Language Selection

மனித உணர்வுகள் பண்டமாக (பொருளாக) - நுகர்வாக குறுக்கப்பட்ட முதலாளித்துவ சட்டகத்துக்குள் சமூக அமைப்பு இயங்குகின்றது. இங்கிருந்தே சிந்தனைகளும் - தர்க்கவியல்களும் கட்டமைக்கப்படுவதுடன், இதற்குள்ளான அகமுரண்பாடுகளை முன்னிறுத்தி "சுயசிந்தனை, பகுத்தறிவு, முற்போக்கு…" என்று தமக்குள் கோடு பிரிக்கின்றனர்.

இந்த முதலாளித்துவ அகமுரண்பாட்டை முன்னிறுத்தி இயங்கும் தனியுடைமையிலான தன்முனைப்புவாதமானது, உயிரியலிலான சமூகத்தன்மையை மறுதளிக்கின்றது. தன்னை, தன் வர்க்கத்தை  மய்யப்படுத்தி சமூகத்தை மறுதளிக்கும் சிந்தனைமுறையிலான பாலியல் கோட்பாடு என்பது, சுரண்டல் தான்.

பொதுமக்கள் பாலியலை உணர்வுபூர்வமாக சுரண்டுவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத கலை - இலக்கிய - அரசியல்வாதிகள், திட்டமிட்டே பாலியலை உணர்வுபூர்வமாகச் சுரண்டுகின்றனர். பெரும் முதலாளிகள் எப்படி திட்டமிட்டு மக்களைச் சுரண்டுகின்றனரோ, அப்படித்தான் ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத கலை - இலக்கிய - அரசியல்வாதிகள் பாலியலைச் சுரண்டுகின்றனர்.  

இந்த வகையில் தனியுடமைவாதத்தை அரசியலாகவும் - அறிவுக் கோட்பாடாகவும் கொண்ட ராகவன், திட்டமிட்ட பாலியல் சுரண்டலை நியாயப்படுத்த "பாலியல் சுரண்டல் - ஒரு பார்வை" என்ற தலைப்பில் களமிறங்கியுள்ளார்.

தனியுடமைவாதத்தை முன்னிறுத்தும் ராகவனின் கலை - இலக்கிய அரசியல் கூட்டாளிகள், பாலியல் வேட்டையில் ஈடுபட்டு அம்பலமாகத் தொடங்கியவுடன், பதறியடித்துக் கொண்டு தனது வர்க்க தர்க்கவியலுடன் பூசி மெழுகி நியாயப்படுத்த முனைகின்றார்;. சுரண்டல் அடிப்படையிலான முதலாளித்துவ தனிமனித தேர்வுச் சுதந்திரதை முன்னிறுத்தி - சுற்றி வளைத்து பாலியல் பொறுக்கிகளின் நடத்தைகளை தனிமனித உரிமையாக போதிக்க முற்படுகின்றார். 

இவர்களின் தனியுடமைவாத சிந்தனைமுறையில் மனித அறமென்பது கிடையாது. தனியுடமைவாதமல்லாத சமூகச் சிந்தனையிலேயே, மனிதஅறம் இருக்க முடியும். இதுவே இயற்கையும் கூட. பாலியலில் அறமென்பது சமூகச் சிந்தனையிலேயே சாத்தியமென்பதும், தனியுடமைச் சிந்தனையில் சாத்தியமில்லை என்பதும் எதார்த்தமானது.   

வர்க்க சமூகமாக முதலாளித்துவ அமைப்பு இருப்பதையும், அதில் இருந்து பாலியல் முரண்பாடுகள் ஏற்படுவதை மறுப்பதே ராகவனின் தனியுடமைவாத தர்க்கவியலாகும். வர்க்க சமூகத்தை முன்னிறுத்தி சிந்திக்க முனையாத கோட்பாட்டு முறையில், பாலியல் குறித்தும் - பாலியல் உறவு குறித்துமான சிந்தனை என்பது, தனிமனிதனின் சுயநலத்துக்குட்பட்டது. இது அடிப்படையிலேயே சுரண்டல் கோட்பாடே.

இந்த வகையில் முதலாளித்துவ தனியுடமைவாதக் கண்ணோட்டம் கொண்ட பாலியல் கண்ணோட்டமானது, சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. இங்கு முதலாளித்துவமானது பாலியல் சுரண்டலை இணங்க வைக்கும் ஆணாதிக்க ஜனநாயக முறையை அடிப்படையாகக் கொண்டு அணுகுவதையே, பெண்ணியம் என்கின்றது. இதைத்தான் ராகவன் பூசிமெழுகி கூறுவதுடன், பாலியல் பொறுக்கிகளை மறைமுகமாகவும் - நேரடியாகவும் பாதுகாக்க முனைகின்றார்.  

இணங்கிப் போகும் இந்தப் பாலியல் கண்ணோட்டமானது, முதலாளி - தொழிலாளிக்கு இடையில் இணங்கிப் போகும் சுரண்டல் ஒப்பந்தம் போன்றது. பாலியல் உறவை இணங்கிய ஜனநாயக ஒப்பந்தமாக ஆணின் ஜனநாயக உரிமையாக முன்னிறுத்தி, இவை பாலியல் சுரண்டலை இல்லை என மறுதளிப்பதே ராகவன் வகையறாக்களின் பாலியல் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்தமாகும். இது இணங்கிய முதலாளித்துவ உற்பத்தியில் நடக்கும் சுரண்டலை மறுதளிக்கின்றது. ஆனால் அமைதியாக இந்த  சுரண்டல் கடந்து விடுவதில்லை. அதாவது பெண்களின் எதிர்வினை போல். ராகவன் கூறுவது போல் "பொறாமையின்" முரண்பாடுமல்ல - விளைவுமல்ல.  

முதலாளித்துவமானது ஒருவரது அனுமதியின்றி ஒருவருடன் உறவு கொள்வதை வன்முறையென்றும், அனுமதியுடன் உறவு கொள்வது சுரண்டல் அல்ல என்கின்றது. இதைத்தான் உற்பத்தியிலும் முன்வைக்கின்றது.  

தனியுடமையை சிந்தனைமுறையாகக் கொண்ட ராகவனால் அங்குமிங்குமாக, தனியுடமைவாதக் கோட்பாட்டின் அக முரண்பாட்டில் இருந்து மறுதரப்புக்கு தர்க்கம் மூலம் வித்தை காட்ட முற்படுகின்றார். ஒரு தரப்பில் இருந்து கொண்டு புலம்பும் ராகவன், சுயவிருப்பும் தேர்வாக இருந்தாலும், அதில் ஆதிக்கமும் அந்தஸ்தும் இல்லையென்றால், அது சுரண்டல் அல்ல என்கின்றார். 

தனியுடமைவாத ஆணாதிக்க சமூகத்தின் பாலியல் பிரச்சனைகளை அணுகுகின்ற போது,  அணுகுகின்றவர்களின் வர்க்கர் பார்வை மிக முக்கியமானது. சுரண்டும் வர்க்க தனியுடமைப் பார்வையானது இயற்கையாக ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலே இருக்கும். சுரண்டுவதற்கு எதிரான சமூகப் பார்வையே, பெண்ணியல் கண்ணோட்டத்தில் இருக்கும். இந்த வேறுபாடு, இருவேறு பார்வையைக் கொண்டு இருப்பதுடன், இவை ஒன்றுக்கு ஒன்று முரணானது. 

கலை - இலக்கியம் - அரசியலில் ஈடுபடுகின்ற மனிதர்கள்; தங்கள் வர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்தே, பாலியல் நடத்தையையும் - சிந்தனைமுறையையும் உருவாக்குகின்றனர். 

முதலாளித்துவ தனியுடமைவாத சமூகத்தில் ஆணாதிக்கப் பொதுப் பண்பில் இருந்தே தங்கள் பாலியல் சுரண்டலை தகவமைத்துக் கொள்வதும் - பாலியல் நடத்தையை தர்க்கரீதியாக நியாயப்படுத்த முனைவதும் நடக்கின்றது. இது ஆணாதிக்கமாகும். 

முதலாளித்துவ சுரண்டல் முறையென்பது, பெரும்பாலும் வன்முறை மூலம் நிகழ்வதில்லை. இணங்கவைக்கும் ஒப்பந்தம் மூலம் சுரண்டப்படுவது நடந்தேறுகின்றது. வன்முறை மூலம் நிகழும் சுரண்டலுக்கும், இணங்கவைக்கும் சுரண்டலுக்கும் அதிக வேறுபாடில்லை. வர்க்க முரண்பாடு கூர்மையடையும் போது வன்முறையும், வர்க்க முரண்பாடு குறையும் போது இணங்கிய சுரண்டலும் நடக்கின்றது. 

இதுதான் முதலாளித்துவப் பாலியல் விவகாரத்தில் நடக்கின்றது. முதலாளித்துவ பாலியல் என்பது இணங்க வைக்கும் ஜனநாயகத்தை கொண்டு நடக்கின்ற அதேநேரம், இணங்காத போது வன்முறையாகவும் நடந்தேறுகின்றது. முதலாளித்துவ தனியுடமைவாத  கலை - இலக்கிய - அரசியல்வாதிகள், இதிலிருந்து வேறுபட்டுச் சிந்திப்பதில்லை.  

தனியுடமைவாத கலை - இலக்கிய - அரசியல் கோட்பாட்டாளர்களின் பாலியல் குறித்த கண்ணோட்டமானது, பாலியல் என்பது நுகர்வுக்குரிய பண்டப்பொருள். பாலியலை சமூக உணர்வுள்ள இயற்கையான சமூக உயிரியல் கூறாகப் பார்ப்பதில்லை.  

தனியுடமைக்கு எதிரான சமூகக் கண்ணோட்டம், பாலியலை சமூக உறவாக - சமூகச் செயற்பாடாக கருதுகின்றது. இருவர் சேர்ந்து வாழ்வது முதல் குழந்தை பெற்று சமூகமாக வாழ்வது வரையான சமூக செயற்பாடு. வெறும் பாலியல் செயற்பாடல்ல. முதலாளித்துவ வரையறைக்கு உட்பட்ட, சுரண்டல் உறவாக கருதுவதில்லை. இதனால் பாலியலை நுகர்வாக - சுரண்டலாக அணுகுவதை இயற்கையாக எதிர்க்கின்றது. 

ராகவன் குத்தி முனங்கி பாதுகாக்க முற்பட்ட முதலாளித்துவ இலக்கியவாதிகளின் பாலியல் உறவு - நடத்தை எப்படிப்பட்டது? பாலியலை சமூக உறவாக - சமூக செயற்பாடாக அணுகியதில்லை. வெறும் பாலியல் நுகர்வாக அணுகினர். தமது நடத்தைக்கு உதவும் முதலாளித்துவ லும்பன் கோட்பாடுகளுடன், விதவிதமாக நுகரும் பாலியல் வக்கிரத்துடன் - தங்கள் பாலியல் உறுப்புகளுடன் அலைபவர்கள். அதற்காக பாலியல் வேட்டையில் களமிறங்குகின்றவர்கள். இவர்கள்  ஒரே நேரத்தில் - ஒன்று மாறி ஒன்றாக பாலியல் நடத்தைகளில் ஈடுபவது என்பது, உலகறிந்த உண்மையாகியிருக்கின்றது. 

பாலியலைத் தொழிலாகக் கொண்டவர்களிடம் பணத்தைக் கொண்டு எப்படி அணுகுகின்றனரோ, அதேபோன்று இங்கு இவர்களின் பாலியல் நடத்தை அமைகின்றது. பாலியல் வியாபாரப் பண்டமாகி இருக்கும் நிலையில் பணம் அல்லது தனியுடமைவாத தர்க்கத்தால் .. இணங்க வைத்தல் மூலம் நிகழ்கின்றது. பாலியல் நடத்தையுடன் கூடிய சமூக நடவடிக்கை தொடர்வதில்லை. குறிப்பாக சமூக நடவடிக்கையைத் தவிர்க்க கற்பத்தடை பொருட்களுடன், அலைகின்ற பாலியல் பொறுக்கிகளாக இருக்கின்றனர்.        

இவர்களைக் காப்பாற்ற ராகவன் களமிறங்கி நிற்பதுடன், இதை எதிரக்;கின்ற ஆண்களின் நடத்தையை "எரிச்சல்", "பொறாமையால்" ஏற்படும் நடவடிக்கை என்கின்றார்;. இந்தத் தர்க்கமானது இயல்பில் எதிர்க்கின்ற பெண்கள், தமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற பொறாமையில் பொருமுகின்றனர் என்று மறைமுகமாக கூற முற்படுகின்றார். பாதிக்கப்பட்ட பெண்கள் உடைமைக் கண்ணோட்டத்தில் இருந்து இதை அணுகுவதாகக் கூறி, உடைமைவாதத்துக்கு எதிரான பாசாங்குத் தனத்தைக் கொண்டு பம்மி அவதூறு பொழிகின்றார். தொடர்ந்தும் பாலியலில் ஈடுபட்ட ஆண் தனக்கு கிடைக்காத பொறாமையே, பெண்களின் எதிர்ப்பு என்று கூறி - ஆணின்   தனியுடமைவாத தனிமனித ஆணாதிக்க பாலியல் சுதந்திரத்தை முன்னிறுத்தி நிற்கின்றார்.   

