவர்கள் பெயரால், அவர்கள் மூலம் பாசிசம் தான் குற்றமற்றவன் என்று சொல்ல வைக்கின்றது. இப்படி அரச குற்றக் கும்பல்கள் தன் குற்றத்தை மறைக்க, எத்தனை சித்துவிளையாடுகள்;. இதற்காக விதவிதமான கொடுமைகளை புதிதுபுதிதாக, தங்கள் கோமாளித்தனத்துடன் செய்கின்றனர்.

 

அரச பாசிசம் தான் நடத்திய இனப்படுகொலையையும், போர் குற்றங்களையும் எதனாலும் மூடிமறைக்க முடியாது. குறிப்பாக இறுதி யுத்தத்துக்கு முந்தைய ஒரு வாரத்துக்கு முன்பாக, செஞ்சிலுவைச் சங்கம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காயமடைந்த மக்களை தங்கள் கப்பல் மூலம் ஏற்றியிறக்கியிருந்தது. இப்படி உண்மைகள் வெளிப்படையாக பளிச்சென்று உள்ளது.

 

அரச பாசிசம் மருத்துவர்கள் மூலம் என்ன கூறுகின்றது எனில் ஏப்பிரல் 15 முதல் மே 15 வரையான காலத்தில், 750 மக்களே காயமடைந்ததாக கூறுகின்றது. 350 மக்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றது. அதுவும் புலிகளின் தாக்குதலால் தான், இவர்களுக்கு இது நடந்தாக வேறு கூறுகின்றது. அரச பாசிசமோ, கோமாளித்தனத்துடன் இந்தப் பேட்டியை மருத்துவர்கள் மூலம் நடத்த முனைகின்றது.

 

இந்த தகவலை எதிர்மறையில் வைத்து பார்த்தால், புலிகள் இக்காலத்தில் செய்தது அண்ணளவாக இவ்வளவும் தான் என்று எடுக்காலம்;. 20000 முதல் 30000 மக்கள் கொல்லப்படவும் அதேயளவு மக்கள் காயமடையவும் அரச பாசிசமே காரணமாக இருந்தையே, இந்த மருத்துவர்கள் சொல்லாமல் சொன்னதாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். இனவழிப்பு குற்றத்தை நடத்தியவர்கள், இன்று அதை மூடிமறைக்க நடத்துகின்ற பாசிசக் கூத்துதான் மருத்துவர்களின் பேட்டியாக வருகின்றது.

 

இப்படி குற்றவாளிக் கும்பல்கள் நாட்டின் அதிகாரத்தில் அமர்ந்து இருந்தபடி, அனைத்தையும் தம் பாசிசத்துக்கு ஏற்ப தலைகீழாக மாற்றி எழுத முனைகின்றனர். கடைந்தெடுத்த மக்கள் விரோதிகளை முன்னிறுத்துவதன் மூலம், மக்களை ஒடுக்கி அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்க முனைகின்றனர்.

 

நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலை வெல்ல, பாசிசம் இனி பல கோரமான முகங்களை எடுக்கும்;. பல வேஷம் போடும். இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றாகவே இந்த பாசிசத்தை எதிர்கொண்டு, அதை போராடி முறியடிக்கவேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.

 

பி.இரயாகரன்
09.07.2009