Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியதைத் தொடர்ந்து சில "விரும்பத்தகாத' துணை விளைவுகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தீட்சிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மார்ச் 2 போராட்டத்தின் வெற்றிக்குப் பின் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையேறிப் பாடிவிட்டு இறங்கும்போது, அங்கே கூடியிருக்கும் பல பக்தர்கள் அவரை வணங்கி அவரிடமிருந்து திருநீறும் வாங்குகிறார்கள்.


தீட்சிதர்களால் பக்தர்களைத் தடுக்கவும் முடியவில்லை; ஆறுமுகசாமிக்கு பக்தர்கள் வழங்கும் இந்த மரியாதையைச் சகிக்கவும் முடியவில்லை. எனவே, புழுங்குகிறார்கள். தங்களது "ஏரியாவுக்குள்' அத்து மீறி நுழைந்த ஒருவன் தங்களுக்கு மட்டுமே உரித்தான திருநீறு வழங்கும் "அத்தாரிட்டி'யையும் பறித்துக் கொண்டுவிட்டதை எண்ணி வயிறு வெந்து துடிக்கிறார்கள்.


தமிழுக்கும் தமிழர் உரிமைக்கும் தம்மையே வாளும் கேடயமுமாக நியமித்துக் கொண்டுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும்கூட தீட்சிதர்களைப் போலவே தீராத சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏப்ரல் 2008 ""தமிழர் கண்ணோட்டம்'' இதழில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது.


""இந்திய தேசியர்களும், மறைமுகப் பார்ப்பனீயர்களும், துக்ளக் சோ வுக்கு இணையான சூழ்ச்சிக்காரர்களுமான ம.க.இ.க.வினர், தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்று விட்டார்களே, இந்த "விபரீதம்' நேர்ந்தது எப்படி?'' என்ற கேள்விக்கு விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம்.


""சிதம்பரம் நகரில் தமது அமைப்பின் கிளை கூட இல்லாதவர்கள், "நம்ம ஏரியாவில்' (இரண்டு பொருளிலும்) நுழைந்து கொடி நாட்டியிருக்கிறார்களே, த.தே.பொ.க.வின் சிதம்பரம் நகரக்கிளை என்ன செய்து கொண்டிருந்தது?'' என்ற கேள்விக்குத் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம்.


இந்தக் கேள்விகளை அவர்களது வாசகர்கள் எழுப்பினார்களா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவ்வாறு எழுப்பக்கூடுமென்று அஞ்சி, அத்தகைய கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்கு கட்டுரையாளர் செய்திருக்கும் தந்திரங்கள் மட்டும் அந்தக் கட்டுரை முழுவதும் துலக்கமாகத் தெரிகிறது.


"இது ஒன்றும் பெரிய வெற்றி அல்ல' என்று காட்டவேண்டும். ஆனால் வெளிப்படையாக அப்படி எழுதிவிடக்கூடாது. ம.க.இ.க.வின் பங்களிப்பை பெருந்தன்மையுடன் அங்கீகரிப்பது போலத் தெரிய வேண்டும். ஆனால் இதனை அவர்கள் மட்டும் சாதித்து விடவில்லை என்று வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும். "நாங்கள்தான் செய்தோம்' என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர்களைப் போல ஒரே வரியில் பச்சையாகப் போஸ்டர் அடித்து ஒட்டி மாட்டிக் கொள்ளக்கூடாது. அதே விசயத்தைக் கரைத்து நான்கு பக்கங்களாக்கி, வெளிர் பச்சையாக வெளிப்படுத்த வேண்டும். இப்படியொரு இலக்கணத்தை மனதில் வகுத்துக் கொண்டு, அது வெளித் தெரிந்துவிடாமல் இந்தச் சொல்லோவியத்தைத் தீட்டப் பெரிதும் முயன்றிருக்கிறார் கி.வெ.


""சிற்றம்பலத்தில் தமிழ் பாடுவதற்கான போராட்டம் 1987இலேயே துவங்கி விட்டது. உலகறிந்த தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய அப்போராட்டத்தில் தமிழ் காப்பணியின் தலைவர் மெய்யப்பனாரும் பங்கேற்றார். அமைச்சர் இராம.வீரப்பன் தலையிட்டுச் சமரசம் செய்தார். வேறு வழியின்றி, காலப்பூசையின் முடிவில் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடப்படும் என்று தீட்சிதர்கள் ஒத்துக் கொண்டு கையொப்பமிட்டனர். ஆயினும் நம்முடைய தமிழறிஞர்கள் கவனக் குறைவாகவோ அல்லது அதற்கு மேல் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலைமையின் காரணமாகவோ யார் பாடுவது என்பது குறித்து வலியுறுத்தாமல் விட்டு விட்டார்கள்.''


""ஆயினும் இது மகத்தான முதல் கட்ட வெற்றி. இதற்குப் பிறகுதான் காலையில் பூசை முடிந்த பிறகு தீட்சிதர்களில் ஒருவர் சிற்றம்பல மேடையில் நடராசர் திருமுன் பக்தர்கள் அனைவரின் காதில் விழும்படியாக தேவாரம் பாடுவது நடைபெற்றது'' என்று வரலாற்றை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறார் கி.வெ.

 
தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டத்தின் வரலாறு 1987இல் அல்ல, வள்ளலார் காலத்திலும் அதற்குமுன் நந்தன் காலத்திலுமே துவங்கிவிட்டது. அந்த வரலாற்றுக் காலத்தில் த.தே.பொ.க.வும் இல்லை, ம.க.இ.க.வும் இல்லை என்பதால் அந்த வரலாற்றை கி.வெ. நினைவு கூரவில்லை போலும்!


""மார்ச் 2 போராட்டம் என்பது இரண்டாம் கட்ட வெற்றி மட்டுமே. மாபெரும் முதல் கட்ட வெற்றியை மறந்து விடாதீர்கள்!'' என்று வாசகர்களுக்குப் பணிவுடன் சுட்டிக் காட்டுவதுதான் இந்த வரலாற்றுணர்வின் நோக்கம். ஆனால், கி.வெ. குறிப்பிடும் இந்த மகத்தான முதல் கட்ட வெற்றியை, மூன்று பக்கம் தள்ளி அடுத்த கட்டுரையின் துவக்கத்திலேயே, (அதே தமிழர் கண்ணோட்டம் இதழில்) எள்ளி நகையாடுகிறார் முனைவர் செயராமன்.


""சிற்றம்பல மேடையில் தமிழ் பாடினால் அம்பலம் தீட்டாகிவிடும் என்று மறுத்து வந்த தீட்சிதர்கள், நிலைமையைச் சமாளிக்க ஆறுகாலப் பூசைகளும் முடிந்தபிறகு தேவாரத்திலிருந்து சில வரிகளைப் பாடி, தமிழிலும் பாடப்படுவதாகக் கதை பண்ணினார்கள்'' என்று திரை கிழிக்கிறார் செயராமன்.


எது உண்மை? அனைவரின் காதில் விழும்படியாக தீட்சிதர்கள் தேவாரம் பாடியது உண்மையா, கதை பண்ணியது உண்மையா? ""நாங்க பாடிண்டுதான் இருக்கோம். நாஸ்திகாளும் நக்சலைட்டுகளும்தான் தேவையில்லாம பிரச்சினை பண்றாள்'' என்று துக்ளக் உள்ளிட்ட பல பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் தீட்சிதர்கள். அதாவது ""செயராமன் கூறுவது பொய், கி.வெ. கூறுவதுதான் உண்மை'' என்று வழிமொழிகிறார்கள் தீட்சிதர்கள். அல்லது தீட்சிதர்கள் கூறுவதை கி.வெ. வழிமொழிகிறார் என்று கொள்ளலாமா?


1987இல் தமிழறிஞர்கள் கவனக்குறைவாக கோட்டை விட்டுவிட்டார்களாம்! ""தேவாரம் பாடமாட்டோம். அப்படியே பாடினாலும் நாங்கள்தான் பாடுவோம். நீங்கள் பாடக்கூடாது'' என்று தீட்சிதர்கள் கூறியதன் உட்பொருள் உலகறிந்த தமிழறிஞர்களுக்கு உரைக்கவில்லை போலும்! "சூத்திரனைப் பாட விட மாட்டோம்' என்று தீட்சிதர்கள் கூறியதை அன்று ஏற்றுக் கொண்டது அவமானகரமான ஒரு சமரசம். ""தமிழுக்குத் தடையில்லை, நாங்க பாடிண்டுதான் இருக்கோம்'' என்று சொல்லித் தமிழனுக்குத் தடை விதிக்கவும், தங்களது தீண்டாமை ஆதிக்கத்தை நியாயப்படுத்தவும் அந்தச் சமரசம்தான் இந்தக் கணம் வரை தீட்சிதர்களுக்கு ஒரு கருவியாகப் பயன்பட்டு வருகிறது.


1987 முயற்சியை அலட்சியப் படுத்துவது நமது நோக்கமல்ல. ஆனால் மார்ச் 2 போராட்டத்தின் வெற்றி, ஏற்கெனவே செய்த தவறைப் பரிசீலிப்பதற்குப் பயன்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பரிசீலிப்பதுதான் தமிழினம் முன்னேறுவதற்கான வழி. ஆனால் மார்ச் 2 போராட்டத்தின் மீது வெள்ளையடிப்பதற்கான வழியை அல்லவா தேடுகிறார் கி.வெ.!


கி.வெ.யின் கருத்துப்படி 1987இல் தமிழ் மீதான தீண்டாமையை அகற்றியது முதல் கட்ட வெற்றி. 2008இல் தமிழன் மீதான தீண்டாமையை அகற்றியது இரண்டாம் கட்ட வெற்றி. தாடிக்கொரு சீயக்காய்; தலைக்குத் தனி சீயக்காய்! கி.வெ.யின் கண்ணோட்டத்தின்படி உலகறிந்த தமிழறிஞர்கள் தமிழ் மீதான தீண்டாமையை ஏற்கெனவே ஒழித்துவிட்டார்கள். தமிழன் மீதான தீண்டாமை மட்டுமே எஞ்சியிருந்தது. அதை அகற்ற 1999இல் ஆறுமுகசாமி வருகிறார்.


""ஆறுமுகசாமி தாக்கப்பட்டபோது அதனைக் கண்டித்து ஒரு அமைப்பு என்ற வகையில் இப்பிரச்சினையை மக்களிடையே தமிழ் காப்பணி முதன் முதலாக எடுத்துச் சென்றது'' என்று தன் கட்டுரையில் கி.வெ. குறிப்பிடுகிறார். அதாவது, இரண்டாம் கட்டப் போராட்டத்தையும் த.தே.பொ.க தான் துவக்கி வைத்திருக்கிறது.
அம்மட்டோ! அதன்பின் ""உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடத்த ஆறுமுகசாமியை வழக்குரைஞர் ராஜுவுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் நான்தான்'' என்றும் போகிற போக்கில் சொல்லி வைக்கிறார். இப்படியாக, தொடர் ஓட்டத்தின் கடைசி சுற்றில் ஓடும் பொருட்டு ம.க.இ.க.வினரிடம் "கட்டை' ஒப்படைக்கப்பட்டது என்று இந்தச் சொல்லோவியத்தைப் புரிந்து கொள்ளலாம்.


