Language Selection

புதிய கலாச்சாரம் 2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாமல் அவசரமாக தலையிட்டு சட்டம் இயற்றித் தடுத்த இந்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்கும் கொடுத்தது. தற்போது போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றதைப் போல நடிப்பவர்கள் அனைவரும் இப்படியொரு தீர்ப்பை வரவழைப்பதற்காகத்தான் எல்லா முனைகளிலிருந்தும் காய் நகர்த்தினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, உச்சநீதி மன்றம் ஆகிய அனைவரும் இணைந்து நடத்திய நாடகத்தின் முடிவுதான் 26 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு.

1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிரோக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. போபாலைப் போலவே இதிலும் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத்தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று போபாலைப் போலவே ஒரு துயரமாக முடிந்தது.

ஆண்டர்சனை அன்று சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைத்தது முதல் வழக்கைச் சீர்குலைத்தது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பின்புலமாக இருந்த காரணமும், இன்று கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவுடனும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனும் மன்மோகன் சிங்கை குலுக்குவதற்கான காரணமும் வேறு வேறல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாகவும், தெற்காசியப் பிராந்திய வல்லரசாகவும் நிலைபெறத் துடிக்கும் இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவத்தினுடைய வெறியின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள். 1983 இலிருந்து தில்லியில் 9 அரசுகள் மாறிமாறி வந்திருந்த போதும், ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கைதான் எல்லா அரசுகளையும் வழிநடத்தி வருகிறதென்று ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருப்பதை, போபால் படுகொலைக்கும் பொருத்தலாம். யூனியன் கார்பைடு நிறுவனத்தை விடுவிப்பதிலும் கூட 9 அரசுகளும் ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றன. இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிணங்கள் இந்திய அரசின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது போலவே, யூனியன் கார்பைடுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் முடித்துக் கொள்வதன் மூலம் அமெரிக்க முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கலாமென்று ஆலோசனை அளித்த ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோரின் குற்றமும் இப்போது அம்பலமாகியிருக்கின்றது.

தமது சுரண்டல் ஆதிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களில் சுமார் 25,000 பேரின் உயிரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் காணிக்கையாகச் செலுத்துவதற்கும் தயங்காத இந்திய ஆளும் வர்க்கத்தின் இரக்கமின்மைக்கும், இலங்கையின் மீது தனது விரிவாதிக்கக் கால்களைப் பதிப்பதற்காக முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்நின்று நடத்திய அதன் கொலைவெறிக்கும் நேரடித் தொடர்பு இல்லையா என்ன? போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வெவ்வேறு பொருட்கள் என்பது உண்மைதான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.