Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_02.jpg

குஜராத் முசுலீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பய்க் குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலை விட, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிஸ்டுகள் வக்கிரமான கிரிமினல் பேர்வழிகள்; பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணியும் பயங்கரவாதிகள் என்பதையும்; மோடி அரசிற்கும், இப்படுகொலைகளுக்கும் நேரடித் தொடர்புண்டு என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இன்னொருபுறம்,

 இப்பயங்கரவாதிகளை எதிர்த்து மன உறுதியுடனும், துணிச்சலோடும் ஆறாண்டுகளாகப் போராடி வரும் பில்கிஸ் பானு என்ற வீராங்கனையையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

 

பில்கிஸ் பானு, குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்திலுள்ள ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது கணவர் யாகூப் ரசூல், மூன்றரை வயது பெண் குழந்தை சலேஹாவுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது பிறந்த வீட்டிற்கு பில்கிஸ் பானு வந்திருந்தபொழுதுதான், குஜராத்தில் இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் வெடித்தது.

 

ரந்திக்புர் கிராமத்தில் வசித்து வந்த முசுலீம்களின் 71 வீடுகளும்; அவர்களுக்குச் சொந்தமான 14 மளிகைக் கடைகளும்; வேறு சில பெட்டிக் கடைகளும் இந்து மதவெறிக் கும்பலால் முற்றிலுமாகத் தீக்கிரையாக்கப்பட்டன; அனைத்து முசுலீம் குடும்பங்களும் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள, கிராமத்தைவிட்டு வெளியேறின.

 

பில்கிஸ் பானுவும், தனது கணவர், குழந்தை, தாயார், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளிட்டு தனது உறவினர்கள் 16 பேரோடு ரந்திக்புரிலிருந்து வெளியேறி, பரியா என்ற ஊரை நோக்கித் தப்பிச் செல்லத் தொடங்கினார். இந்து மதவெறியர்களின் கண்களில் அகப்பட்டுக் கொண்டு விடாமல் பில்கிஸ் பானுவின் குடும்பம் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்த நேரத்திலே, அவரின் அத்தை மகளுக்கு குஜாவல் மசூதியில் பெண் குழந்தையும் பிறந்தது. இதற்கு மறுநாள் குத்ரா என்ற ஊருக்கு அவர்கள் வந்தபொழுது, அவ்வூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

 

அங்கு இரண்டு நாட்கள் பாதுகாப்பாக இருந்துவிட்டு, மூன்றாவது நாள் ஒவ்வொருவரும் பழங்குடியினர் போல வேடமணிந்து கொண்டு, குத்ராவில் இருந்து வெளியேறி, சாபர்வாட் என்ற கிராமத்திற்கு வந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் பதுங்கியிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த இந்து மதவெறிக் கும்பலிடம் பில்கிஸ் பானு குடும்பம் மாட்டிக் கொண்டது. அக்கும்பலில் இருந்த ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த இந்து வெறியர்கள் பில்கிஸ் பானுவை அடையாளம் கண்டு கொண்டு, தங்களின் வக்கிரமான தாக்குதலை நடத்தினர்.

 

ஷைலேஷ் பட் என்ற இந்து மதவெறியன் பில்கிஸ் பானுவின் குழந்தை சலேஹாவை அவரிடமிருந்து பிடுங்கி, அவரின் கண் எதிரிலேயே அக்குழந்தையை தரையில் அடித்துக் கொன்றான். பிறகு அவனும், அக்கும்பலைச் சேர்ந்த லாலா டாக்டர், லாலோ வக்கீல், கோவிந்த் நானா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, பில்கிஸ் பானுவைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தினர். கர்ப்பமாக இருக்கும் தன்னைவிட்டு விடும்படி பில்கிஸ்பானு கெஞ்சியதை, கதறியதை அக்கும்பல் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. தங்களின் காமவெறியைத் தீர்த்துக் கொண்ட பிறகு, அக்கும்பல் பில்கிஸ் பானுவைத் தீர்த்துக் கட்டும் வெறியோடு தாக்கியதில், அவர் சுயநினைவு இழந்து விழுந்தார்.

 

பில்கிஸ் பானு மட்டுமின்றி அவரின் தாயார், சகோதரிகள் உள்ளிட்டு எட்டுப் பெண்கள் அக்கும்பலால் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் கத்தியாலும், ஈட்டியாலும், குண்டாந்தடிகளாலும் தாக்கப்பட்டனர்.

 

இரண்டு மூன்று மணி நேரம் கழித்து பில்கிஸ் பானுவிற்கு நினைவு திரும்பிய பொழுது, தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், நான்கு சிறுவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்; மீதிப்பேர் இருந்த சுவடே தெரியவில்லை. பில்கிஸ் பானு, அந்தப் பலவீனமான நிலையிலும் நடந்து சென்று, வழியில் தென்பட்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணிடம் இரவலாக ஆடை வாங்கி அணிந்து கொண்டு, லிம்கேடா போலீசு நிலையத்திற்குச் சென்று இத்தாக்குதல் பற்றி புகார் கொடுத்தார். அப்பொழுதுதான், இந்து மதவெறிக் கலவரத்தின் சூத்திரதாரியாக மோடி அரசு இருப்பதை பில்கிஸ் பானு புரிந்து கொண்டார்.