(தன்னை ராஜுவிடம் அனுப்பி வைத்தவர் கடலூர் வழக்குரைஞர் நடராசன்தான் என்பதை கடந்த மார்ச் 29 அன்று சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆறுமுகசாமி குறிப்பிட்டார். ராஜுவும் இதனை உறுதி செய்தார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த "வரலாற்று உண்மையை' நிறுவ இதற்கு மேல் வேறு ஆவணச் சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை)


இவையெல்லாம் மறுப்புரை எழுதும் தரத்துக்குக் கீழான வைகோ சமாச்சாரங்கள். சேதுக்கால்வாய்க்கு எதிராக ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிய தருணத்தில், ""நான்தான் சேதுக்கால்வாய் பற்றி நாடாளுமன்றத்தில் முதன்முதலில் பேசினேன்'' என்று தமிழ் மக்களின் காதில் கத்திக் கொண்டிருந்தார் வைகோ. ""அப்படியானால் ஜெயலலிதாவை ஏன் கண்டிக்க மறுக்கிறாய்?'' என்று மக்கள் கேட்பார்களே என்பது கூட அவருக்கு உரைக்கவில்லை. "உரைக்காது' என்பதுதான் இந்த மனோபாவத்தின் தனிச்சிறப்பான குணாம்சம்!


ஒரு போராட்டம் வெற்றி பெற்றபின், ""நாங்கள்தான் முதலில் துண்டறிக்கை போட்டோம், நான்தான் அறிமுகப்படுத்தினேன்'' என்றெல்லாம் வலிந்து எழுதித் தமது பாத்தியதையைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவல நிலை எதற்கு? தொடங்கியவர்களே முடித்து வைத்திருக்கலாமே! முழுவெற்றிக்கும் உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பைத் "தியாகம்' செய்துவிட்டு, இப்போது அந்தத் தியாகத்தை இப்படிச் சந்து பொந்துகளில் புகுந்து பதிவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஏன் ஆளாகவேண்டும்?


""தமிழுக்காக நடந்த இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியை ஏன் காணவில்லை?'' என்று யாராவது கேட்டார்களா, அல்லது கேட்கக்கூடும் என்று கி.வெ அஞ்சினாரா, தெரியவில்லை. ""ம.க.இ.க.வுடன் இணைந்து செயல்பட முடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இணையான இயக்கங்களை நடத்தி வந்ததாக''க் கூறி மடையடைக்கிறார்.


மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; வி.வி.மு. ஆகிய எமது அமைப்புகள் முன்நின்று செயல்பட்டன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.எஸ், பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், வி.எம்.எஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்டச் செயலர் காவியச்செல்வன், தி.க, கடலூர் தமிழ்ச்சங்கம் முதலானோர் தொடர்ந்து இணைந்து இயங்கி வந்திருக்கின்றனர். இவர்கள் யாருக்கும் இணைந்து இயங்க முடியாத சூழல் எற்படவில்லை.


அப்படியொரு சூழல் மார்க்சிஸ்டு கட்சிக்குத்தான் முதலில் ஏற்பட்டது. தீட்சிதர்களைப் "பார்ப்பனர்கள்' எனக் குறிப்பிடுவதை ஆட்சேபித்து அவர்கள் வெளியேறினார்கள். அது அவர்களுக்குத் தலையாய கொள்கைப் பிரச்சினை. அவர்களது பார்ப்பன பாசத்தை நாடறியும். த.தே.பொ.க. வுக்கும், தமிழ் காப்பணிக்கும் என்ன பிரச்சினை? அவர்களுக்கும் அதுவேதான் பிரச்சினை.


இந்து அறநிலையத்துறை இணை ஆணையரும் முன்சீப் நீதிமன்றமும் தீட்சிதர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து 2006ஆம் ஆண்டு இப்பிரச்சினை தொடர்பான இயக்கம் தீவிரமடைந்திருந்த சூழ்நிலையில், தமிழ் காப்பணியில் இயங்கும் இராம. ஆதிமூலம், ""சிதம்பரம் நகர தமிழ்ப் பேரவை'' சார்பில் ""சேக்கிழார் செந்தமிழ் விழா'' நடத்தினார். அந்த விழாவில் ஆசியுரையும் அருளுரையும் வழங்க தீட்சிதப் பார்ப்பனர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த அருவெறுக்கத்தக்க நடவடிக்கையை அம்பலப்படுத்தி 28.7.2006 அன்று எமது அமைப்பின் சார்பில் அந்தக் கூட்டத்திலேயே துண்டறிக்கை விநியோகித்தோம். தமிழையும் தமிழரையும் தீண்டத்தகாதவரென இழிவுபடுத்தும் தீட்சிதப் பார்ப்பனர்களை கொலுவேற்றிக் கொண்டாடும் இந்த வீடணத்தனத்தை எம்முடன் போராடிய அனைவருமே கண்டித்தனர். தீட்சிதர்களுடனும் ம.க.இ.க.வுடனும் ஒரே நேரத்தில் இணைந்து இயங்க முடியாமல் போன அந்தச் சூழல் இதுதான்.


இந்தத் தவறு குறித்து தமிழர் கண்ணோட்டம் தன்னாய்வு எதையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு, த.தே.பொ.க. மற்றும் தமிழ் காப்பணியினர் சிதம்பரத்தில் அவசரம் அவசரமாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தினர். கடந்த நான்கு ஆண்டுகளில் இவர்கள் நடத்திய இந்தப் பொதுக்கூட்டம் ஒன்றுதான் கி.வெ. குறிப்பிடும் இணையான இயக்கம் போலும்!


இணையான இயக்கமோ, துணையான இயக்கமோ, இயக்கம் என்பதன் நோக்கம் என்ன? செயல் தானே? ""சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடலாம்'' என்று 30.4.2007 அன்று அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவு வந்து விட்டது. ஆனால் ஆறுமுகசாமியும் அவர்களுடைய ஆட்களும் சிற்றம்பல மேடையேறுவதற்கு முன்சீப் நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தடை வாங்கி வைத்திருந்தனர். அதைக்காட்டிப் பாடச்சென்ற அவரையும் உடன் சென்ற தோழர்களையும் கைது செய்தது போலீசு.

 
ஆறுமுகசாமியைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் தடை இல்லை. 8.6.2007 அன்றுதான் ஆணையரின் உத்தரவுக்கு உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கினார்கள் தீட்சிதர்கள். இந்த இடைப்பட்ட ஒரு மாதத்தில் த.தே.பொ.க.வினரோ, தமிழ் காப்பணியினரோ சிற்றம்பல மேடையேறிப் பாடியிருக்கலாமே! இணையான இயக்கம் என்பதில் இத்தகைய நடவடிக்கைகள் சேராதோ!


மார்ச் 2ஆம் தேதி போராட்டத்தன்று நடந்ததென்ன? அன்று கோயில் வாசலில் தோழர்கள் மீது மூர்க்கத்தனமாகத் தடியடி நடத்தி அனைவரையும் கைது செய்தது போலீசு. அதன்பின் நந்தன் நுழைந்த தெற்குவாயிலில், நந்தனைப் போலவே அநாதையாக அமர்ந்திருந்தார் ஆறுமுகசாமி. "இணையாக' இயக்கம் எடுத்தவர்கள் யாரும் அவருக்குத் துணை வரவில்லை. மறுநாள் மாலை வரை தோழர்களின் போராட்டம் நீதிமன்றத்தில் தொடர்ந்தது. சிற்றம்பல மேடையோ தமிழனுக்காகக் காத்திருந்தது. 4ஆம் தேதி வரை யாரையும் காணோம். இந்த மானக்கேடான நிலைமையைச் சகிக்க முடியாமல்தான், இறை நம்பிக்கையில்லாத தோழர்களை 5ஆம் தேதியன்று காலை சிற்றம்பல மேடைக்கு அனுப்பினோம்.