முதலாளித்துவ ஆணாதிக்க உடைமைவாதத்தை தனது சித்தாந்தமாகக் கொண்ட ராகவன், பெண்ணின் சமூகக் கண்ணோட்டத்தை உடைமைவாதமாக திரித்து புனைந்து தர்க்கத்தை முன்வைக்க முடிகின்றது.

ஆணுக்கில்லாத பெண்ணின் சிறப்பு, பெண் இயற்கையிலேயே சமூக உயிரி என்பதுதான். உயிரியல் உற்பத்தி சார்ந்து இயற்கையாகவே சமூகத்தன்மை கொண்ட பெண், பாலியல் மூலம் சுரண்டப்படுவதை இயற்கையாக மறுதளிக்கிறது. அதாவது முதலாளித்துவ சுரண்டல் அடிப்படையிலான பாலியல் சுரண்டலை இனங்கண்டு கொள்வதுடன், எதிரான உளவியலாக வெளிப்படுகின்றது. பெண்ணின் பாலியல் தன்மை என்பது, சமூகமாக இணைந்து வாழும் சமூகப் பண்புக்கானது. ஆணினது பாலியல் அப்படியல்ல. சமூகத்தன்மைக்கு இணங்காத ஆணின் பாலியல் நடத்தையை, சுரண்டலாக பெண் உணர்வதுடன் - அது சுரண்டலுக்கு எதிரான பெண்ணின் எதிர்வினையாகின்றது.

சமூகத்தன்மையற்ற ஆண் இதற்கு மாறாக பெண்ணை நுகரவும், அக்கணத்துடன் பெண்ணை  கைவிடவும் - கழட்டிவிடவும் முனைகின்றது. ஆண் பெண்ணுடன் இணைந்து வாழ்தல் மட்டும், சமூக உயிரியாக சமூகத்தன்மை கொண்டு வாழமுடியும். இதற்கு வெளியில் பாலியல் என்பது சுரண்டுவதற்கே, இதற்கு பெண் தேவை. இணங்க வைக்கும் பெண்ணை சமூகத் தன்மையற்ற தனியுடமைவாத நிலைக்கு தாழ்த்திச் சுரண்டுவதே, முதலாளித்துவம் முன்வைக்கும் அறம். அதாவது இணங்கவைத்தல்;.       

இப்படிப் பெண்ணை இணங்கவைக்கும் ஆணாதிக்க பாலியல் வக்கிரத்துக்குள் பெண் சிக்கிவிடும் போது, இயல்பான இயற்கை சார்ந்த பெண்ணின் சமூக உயிரியல் கூறு இயற்கையாக எதிர்வினையாற்றத் தொடங்குகின்றது. தன் மீதான பாலியல் சுரண்டல் நடந்ததையும், தான் ஏமாற்றப்பட்டதையும் உடனடியாகவோ - காலத்தாலோ இனங்காண வைக்கின்றது. 

இப்படி பாதிக்கப்பட்ட பெண்களைக் குறித்து, அவர்களை எப்படி ஆணாதிக்கம் அணுகவேண்டும் என்று ராகவன் கும்மி அடிக்கின்றார். "சுயசிந்தனை, பகுத்தறிவு மற்றும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களை வெறும் செயலற்றவர்களாகக் கருதி பாதிக்கப்பட்டவர்கள் என்ற பச்சாத்தாப அணுகுமுறை பிரச்சனைக்குரியது" என்று, இங்கு பச்சாத்தாபத்துக்குரியதாக கூறி கொச்சைப்படுத்துகின்ற ஆணாதிக்க நியாயப்படுத்தலைக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களை குற்றவாளிகளாக முன்னிறுத்துகிறார்.  

"சுயசிந்தனை, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு.." என்ற அளவுகோல், தனது தனியுடமைவாத அடிப்படையில் முன்னிறுத்திக் காட்டும் வித்தை மற்றும் அளவுகோலாகும்;. இந்த அளவுகோலானது, முதலாளித்துவ அகமுரண்பாடால் சமூகத்தை முன்னிறுத்திச் சுரண்டும் சுரண்டல் கோட்பாகும். பாலியலில் இது சுரண்டும் கோட்பாடாகும். தனியுடமையிலான "சுயசிந்தனை, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு.." என்பது ஆணாதிக்கம் மட்டுமின்றி, பெண்ணியம் கடந்து பெண்ணை இணங்க வைத்து சுரண்டுவதற்குரிய பண்புரீதியான அளவு கோலாகும்.

இணைந்து வாழும் சமூக உணர்வற்ற பாலியல் நடவடிக்கையென்பது வெறும் நுகர்வு மட்டுமின்றி - பாலியல் சுரண்டலுமாகும்.   

01.05.2024