Language Selection

புதிய கலாச்சாரம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குற்றவாளி
தனது குற்றத்தை உணர்ந்து
குமைய வைக்கும் கண்ணீர்...
மனங்களிடையேயான
அகழிகளை நிரப்பும்
பாதிக்கப்பட்டவர்களின்
பரிசுத்தமான கண்ணீர்...
என்ன இருந்தாலும்
மேன்மக்கள் மேன்மக்களே!


ஆனால்,
கேவலம்
அவ்வாறு
கண்ணீர் சிந்திக் கதறியழும்
வாய்ப்பையேனும்
என்றைக்காவது
எமக்கு வழங்கியிருக்கிறீர்களா
எசமானர்களே....?


தகப்பன் பாசம் கூட
சீமாட்டிகளுக்குத்தான்
சொந்தமோ?
மணிப்பூரின் தாய்மார்கள்
மன்மோகன் சிங்கை சந்திக்கவும்,
நரோடா பாட்டியாவின்
இசுலாமியக் குழந்தைகள்
மோடியைக் கண்டு முறையிடவும்...
முறையிட அல்ல,
மனுக் கொடுப்பதேனும் சாத்தியமா?
இவற்றுக்கும்
உளவுத்துறை
உறுதுணையாய் வருமா?


சீமாட்டிகளின்
பொழுதுபோக்குகளில்
சுவாரசியத்திற்குப்
பஞ்சமில்லை.
அதனால்தான்
அடுத்த சில நாட்களில்
அரைமணி நேரத்திற்கு
ஒரு விவசாயி
தற்கொலை செய்து கொள்ளும்
இழவு நாட்டில்,
சற்றும் துணுக்குறாமல் நடைபெறும்
வக்கிரக் கொண்டாட்டத்தில்
அம்மையார் பிரசன்னமானார்.


வேலூர் சிறை "த்ரில்'
அலுத்துப் போயிருக்கலாம்.
ஷாருக்கானின் அருகாமையில்
புதிய "த்ரில்'
தேவைப்பட்டிருக்கலாம்.
அல்லது
அங்கும் கூட
அன்பிற்குரிய
அப்பா தென்பட்டிருக்கலாம்.
21ஆம் நூற்றாண்டுக்கு
இந்தியாவை அழைத்துச் செல்லும்
ராஜீவின் கனவு
2020இல் தானே நிறைவேறுகிறது...


ஆனால்,
பிரியத்திற்கிடமற்ற
பிரியங்கா அம்மையாரே...
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்...
தண்ணீரை விட மட்டுல்ல,
கண்ணீரை விடவும்
இரத்தம் அடர்த்தியானது.


· பால்ராஜ்