Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சோவியத் யூனியனைப் பார்த்து தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்து கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.

எதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்ககப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.

விரைவில் தலைநகரை கைப்பற்றி லெனினைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் ரசியாவை பங்கு போட்டுத் கொள்வதைப் பற்றி பகிரங்கமாக பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.

இந்த அபாயகரமான சூழலில் லெனினுடைய முழக்கம் கணீரென எழுந்தது. சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்க படையில் சேருங்கள்.

எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று ரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.

உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெற பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள் போர்க்கப்பல்கள் முதலியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் தோழர் லெனின்.