Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

sep_2007.jpg

"கல்லூரி நிர்வாகம் "பறக்கும் படை' என்ற பெயரில் ஒரு குண்டர் படையை வைத்திருக்கிறது. போராடும் மாணவர்களை "டார்க் ரூம்' எனப்படும் கொட்டடியில் அடைத்து வைத்து ஆபாச வசவுகளுடன் காட்டுமிராண்டித்தனமாக அக்குண்டர்கள் அடிப்பார்கள்'' என்று கடந்த 2006ஆம் ஆண்டில் ஜேப்பியாரின் சத்யபாமா நிகர்நிலைப்பல்கலைகழக மாணவர்கள் முகத்தைக் கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்ததையும்,

ஜேப்பியாரின் உருட்டல்மிரட்டல்களால் மனமுடைந்த மாணவர் ராபின்வாஸ் தற்கொலை செய்து கொண்ட அவலத்தையும் தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது.

 

பல்லாயிரக் கணக்கில் பணத்தைக் கொட்டியழுது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கே இந்த கதி என்றால், இம்மாணவர்களைப் பேருந்துகளில் அழைத்துவரும் ஜேப்பியார் கல்லூரிகளின் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 

""கல்வித் தந்தை'' ,""வள்ளல்'' என்றெல்லாம் தனது எடுபிடிகளை வைத்து தனக்குத்தானே பட்டமளித்துக் கொண்டு சுய இன்பம் காணும் ஜேப்பியாரின் கல்வி நிறுவனங்களில் பேருந்து ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், கிளீனர்கள், துப்புரவுப் பணியாளர்கள், உணவு விடுதிப் பணியாளர்கள் என ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எந்த உரிமையுமற்ற அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். ஜேப்பியார் வைத்ததுதான் சட்டம்; இட்டதுதான் நீதி. காரணமே இன்றி தொழிலாளிகளை வேலையிலிருந்து நீக்குவது, கல்லூரி நுழைவாயிலில் மணிக்கணக்கில் கால்கடுக்க நிற்க வைத்து தண்டிப்பது, ரௌடியைப்போல பாய்ந்து வந்து பளாரென அறைந்து எட்டி உதைப்பது – என ஜேப்பியாரின் அட்டூழியங்களுக்கு எல்லையே கிடையாது. இரவு பகலாக உழைக்கும் இத்தொழிலாளர்களுக்கு, மாணவர்களும் ஆசிரியர்களும் சாப்பிட்டு முடித்தபின் எஞ்சியிருக்கும் உணவுதான் அரைகுறையாகத் தரப்படும். அதுவும் கூட பலருக்குக் கிடைக்காமல் பட்டினி கிடக்க நேரிடும்.

 

குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டிப் போராட எந்த ஓட்டுக்கட்சியும் முன்வரவில்லை. ஏனெனில், எல்லா ஓட்டுக்கட்சிகளுக்கும் புரவலராக இருப்பவர் ஜேப்பியார். "கேப்டன்' விஜயகாந்த் ஜேப்பியாரின் காலில் விழுகிறார். வலது கம்யூனிஸ்டுகள் ""ஜனசக்தி'' நாளேடுக்கு ஜேப்பியாரிடமிருந்து கணிப்பொறிகளை அன்பளிப்பாகப் பெறுகின்றனர். தலித்தியம் பேசும் சிவகாமி ஐ.ஏ.எஸ். கருத்தரங்கம் நடத்த, தனது கல்வி நிறுவன அரங்கத்தில் ஜேப்பியார் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பா.ம.க.வினர் மாநாடு நடத்த ஜேப்பியாரிடமிருந்து இலவச வாகன வசதி அளிக்கப்படுகிறது. இதர கட்சிகளின் மேல்மட்டங்களுக்கு உரிய முறையில் உபசரிப்புகளும் சிறப்பு செய்தலும் நடக்கின்றன.

