Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

july_2007.jpg

உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு எனக் கூறப்படும் இந்தியாவை, உணவுப் பொருளுக்குக் கையேந்தும் நாடாக மாற்றும் சதி மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது. உணவுப் பொருள் இறக்குமதி; அரசாங்கம் நேரடியாக உணவுப் பொருளைக் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, அந்தப் பொறுப்பைத் தனியாரிடம்

 ஒப்படைப்பது; பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பப்படி இந்திய உணவுக் கழகத்தை மறுசீரமைப்பது; ரேசன் அட்டைகளுக்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பதைப் போல உணவு வில்லைகளை வழங்குவது என இந்தச் சதிக்குப் பல முகங்கள் உள்ளன.

 

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், மக்களின் தேவையைக் கருதி கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக மைய அரசு அறிவித்திருக்கிறது. கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்ததைக் காரணமாகக் காட்டி, கடந்த ஆண்டு 55 இலட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டோ கோதுமை விளைச்சல் அமோகமாக இருந்தும், ""எதிர்பார்த்த அளவிற்கு அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்ய முடியவில்லை'' என்ற பச்சைப் பொய்யைச் சொல்லி, 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள மைய அரசு திட்டம் போட்டுள்ளது.

 

இந்த ஆண்டு கோதுமை விளச்சல் 7.35 கோடி டன்னை எட்டிப் பிடித்திருக்கிறது. இது, கடந்த ஆண்டு விளைச்சலை ஒப்பிடும் பொழுது 40 இலட்சம் டன் அதிகமாகும். ""இப்படி விளைச்சல் அமோகமாக இருக்கும் நேரத்தில், அரசு அதிகபட்சமாக 2.2 கோடி டன் அளவிற்குக் கொள்முதல் செய்து, அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் வீழ்ந்தால் கூட, உணவுப் பொருள் விநியோகத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலையை உருவாக்கி இருக்கலாம். மாறாக, மைய அரசோ, தானே நிர்ணயித்துக் கொண்ட குறைந்தபட்ச அளவை (1.51 கோடி டன்) ஈடு செய்யும் வகையில் கூட கொள்முதலை நடத்தவில்லை'' என முதலாளித்துவப் பத்திரிகைகளே குற்றம் சுமத்துகின்றன. இப்படி நிர்ணயித்துக் கொண்ட அளவை விடக் குறைவாகக் கொள்முதல் செய்வதற்குத் தகுந்த வஞ்சகமான சூழலை, அரசாங்கமே உருவாக்கியது என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

 

கோதுமைக்குக் கொடுக்கும் கொள்முதல் விலையை உயர்த்தித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக் கொண்டிருக்கும் பொழுது, மைய அரசோ, ஒரு குவிண்டாலுக்கு ரூ.850/க்கு மேல் ஒரு நயாபைசா கூட உயர்த்தித் தர முடியாது என அறிவித்தது. அதேசமயம், உணவுப் பொருள் கொள்முதலில் இறங்கியுள்ள ரிலையன்ஸ், ஐ.டி.சி. போன்ற தனியார் நிறுவனங்கள் அரசு தரும் ஆதார விலைக்குக் கூடுதலாகக் கொடுத்து, கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

 

இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 900/ முதல் ரூ. 1,000/ வரை தரத் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்தன. மேலும், விவசாயிகள் அரசிடம் கோதுமையை விற்பனை செய்வதைத் தாமதப்படுத்துவதற்காக, ""இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து, அரசு கோதுமை கொள்முதல் விலையைக் கூட்டித் தர உத்தேசித்துள்ளது'' என்ற வதந்தியையும் முதலாளித்துவப் பத்திரிகைகள் மூலம் பரப்பின. கொள்முதல் விலை உயரும் என விவசாயிகள் காத்திருந்தபொழுது மைய அரசு வதந்தியை மறுத்து, கொள்முதல் விலையைக் கூட்டித் தரும் திட்டம் இல்லை என அறிவித்தது.

 

அரசாங்கமும், தனியாரும் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்திற்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தது. கோதுமையைச் சேமித்து வைக்க முடியாத விவசாயிகள் அனைவரும், அரசைவிட அதிக விலைதரும் தனியார் நிறுவனங்களிடம் விற்றனர். இதனால், அரசாங்கத்தின் கொள்முதல் குறைந்து போனது. இப்பொழுது, இந்தக் குறைவைக் காரணமாகக் காட்டி, ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்து 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சேர தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டுள்ளது, காங்கிரசு கூட்டணி ஆட்சி.

 

கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் கோதுமை ரூ. 1,000/க்கு இறக்குமதி செய்யப்பட்டது. சர்வதேச அளவில் கோதுமை விளைச்சல் வீழ்ச்சி அடைந்திருப்பதால், இந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ. 1,000/ஐ விடக் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோதுமை கொள்முதல் விலையை உள்நாட்டு விவசாயிகளுக்குக் கூட்டிக் கொடுத்தால், உணவு மானியம் எகிறி விடும்; பட்ஜெட்டில் துண்டு விழும் என சாக்கு போக்கு சொல்லும் மைய அரசு, கார்கில், ஆஸ்திரேலிய கோதுமைக் கழகம் போன்ற "பகாசூர விவசாயிகளுக்காக'' அரசு கஜானாவையே திறந்து வைக்கத் தயக்கம் காட்டவில்லை.

 

···

 

கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, இந்த கோதுமை இறக்குமதியை ஏதோ சந்தர்ப்பவசத்தால் நேர்ந்துவிட்ட விபத்து போலக் காட்டிவிட முயன்று வருகிறது, மைய அரசு. ஆனால், இந்திய விவசாயத்தை மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் சதியின் ஓர் அங்கம்தான் கோதுமை இறக்குமதி என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

 

கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் ""குறைவாக'' இருந்தாலும் கூட, மைய அரசு தேவையான அளவிற்கு (1.9 கோடி டன்) கோதுமையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திருக்க முடியும். ஆனால், கொள்முதல் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, உ.பி. மாநிலத்தில் கோதுமை கொள்முதல் ஏனோதானோவென்று நடத்தப்பட்டது. வழக்கமாக, குறைந்தபட்சம் 25 இலட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்படும் அம்மாநிலத்தில், கடந்த ஆண்டு வெறும் 40,000 டன் கோதுமைதான் கொள்முதல் செய்யப்பட்டது. பஞ்சாபிலும், அரியானாவிலும் கொள்முதலைக் குறைத்தால் விவசாயிகளின் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால், விவசாயிகள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத உ.பி. மாநிலம் குறி வைக்கப்பட்டது.

 

இந்திய உணவுக் கழகத்திடம் விற்பனைக்கு வந்த கோதுமையில், 60 சதவீதத்தை மட்டுமே கொள்முதல் செய்த மைய அரசு, 1 கோடி டன் கோதுமை பற்றாக்குறையாக இருப்பதாக அறிவித்தது. பிறகு, இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ கொடுத்து 5,500 கோடி ரூபாய் செலவில், 55 இலட்சம் டன் கோதுமையை கடந்த ஆண்டு இறக்குமதி செய்தது. அந்த ஆண்டு, (2006) இந்திய விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் கோதுமையை ரூ. 750க்குத்தான் மைய அரசு வாங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

5 இலட்சம் டன் கோதுமை மட்டும் இறக்குமதி செய்யப் போவதாக பிப்.2006இல் மைய அரசு அறிவித்தவுடனேயே, ""இதைவிட அதிகமாகக் கொள்முதல் செய்ய வேண்டும்'' என நிர்ப்பந்தம் கொடுத்தது, அமெரிக்கா. எங்கள் நாட்டின் கொள்கைகளை அமெரிக்காவின் உணவுக் கழகங்கள் தீர்மானிக்க முடியாது'' என வீராப்பு பேசிய மைய அரசு, அடுத்த நான்காவது மாதங்களுக்குள்ளாகவே, 47 இலட்சம் டன் கோதுமையை அமெரிக்காவில் இருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ள சம்மதித்தது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர், மைய அரசின் அமைச்சரவைச் செயலரை ஏப்.2006இல் சந்தித்த பிறகு, இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கான தரம் குறித்த விதிகள் தளர்த்தப்பட்டு, பூச்சிகளும், காளான்களும் நிறைந்த கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.

 

இந்த ஆண்டு இந்தியாவில் கோதுமை விளைச்சல் அமோகமாக இருக்கிறது என்று தெரிந்த நிலையிலும், அமெரிக்க கோதுமைக் கழகம், ""இந்தியா 30 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்'' என அறிவித்தது. இந்த அன்புக் கட்டளையை ஈடு செய்யும் வண்ணம், மைய அரசு 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

 

···

 

இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உணவுப் பொருள் கொள்முதலில் நேரடியாக ஈடுபடுவதற்கும், அவற்றைச் சேமித்து வைப்பதற்கும் ஏற்ப அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் ஏற்கெனவே பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், இந்திய உணவுக் கழகத்தையும், ரேசன் கடைகளையும் இழுத்து மூடி விடவேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். உலக வங்கியோ, ""இந்தியா, உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைவிட அந்நியச் செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து, மக்களின் தேவைகளை ஈடுகட்டலாம்; உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்'' என அறிவுரை வழங்கியிருக்கிறது.

 

இந்திய உணவுக் கழகத்தைச் சீரமைப்பது தொடர்பாக, ""அடுத்த இரண்டு ஆண்டுகளில், அந்நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் 2,300/ கோடி ரூபாயைக் குறைக்க வேண்டும்; கொள்முதல், விநியோகம் போன்ற முக்கியப் பணிகளைத் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விட்டுவிட வேண்டும்; 8,000 முதல் 10,000 தொழிலாளர்களை, விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்பி விடவேண்டும்'' என மெக்கன்ஸி என்ற அமெரிக்க நிறுவனம் மைய அரசிற்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

 

இதன்படி, இந்திய உணவுக் கழகத்தைச் சேர்ந்த 9,000 தொழிலாளர்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டு விட்டனர். விவசாயிகள் தங்களின் சுய தேவைக்கு எடுத்து வைத்துக் கொண்டது போக, சந்தைக்குக் கொண்டு வரும் கோதுமையில், 29.6 சதவீதத்தைக் கொள்முதல் செய்துவந்த மைய அரசு, 200506இல் 13.3 சதவீதம்தான் கொள்முதல் செய்திருக்கிறது.

 

200405இல் 2.47 கோடி டன் அரிசியைக் கொள்முதல் செய்த மைய அரசு, 200506இல் 2.3 கோடி டன்னாக அரிசி கொள்முதலைக் குறைத்துவிட்டது. தமிழகத்தில், மாநில அரசு அரிசி கொள்முதல் செய்வதை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் பாலாகாட் பகுதியிலும், ஒரிசாவின் அரிசி விளையும் ஐந்து மாவட்டங்களிலும் அரிசி கொள்முதல் செய்வது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

தி.மு.க. அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 2 ரூபாய் அரிசித் திட்டத்தைக் கூட, இத்தனியார்மயத்திற்கு எதிரானதாகப் பார்க்க முடியாது. இக்கவர்ச்சித் திட்டம், ஏகாதிபத்தியங்கள் புகுத்தும் மறுகாலனியாதிக்க கொள்கைக்கு ஒரு மனித முகமூடி மாட்டிவிடும் தந்திரமே தவிர வேறல்ல. இதுபோன்ற கவர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே உலகவங்கி 7,211 கோடி ரூபாயைத் தமிழகத்திற்கு ஒதுக்கியிருக்கிறது. (பார்க்க: பு.ஜ. அக். 2006)

 

உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் இருந்தும்; அதனைச் சேமித்து ரேசன் கடைகளின் மூலம் விநியோகிப்பதில் இருந்தும் அரசு இன்னும் முற்றிலும் விலகிக் கொள்ளாமல் இருப்பதால்தான், தனியார் முதலாளிகள், அரசின் கொள்முதல் விலையைவிடக் கூடுதலாகக் கொடுத்துக் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ளுமானால், உணவுப் பொருட்களின் கொள்முதல் விலையை மட்டுமல்ல, அதன் விற்பனை விலையையும் தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள். இந்தத் தனியார்மயம் விவசாயிகளுக்கு மட்டும் எதிரானதல்ல; பெரும்பாலான இந்திய மக்களின் வயிற்றில் அடிப்பதாகவும் அமையும்!


· ரஹீம்