Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
காங்கிரசையும் பா.ஜ.க.வையும் புறக்கணித்து விட்டு, மதச்சார்பற்ற மூன்றாவது அணி கட்டப் போவதாக கூறி வருகிறார், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களின் பண்டிகைகள்  விழாக்களில் ஊக்கமாகப் பங்கேற்று, கூடிக் குலாவி வாழ்த்து தெரிவிப்பது  மத நல்லிணக்கத்தைப் பேணுவது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் கற்பித்துக் கொண்டுள்ளன.
 இதன்படியே, தமிழகமெங்கும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள், இந்துமத ஆயுதபூஜை பண்டிகையை நீண்டகாலமாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றன. சி.பி.எம். கட்சியின் சி.ஐ.டி.யு.வை விட முற்போக்கான சங்கமாகக் காட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் கோவில்பட்டி நகரக் கிளை, இவ்வாண்டு இந்துமத விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சீரும் சிறப்போடும் கொண்டாடி, பூசைகள் நடத்தி மக்களுக்கு கொழுக்கட்டை வழங்கியிருக்கிறது. இது அச்சங்கத்தின் 13வது ஆண்டு விழாவாம். இதற்காக பேருந்து நிறுத்தத்தில் அலங்கார வளைவு அமைத்து அசத்தி விட்டார்கள். 
விநாயகர் சதுர்த்தியை வைத்துத்தான் அன்றைய திலகர் முதல் இன்றைய ஆர்.எஸ்.எஸ்.  இந்து முன்னணி கும்பல்கள் வரையான பார்ப்பனபாசிஸ்டுகள் அரசியல் பண்ணுவதையும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தி இரத்தம் குடிக்கும் வெறியாட்டங்களில் ஈடுபடுவதையும் தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால், போலி கம்யூனிஸ்டுகளுக்கு விநாயகர் சதுர்த்தி என்பது மக்கள் திருவிழாவாம்; பண்டிகையாம்! எனவே, மக்களோடு ஐக்கியப்பட்டு தாங்களும் விழா நடத்தி "புரட்சி' செய்கிறார்களாம்! இப்படித்தான் அன்றைய வலது கம்யூனிஸ்டுத் தலைவரான கல்யாண சுந்தரம், சிறீரங்கம் கோயில் தேர் இழுத்து "மக்களோடு ஐக்கியப்பட்டு புரட்சி' செய்தார். அந்த வழியில், ஏ.ஐ.டி.யு.சி. சங்கமும் அடுத்துவரும் ஆண்டுகளில் இந்து முன்னணிக்குப் போட்டியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை செங்கொடியேந்தி நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.