 

எனவேதான்,வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வழிகாட்டுதலில் சங்கமாக அணிதிரளத் தொடங்கினர். பீதியடைந்த நிர்வாகம், வெற்றிவேல் செழியன் என்ற முன்னணி ஊழியரை திடீரென வேலை நீக்கம் செய்து பழிவாங்கியது. இந்த அச்சுறுத்தலைக் கண்டு சோர்வடையாமல், நம்பிக்கையோடு செயல்பட்ட தொழிலாளர்கள், அனைவரையும் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி ""புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம்'' என்ற பெயரில் சங்கத்தைப் பதிவு செய்து அதை பு.ஜ.தொ.மு.வுடன் இணைத்துக் கொண்டனர். பழிவாங்கப்பட்ட வெற்றிவேல் செழியனின் வேலை நீக்கம் சட்டப்படி செல்லாது என தொழிலாளர்துறை ஆணையரிடம் வழக்கு தொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் மூலம் கல்லூரிப் பேருந்துகளை இயக்க ஜேப்பியார் முயற்சிக்க, அதற்கெதிராக சங்கத்தின் மூலம் போராடி நீதிமன்றத் தடையாணையும் பெற்றுள்ளனர்.

 

அரண்டுபோன ஜேப்பியார், அனைத்து ஓட்டுநர்களையும் அழைத்து, ""சங்கத்திலிருந்து விலகி விடுங்கள்; உங்களுடைய எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறேன்'' என்று நைச்சியமாகப் பேசிப்பார்த்தார். சங்கத்திலிருந்து விலகிவிட்டதாக எழுதிக் கொடுத்தால் ரூ.25,000 கடன் தருவதாக அறிவித்துப் பார்த்தார். சங்கமாக அணிதிரண்டதால்தான் இந்தக் கல்விக் கொள்ளையர் இப்படி இறங்கி வருகிறார் என்பதை உணர்ந்த தொழிலாளர்கள், ஜேப்பியாரின் பசப்பல்களை உதாசீனப்படுத்தி உறுதியாக நின்றனர். பின்வாங்கிய நிர்வாகம், இப்போது சில ஆரம்ப கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது. இதைக் கண்டு உற்சாகமடைந்த ஜேப்பியாரின் செயிண்ட் ஜோசப் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஓம்சக்தி டிராவல்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர். இதுதவிர, ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலைக் கழகத்தில் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு வந்த 200க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுக்க இச்சங்கத்தில் அணிதிரண்டுள்ளனர்.

 

இதன் தொடர்ச்சியாக கடந்த 12.08.07 அன்று மாலை சத்யபாமா பல்கலைக் கழகம் முன்பாக, செம்மஞ்சேரியில், சங்கக் கொடியேற்றி அலுவலகத் திறப்பு விழாவும் பொதுக் கூட்டம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பெயருக்கேற்ப செம்மஞ்சேரி அன்று செங்கொடிகளாலும் செஞ்சட்டை அணிந்த தொழிலாளர்களாலும் பெருமிதத்தோடு குலுங்கியது. பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் பொதுச்செயலர் தோழர் சுப. தங்கராசு ஆகியோர் சங்கக் கிளைகளின் கொடியேற்ற, சங்க நிர்வாகிகள் அலுவலகம் மற்றும் பெயர்ப்பலகைகளைத் திறந்து வைக்க, அதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னணியாளர்களும் தோழமை அமைப்பினரும் வாழ்த்துரை வழங்கினர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி போராட்ட உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சியது. நாவலூர், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகிய ஊர்களின் முக்கிய பிரமுகர்களும் குறிப்பாக பஞ்சாயத்துத் தலைவர் திரு. தனசேகர், ஒப்பந்ததாரர் திரு. கருணாகரன் ஆகியோரின் பேராதாரவோடும் நடந்த இந்த இந்நிகழ்ச்சியில் திரளாக உள்ளூர் உழைக்கும் மக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பணபலம், குண்டர்பலம், சர்வகட்சி ஆதரவு என கொட்டமடிக்கும் ஜேப்பியார் கல்லூரிகளில் துணிந்து உறுதியாக நின்று தொழிற்சங்கம் நிறுவப்பட்டுள்ளதை வியந்து பாராட்டி , இன்னும் பல கல்லூரிகளின் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரளத் தொடங்கியுள்ளனர்.


ஓங்கட்டும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை!

தகவல்: புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள்
மற்றும் டெக்னீசியன்கள் சங்கம்.