 

அப்போலீசு நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த சோமபாய் கோரி, பில்கிஸ் பானு வாக்குமூலம் அளித்தபடி நடந்த சம்பவத்தைப் புகாராகப் பதிவு செய்யாமல், குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்தோடு, ஒரு பொய்யான புகாரைப் பதிவு செய்தான். பில்கிஸ் பானுவைப் பரிசோதித்த மருத்துவர்களும், சம்பவம் நடந்த தேதி/நேரம், காயங்கள் பற்றிய குறிப்புகள் இன்றி, மொன்னையான அறிக்கையைத் தயார் செய்தனர். ""குற்றவாளிகளை அடையாளம் காட்ட முயற்சி செய்தால், விஷ ஊசி போட்டுக் கொலை செய்து விடுவோம்'' என போலீசாரால் பில்கிஸ் பானு மிரட்டப்பட்டார்.

 

இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக நடத்தப்பட்ட கோத்ரா முகாமில், பஞ்ச்மஹால் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியைச் சந்தித்த பில்கிஸ் பானு, தனது குடும்பப் பெண்கள் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; தனது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும், தனது பெண் குழந்தையும் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; குற்றவாளிகளை அடையாளம் காட்டக் கூடாது என போலீசாரால் தான் மிரட்டப்பட்டதையும் கூறினார். இந்து மதவெறியர்கள் நடத்திய தாக்குதலில் தப்பிப் பிழைத்த பில்கிஸ் பானுவின் இரண்டு உறவினர்களும் சாட்சியம் அளித்தனர். இதனையடுத்து இச்சம்பவம் பற்றி மீண்டும் போலீசு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

 

எனினும், அவ்விசாரணை ஏனோதானோவென்றே நடத்தப்பட்டு, ஒப்புக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மிக விரைவாகவே பிணையில் விடப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய சாட்சியான பில்கிஸ் பானு பல வழிகளில் மிரட்டப்பட்டதால், அவர் தலைமறைவாகப் போக நேர்ந்தது. குஜராத் படுகொலை தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சாட்சியம் இல்லை என்று கூறி மோடி அரசு கைகழுவியபோது, கும்பலோடு கோவிந்தாவாக பில்கிஸ் பானு வழக்கையும் கைவிட்டது.

 

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார், பில்கிஸ் பானு. உச்சநீதி மன்றம், இவ்வழக்கை மீண்டும் புலன் விசாரணை செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. நடத்திய புலன் விசாரணையின் அடிப்படையில் அகமதாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. ""சாட்சிகள் தொடர்ந்து மிரட்டப்படுவதால், இவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது; எனவே, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்'' எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தார், பில்கிஸ் பானு. இதனையடுத்து, இவ்வழக்கு மும்பய்க்கு மாற்றப்பட்டது.

 

மும்பய் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், 20 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுள் இரண்டு மருத்துவர்கள், ஐந்து போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏழுபேர் நிரபராதிகளாகத் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே குற்றவாளி ஒருவர் இறந்து போனதால், மீதி 12 பேரில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும்; பில்கிஸ் பானு அளித்த புகாரைப் பதிவு செய்ய மறுத்த போலீசு கான்ஸ்டபிள் சோமபாய் கோரிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

···

பில்கிஸ் பானுவின் விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாகத்தான் இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறதேயொழிய, நீதிமன்ற முனைப்பின் காரணமாக இந்தச் சிறிய வெற்றிக் கிடைக்கவில்லை. இந்து மதவெறிக் கும்பல் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை, தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்துவிட்டது. பில்கிஸ் பானுவின் மகள் சஹேலாவின் சடலம் எங்கோ மாயமாய் மறைந்து போனது. இதனைக் காட்டி, இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என இந்து மதவெறிக் கும்பல் வாதாடியது.

 

பில்கிஸ் பானுவின் உறவினர்களின் சடலங்களை இரண்டாம் முறை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக சி.பி.ஐ., தோண்டியெடுத்த பொழுது, அச்சடலங்கள் தலையற்ற முண்டங்களாக இருந்தன. சடலங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவ்வுடல்களில் இருந்து தலைகள் ""மர்மமான'' முறையில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சடலங்கள் விரைவாக அழுகிப் போய்த் தடயங்கள் மறைந்து போய்விடவேண்டும் என்பதற்காகவே, சடலங்களின் உடம்பு முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.

 

தாக்குதல் தொடர்பான முக்கியமான சாட்சியங்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பில்கிஸ் பானு மற்றும் அச்சம்பவத்தில் தனது தாயைப் பறி கொடுத்த மற்றொரு சிறுவனின் வாக்குமூலங்கள்தான், இவ்வழக்கிற்கே உயிர்நாடியாக இருந்தன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஷஹீரா ஷேக்கை மிரட்டிப் பணிய வைத்ததைப் போல, பில்கிஸ் பானுவையும் மிரட்டிப் பணிய வைக்க முயன்றது, இந்து மதவெறிக் கும்பல். இதற்கெல்லாம் அஞ்சி விடாத பில்கிஸ் பானு, கடந்த ஆறாண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, வழக்கையும் நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

 

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தர மறுத்துவிட்ட நீதிமன்றம், அதனை நியாயப்படுத்த, ""அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்க முடியும்; இக்குற்றவாளிகளுள் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்தார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை'' என்று கூறியிருக்கிறது.

 

குஜராத்தில் இந்து மதவெறி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில், ஏறத்தாழ 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம்கள், வக்கிரமான முறையில்தான் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமான பிறகும், நீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கை ஏதோ தனித்ததொரு சம்பவமாகப் பிரித்துப் பார்த்திருப்பதே நாணயக் கேடானது. மேலும், இந்து மதவெறியர்கள் ஒவ்வொரு கலவரத்திலும், ""கும்பலாகச் சென்று முசுலீம்களைத் தாக்குவது; முசுலீம் பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்துவது'' என்பதை ஒரு உத்தியாகவே செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ""இந்து மதவெறிக் கும்பல் எப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களின் உயிரை நீதிமன்றம் பறித்து விடாது'' என்று உத்தரவாதமளிப்பதாகவே, இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

 

குண்டு வைக்கும் முசுலீம் பயங்கரவாதிகளுக்கு சர்வ சாதாரணமாகத் தூக்கு தண்டனை அளிக்கும் இந்திய நீதித்துறை, கும்பல் வன்முறையில் ஈடுபடும் இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கும்போதோ, ""நிதானமாக'' நடந்து கொள்கிறது. இந்திய நீதிமன்றங்களிடம் காணப்படும் இந்தக் காவிப் பாசத்தை நிரூபிப்பதற்கு ஏராளமான தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.

 

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மருத்துவர்களும், ஐந்து போலீசு அதிகாரிகளும், ""தங்களின் கடமையை முறையாகச் செய்யாமல், நடந்த குற்றத்தை மூடி மறைத்து, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார்கள்'' என நீதிமன்றமே ஒத்துக் கொண்ட பிறகும், ""அவர்களுக்கு இச்சதிச் செயலில் பங்கில்லை'' என்ற காரணத்தைக் ""கண்டுபிடித்து'' அவர்களை விடுதலை செய்திருக்கிறது. காவிமயமாகி வரும் இந்திய அதிகார வர்க்கத்திற்கு, இதைவிட இனிப்பான தீர்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது.


இவர்களின் விடுதலையை எதிர்த்து மோடி அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார் பில்கிஸ் பானு. இந்தக் கோரிக்கை மோடிக்கு மட்டுமல்ல, ""மோடியை இந்து மதவெறியன் அல்ல'' எனச் சப்பைக் கட்டு கட்டும் ""சோ'' போன்ற நயவஞ்சகப் பேர்வழிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்.


···


தீர்ப்பு வெளிவந்த பிறகும், தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாகக் கூறியிருக்கும் பில்கிஸ் பானு, ""இத்தீர்ப்பு முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என நான் கருதவில்லை'' எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். தீர்ப்பு வெளிவந்த நாளன்று, ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த 60 முசுலீம் குடும்பங்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, கிராமத்தைவிட்டு வெளியேறி விட்டனர்.


இந்து மதவெறியர்களைத் தெருவில் எதிர்த்து நின்று போராடக் கூடிய வலிமை கொண்ட ஜனநாயக இயக்கங்கள் இல்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்புகளால் முசுலீம்களைப் பாதுகாத்து விட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதையே இவ்வெளியேற்றம் எடுத்துக் காட்டுகிறது. உண்மை இப்படியிருக்க, முதலாளித்துவப் பத்திரிகைகளோ, இத்தீர்ப்பைக் காட்டி, ""சட்டத்தின் மூலமே இந்து மதவெறியர்களைத் தண்டித்து விட முடியும்'' என்ற மாயையைப் பரப்பி வருகின்றனர்.


குஜராத் படுகொலை தொடர்பான 1,600 வழக்குகள் கடந்த ஆறாண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ளன. பில்கிஸ் பானுவைப் போல, எத்தனை சாட்சிகளால், தலைமறைவாக வாழ்ந்து கொண்டு, இந்து மதவெறியர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட முடியும்?


இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப்படுகொலையை விசாரிக்க நூரம்பர்க் நீதிமன்றம் அமைக்கப்பட்டதைப் போல, குஜராத் படுகொலையை விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்; இப்படுகொலையை நடத்திய சங் பரிவார அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் மட்டும்தான், பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.


ஆனால், இந்தியக் "குடியரசோ' இதனைச் செய்ய மறுத்து வருகிறது. எனவே, பில்கிஸ் பானு போராடி பெற்ற இத்தீர்ப்பை, மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாக இந்திய ஆளும் கும்பல் கொண்டாடத் துடிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது.


· அழகு

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது