Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர்.  சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர்.  காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள்.  பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள்.  அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா?

செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்து செய்வதறியாது பதைத்து நிற்கிறோம் என்று கூறவைத்து, கலவரத்தின் பாதிப்பாக காட்சிப்படுத்துகிறார்கள்.

 

 

 

 

ஆனால், அங்கு நடந்திருப்பது திட்டமிடப்பட்ட போலிமோதல் (என்கவுண்டர்) கொலைகள்.  வழக்கமான போலிமோதல்களில் குறிப்பிட்ட ஒருவரோ, பலரோ கொல்லப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பார்கள். பரமக்குடியில் குறிப்பாக யார் என்பது முடிவு செய்யப்படவில்லை, அவ்வளவு தான் வித்தியாசம்.

 

கடந்த சில ஆண்டுகளாகவே இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்ட நாள் இம்மானுவேல் சேகரன் குருபூஜையாக தாழ்த்தப்பட்ட மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இதுபோன்ற குருபூஜைகள் சாதிவெறிக்கு எதிரான போராட்ட குணத்தை கூர்தீட்டும் என்றோ,  ஆதிக்க சாதியினரை கேள்விக்கு உள்ளக்கும் என்றோ கூறிவிட முடியாது.  ஒருவகையில் பார்ப்பனிய பண்பாட்டு விழுமியங்களுடன் நடக்கும் இதுபோன்ற குருபூஜைகள் அவர்களை இன்னும் சாதிய அமைப்புகளுக்குள் கண்டுண்டு கிடக்கச் செய்யவே உதவும். என்றாலும்,  முத்துராமலிங்கத்தின் குருபூஜை அரசு மதிப்புடன், குறிப்பிட்ட நாட்களுக்கு விடுமுறை அறிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் அரசே ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதிவெறிக்கு குறியடையாளமான முத்துராமலிங்கத்தின் குருபூஜையே அந்தப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களின் பதைப்பையும், பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் நடந்து கொண்டிருக்க; சாதிவெறி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி அந்த சாதி வெறியர்களாலேயே கொலையுண்டு போன இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அதே போல் ஏன் கொண்டாடக் கூடாது எனும் எதிர்ப்புணர்ச்சியின் காரணமாகவே இம்மானுவேல் சேகரன் குருபூஜை நடத்தப்படுகிறது.

 

ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றாலே அதற்கு தகுந்த பாதுகாப்பளிப்பது அரசின் வேலை.  சாதிவெறியின் அடையாளமான பசும்பொன் குருபூஜைக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் அரசு, குறிப்பாகச் சொன்னால், ஓட்டுப் பொறுக்க உதவும் என்பதால் படம்காட்ட வரும் அத்தனை ஓட்டுப் பொறுக்கி தலைவர்களையும் ஒரே நேரத்தில் வந்தால் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று தனித்தனியாக நேரம் ஒதுக்கிக் கொடுத்து படம் காட்டச் சொல்லும் அரசு, வழிநெடுக தாழ்த்தப்பட்டவர்கள் மீது தேவர் சாதிவெறியர்களின் சீண்டலை கண்டும் காணாமல் இருக்கும் அரசும் காவல் துறையும் ஜான் பாண்டியனை மட்டும் ஏன் கைது செய்து வரவிடாமல் தடுக்க வேண்டும்?

 

சட்டம் ஒழுங்கு பூச்சாண்டி காட்டி இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை தடுத்து நிறுத்த வேண்டும். அதை முத்தராமலிங்கத்தின் குருபூஜைக்கு இணையாக வளரவிடக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நோக்கமாக இருக்கிறது.  அதிமுக தேவர்சாதி ஆதரவுக் கட்சி என்பது அனைவரும் அறிந்தது தான். ஊழலுக்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு ஓபியை முதல்வராக்கியபோது, “நான் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தேவர் சமுதாயம் மீது நான் எவ்வளவு பற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு ஓபியை முதல்வராக்கியதே சான்று” என்று வெளிப்படையாக அறிவித்தார் ஜெயா.  ஓட்டுப் பொறுக்கி அரசியல் என்பதைத்தாண்டி சட்டமன்றத்திலேயே தன்னை ’பாப்பாத்தி’ என்று அறிவித்த ஜெயா, இயல்பாகவே ஆதிக்க சாதியின் மீது விருப்பும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வெறுப்பும் கொண்டவராகவே தன்னை எப்போதும் வெளிக்காட்டியிருக்கிறார். மட்டுமல்லாது, கடந்த தேர்தலில் தேவர்சாதியின் ஒரு பிரிவினர் திமுகவை ஆதரித்ததும், அவர்களை மீண்டும் அதிமுக வாக்குவங்கியாக தக்கவைத்துக் கொள்ளும் தேவையும் சேர்ந்துகொள்ள, கலவரபயத்தை விதைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி படிப்படியாக இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை இல்லாமல் செய்துவிட வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த போலிமோதல் திட்டமிடப்பட்டிருக்கிறது.

 

ஜான் பாண்டியனை இரண்டு நாள் ஏன் தடுத்து வைத்திருந்தீர்கள்? ஏன் எந்த நீதிமன்றத்திலும் நேர்நிருத்தவில்லை? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.  இப்போது, பரமக்குடி பகுதியில் ஒரு சிறுவன் சிலரால் கொல்லப்பட்டதற்கு ஆறுதல் தெரிவிக்க ஜான் பாண்டியன் அந்த வீட்டுக்குச் சென்றால் பதட்டம் ஏற்படும் கலவரம் வரும் என்று காரணம் கூறுகிறார்கள். இப்போது மட்டும் என்ன நடந்திருக்கிறது?  ஜான் பாண்டியனை கைது செய்தால் சாலை மறியல் உள்ளிட்ட பிரச்சனைகள் எழும் என்று காவல் துறைக்கு தெரியாதா?

ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பரமக்குடி பகுதியில் மூவாயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதற்காக சாலை மறியல் செய்ததோ இருநூறு பேர்.  இவர்களை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஒரு வாரமாக அங்கு காவல்துறை செய்தது என்ன? கூட்டம் கட்டுக்கு அடக்கவில்லை என்றால், எச்சரிக்கப்படும், தடியடி நடத்தப்படும்,  கண்ணீர்புகை குண்டுகள் வீசப்படும், ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படும், அதையும் மீறினால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பேரில் கால்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்போதும் கலையவில்லை என்றால் வேறுவழியில்லாமல் மரண நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும்.  இப்போது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலையவில்லை என்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்கிறார்கள்.  கொல்லப்பட்ட அனைவரும் மார்பிலும் தலையிலும் குண்டு தாக்கி இறந்திருக்கிறார்கள்.

 

ஒரு வாரத்திற்கு முன்பே ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலில் அமைதியாக சாலை மறியல் மட்டுமே நடந்திருக்கிறது. என்றால் அதை கலவரமாக மாற்றி துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது யார்? அப்போது காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது?  மாவட்ட ஆட்சியரிடம் துப்பாக்கிச் சூடு நடத்த முறைப்படி அனுமதி பெறப்படவில்லை என்பதும் தெரிகிறது. மேலே இருக்கும் படம் கற்களை குவித்து வைத்துக் கொண்டு காவல்துறையினர் வாய்ப்புக்கு காத்திருந்ததை தெளிவாகக் காட்டுகிறது.    என்றால் இது திட்டமிடப்பட்ட போலிமோதல் கொலைகள் தான் என்பதற்கு இதற்கு மேலும் சான்றுகள் வேண்டுமோ?

 

காஷ்மீரிலும், வடமேற்கு மாநிலங்களிலும் எப்படி மக்களைக் கொல்கிறதோ அதுபோலவே இங்கும் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கூறப்படும் காரணங்கள் வேறு, நடத்தப்பட்ட நாடகங்கள் வேறு. அங்கு அது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இங்கு கலவரத்தை தடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.  எங்கும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக காட்டிக் கொண்டே அரசால் மக்களை கொன்று குவிக்க முடிகிறது, அதுவும் வேறு வழியில்லாமல்தான் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது என்று காட்டிவிட்டால் போதும், மக்களின் ஆதரவும் கிடைத்துவிடும் என்று தான் அரசுகள் எண்ணுகின்றன. அன்று மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஊர்வலம் நடத்தியவர்கள் பெண் காவலாளியை மானபங்கப் படுத்த முயன்றார்கள் என்று கூறப்பட்டது. இன்றும் காவல்துறை உயரதிகாரிகள் காயம்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. தங்கள் மீது கல்லெறி நடந்துவிட்டாலோ, காயம்பட்டுவிட்டாலோ, மக்கள் மந்தைகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என்றால் காவல்துறையை வெறிகொண்ட விலங்குகள் என்று கூறுவது எப்படி தவறாக இருக்க முடியும்? எப்போதுமே பிரச்சனையை திசை திருப்புவதே அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான உத்தியாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஜான் பாண்டியன் தியாகியா? அரசியல் தலைவரா? ரவுடியா? என்பது இங்கே பிரச்சனை அல்ல. திட்டமிட்டு மக்களை காவல்துறை படுகொலை செய்திருக்கிறது என்பதே இங்கு முதன்மையாக பேசப்பட வேண்டியது.

 

ஆனால் எந்த ஓட்டுக்கட்சியும் இது குறித்து பேச மறுக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டிருக்கிறது, துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே கலவரத்தை அடக்கியிருக்க முடியும், இழப்பீட்டுத்தொகையை இன்னும் அதிகரித்துத் தரவேண்டும்,  விசாரணைக் கமிசன் போதாது சிபிஐ விசாரணை வேண்டும். சட்டசபையில் விவாதிக்க வேண்டும், தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் இதுபோன்ற ஓலங்களைத்தான் எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் ஒச்சமிட்டுக் கொண்டிருக்கின்றன.  இன்னும் இரண்டு மாதகால முடிவில் அல்லது நீட்டப்படும் காலங்களின் முடிவில் விசாரணை அறிக்கை எப்படி இருக்கும் என்பதோ, அதன் பரிந்துரைகளுக்கு அரசு என்ன மதிப்பளிக்கும் என்பதோ யாருக்குமே தெரியாத ஒன்றல்ல.  கயர்லாஞ்சிகளும், திண்ணியங்களும், இரட்டைக் குவளைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்கள் சிறு அளவில் எதிர்ப்பைக் காட்டினாலும் இது தான் நடக்கும் என்று அரசு துப்பாக்கியை உயர்த்திக் காட்டுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இன்னும் எத்தனை காலம்தான் இந்த ஓட்டுக் கட்சிகளின் ஒட்டப்பட்ட வாலாக இருப்பது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் முடிவு செய்தாக வேண்டிய காலம் இது.

http://senkodi.wordpress.com/2011/09/16/paramakudi/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது