Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடலூரில், பெண்களுக்காக இயங்கும் ஒரே கல்லூரியாக, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி உள்ளது. தொன்மை வாய்ந்த இக்கல்லூரியில் தொடக்கத்தில் 400500 பேராக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, தற்போது 2000 பேராக உயர்ந்துள்ளது. இதற்கேற்ப இக்கல்லூரியில் அடிப்படை வசதி மற்றும் போதிய அளவுக்குப் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இல்லை. இதுபற்றி மாணவிகளும், ஆசிரியர்களும் கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட்டு, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவ்வப்போது போராடியும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


மேலும், இக்கல்லூரியில் சேரும் மாணவிகளிடம் கட்டாய நன்கொடை பெறுவதோடு, மேசைநாற்காலி என அன்பளிப்புகளைத் தரச் சொல்லி கல்லூரி முதல்வர் வள்ளி கொட்டமடித்து வந்தார். சாதியத் திமிர் பிடித்த இவர், தாழ்த்தப்பட்ட பிற்பட்ட மாணவிகளை இழிவுபடுத்துவதோடு, தன்னை செட்டிநாட்டு ஜமீன் பரம்பரை என்றும், "அண்ணன்' மு.க. அழகிரிக்கு நெருக்கமானவர் என்றும், தன்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் கொக்கரித்துக் கொண்டிருந்தார்.


இந்நிலையில், இவ்வாண்டு மாணவர் சேர்க்கையின் போதும் முதல்வர் வள்ளி தனது அடாவடி வசூல் வேட்டையைத் தொடங்கியதும், இவரைப் பணிநீக்கம் செய்யக் கோரியும், அடிப்படை வசதி மற்றும் பேராசிரியர்களை நியமிக்கக் கோரியும் மாணவிகளும் சில பேராசிரியர்களும் போராட முனைந்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த முதல்வர் வள்ளி, தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஐயப்பன் மற்றும் அடியாட்களைக் கொண்டு மிரட்டிப் போராட்டத்தை ஒடுக்க முயன்றார்.


இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மாணவிகளும் ஆசிரியைகளும் உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் என போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவாகத் துணைநின்ற புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, இந்நியாயமான போராட்டத்தை மக்களிடம் விளக்கிப் பிரச்சாரம் செய்ததோடு, முதல்வர் வள்ளியின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தி சுவரொட்டி பிரச்சார இயக்கத்தையும் மேற்கொண்டது. போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல, போராடும் மாணவிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அளித்து ஊக்கப்படுத்தியது.


பு.மா.இ.மு.வின் வழிகாட்டுதலின்படி, கடந்த 14.7.08 அன்று 500க்கும் மேற்பட்ட மாணவிகள் அணிதிரண்டு கடலூர்விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். மாணவிகளின் போர்க்குணமிக்க இப்போராட்டத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு பொதுமக்கள் பெருந்திரளாகக் குழுமினர். அரண்டுபோன போலீசும் கல்லூரி நிர்வாகமும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக வாக்களித்து, முதல்வர் வள்ளிக்கு இரண்டு மாத காலத்துக்குக் கட்டாய விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது.


ஐக்கியப்பட்ட, போர்க்குணமிக்கப் போராட்டத்தால் மட்டுமே கல்விக் கொள்ளையர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ள மாணவிகள், இம்முதற்கட்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள, அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.


— புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,


கடலூர்.