இதனைக் கி.வெ எப்படி எழுதுகிறார்? ""தமிழில் வழிபாடு நடத்த வருபவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 4ம் தேதியன்று தமிழக அரசு உறுதியாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து 5.3.08 அன்று ம.க.இ.க. தோழர்கள் 5 பேர் காவல்துறை பாதுகாப்போடு சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி அரசாணைப்படி உள்ள வழிபாட்டு உரிமையை நிலைநாட்டினர்''. ஏதோ ம.க.இ.க. தோழர்கள் தீட்சிதர்களுக்குப் பயந்து கொண்டிருந்ததைப் போலவும், அரசு அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, தைரியம் பெற்று போலீசு பாதுகாப்புடன் பாடச் சென்றதைப் போலவும் நைச்சியமாகச் சித்தரிக்கிறார் கி.வெ.


போராட்டம் வெற்றி பெற்ற பின்னரும் தாங்கள் நடத்திய இணையான இயக்கத்தை அவர் விவரிக்கிறார். பக்தர்கள் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் செயல்படுத்தும் தேவை எழுந்ததாம். உடனே த.தே.பொ.க. சார்பில் 11.3.2008 அன்று காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீட்சிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். 12.3.08 முதல் நாள்தோறும் காலையில் 7.30 முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி வழிபடலாம் எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்படிக்கையானதாம். த.தே.பொ.க. நகரச் செயலாளரும் பட்டு தீட்சிதரும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்து போட்டார்களாம். இதனைத் தொடர்ந்து 12 முதல் 15ஆம் தேதி வரை சிவனடியார்கள் போலீசு பாதுகாப்போடு கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம் திருவாசகம் பாடினார்களாம்!


இதை மானக்கேடு என்பதா, பச்சைத் துரோகம் என்பதா? ஆறு காலப் பூசைகள் முடிந்த பின்னரும் அடுத்த அரை மணி நேரம் பக்தர்கள் தேவாரம் பாடலாம் என்பது தீட்சிதர்கள் மீது அரசாங்கம் போட்டிருக்கும் ஆணை. இதை தீட்சிதர்கள் தடுத்தால் எதிர்த்து மோதவேண்டும். அல்லது அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்ப வேண்டும். இரண்டுக்கும் தெம்பில்லாத பட்சத்தில் சும்மாயிருக்க வேண்டும்.


இணையான இயக்கம் நடத்தியவர்களால் எப்படி சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமுடியும்? இந்த வரலாற்று நிகழ்வில் தங்களது முத்திரையைப் பதிக்கவேண்டாமா? எந்தத் திருடன் மீது அரசு ஆணை போட்டதோ, அந்தத் திருடனுடனேயே பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் கோயிலின் மீது தீட்சிதன் கொண்டாடும் உரிமையை இவர்கள் புதுப்பித்துத் தந்திருக்கிறார்கள். ""ஆறுகாலமும் பாடலாம்'' என்ற அரசாணையை ""காலையில் மட்டும் பாடலாம்'' என்று பேசி முடித்திருக்கிறார்கள். அதாவது, நாம் போராடிப் பெற்ற உரிமையை அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, ஆறில் ஒரு பங்காக வெட்டியிருக்கிறார்கள்.


பிறகு போலீசு பாதுகாப்புடன் "கம்பீரமாக' வழிபட்டார்களாம்! மார்ச் 5ஆம் தேதி பாடத்தெரியாமல் பாடிய ம.க.இ.க.காரர்களைப் போல அல்லாமல், "தெளிந்த இசை'யுடன் தேவாரம் பாடினார்களாம்!


இதனை "மகத்தான மூன்றாம் கட்டவெற்றி' என்று கி.வெ. குறிப்பிட்டிருக்க வேண்டும். தன்னடக்கம் கருதித் தவிர்த்து விட்டார் போலும்! தமிழ் மக்களுக்கு த.தே.பொ.க. பெற்றுத் தரக்கூடிய "நான்காம் கட்ட வெற்றி' எப்படி இருக்கும் என்று நினைக்கும்போதே நெஞ்சு நடுங்குகிறது! மறுபடியும் நந்தன் விட்ட இடத்திலிருந்து நாம் தொடங்க வேண்டியிருக்குமோ?


· தொரட்டி

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது